இன அடையாளத்தின் வெளிப்பாடும், இனவாதமும், தவறான புரிதல்களின் விளைவுகளும்.
இனம், மதத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கட்சிகளை தடை செய்ய வேண்டுமென்ற ரவி கருனாநாயக்காவின் கருத்துக்கு வலுவான எதிர்ப்பினை வெளிப்படுத்துவதற்கு பதிலாக அதனை ஆதரிக்கின்றவர்கள் எமது சமூகத்தில் இருப்பது ஆச்சர்யமான ஒன்றல்ல.
ஏனெனில் பலஸ்தீனில் ஹமாஸ் இயக்கத்தை யூதர்களிடம் காட்டிக்கொடுக்கின்ற முஸ்லிம்களுடன் ஒப்பிடுகையில் இது ஒரு சாதாரண விடயம்தான்.
முதலில் இனவாதத்துக்கும், (Racism) இனத்தின் அடையாள வெளிப்பாட்டுக்கும் (ethnic identity) இடையிலான வேறுபாடுகள் பற்றிய சரியான புரிதல் இவ்வாறானவர்களிடம் இல்லை.
அவ்வாறு புரிதல் இருந்தாலும் முஸ்லிம் காங்கிரஸ் மீதுள்ள காழ்புணர்ச்சி இவர்களை தடுக்கிறது. அதாவது முஸ்லிம் காங்கிரசை அழிக்க வேண்டும் என்ற காரணத்தினால் இனத்தின் பெயர் தாங்கிய கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்ற சிற்றின்பமே இதற்கு காரணமாகும்.
ஒரு இனத்தின் அடையாளத்தை வெளிப்படுத்துகின்றபோது அதனை இனவாத கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறு. அவ்வாறு ஜனநாயகத்தின் அடிப்படையில் காலாதிகாலமாக இருந்துவருகின்ற இனத்தின் அடையாளத்தை திடீரென தடை செய்ய முற்படுகின்றபோது அவர்காது உள்நோக்கம் என்ன என்ற சிந்தனை எம்மிடம் இல்லாவிட்டால் நாங்கள் குறித்த இனத்தின் துரோகிகள்.
மனிதர்கள் என்றவகையில் இன்னும் சொற்ப காலத்தில் ரவுப் ஹக்கீம் உட்பட அனைவரும் மரணித்துவிடுவோம். ஆனால் எமது சமூகம் வாழும். இனவாத கட்சிகளை தடை செய்கின்றோம் என்று முதலில் ஆரம்பிப்பார்கள். பின்பு இன்னும் பல விடயங்களில் தலையிட்டு அதுவும் இனவாதம் என்று கூறிக்கொண்டு புதிய புதிய தடைகளை கொண்டுவர முற்படலாம். இது ஒரு ஆபத்தான விடயம்.
இன்று நடைபெறுவது “இனவாதம் இல்லாத ஆட்சி” என்று கூறப்பட்டாலும், அனுரகுமார திஸ்ஸநாயக்காவால் இன்னும் எவ்வளவு காலங்களுக்கு ஆட்சி செய்ய முடியும்? ஆட்சி அதிகாரமும், அரசியல் சூழ்நிலைகளும் எந்த நேரமும் மாறலாம். கோத்தபாயாவுக்கு ஐந்து வருடங்கள் ஆணை வழங்கியவர்கள் இரண்டு வருடங்களில் அவரை விரட்டியடிப்பார்கள் என்று எவரும் நினைக்கவில்லை.
முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தை தூண்டி நாட்டில் வன்முறைகளை தோற்றுவித்தவர்களும், இனவாத கருத்துக்களால் மூளைச்சலவை செய்யப்பட்டவர்களும் இன்னும் உயிருடன்தான் உள்ளார்கள். எதிர்காலங்களில் ஞானசார தேரர் அல்லது அவரது கொள்கையுடையவர் இந்த நாட்டை ஆட்சி செய்யமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது ?
மியன்மாரில் ரோஹிங்கிய முஸ்லிம்களை கொன்றுகுவிப்பதற்கு தலமை தாங்கிய விராது தேரரை மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் இலங்கைக்கு அழைத்து, அவருக்கு செங்கம்பள வரவேற்பு வழங்கி அவருடன் ஒப்பந்தம் செய்த பின்பு இலங்கை முஸ்லிம்கள் மீது ஏற்படுத்தப்பட்ட கெடுபிடிகளை நாங்கள் மறந்துவிட முடியாது.
எனவேதான் “இனவாதம்” என்பதும், ஒரு “இனத்தின் அடையாள வெளிப்பாடு” என்பதும் வெவ்வேறுபட்ட கருத்தியலைக்கொண்டது என்று உலகில் உள்ள அறிஞர்கள் விளக்கியுள்ளார்கள் என்பதனை நாங்கள் புரிந்துகொள்ளுதல் சிறந்தது.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
No comments