துப்பரவு தொழிலாளிகளையும் மதிக்க கற்றுக்கொள்ளுவோம் – அவர்களும் மனிதர்களே
துப்பரவு தொழிலாளர்கள் சமூகத்தின் மிக அடிப்படையான, ஆனால் பெரும்பாலும் புறக்கணிக்கப்படும் பணியைச் செய்து வருகின்றனர். அவர்கள் இல்லாமல் எமது வீடுகளும், தெருக்களும், நகரங்களும் சுகாதாரமற்ற சூழலாக மாறி விடும். இருப்பினும் இவர்களின் வாழ்க்கை, சமூகத்தில் பெறும் அங்கீகாரம், வாழ்வாதார நிலைமை ஆகியவை ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டும் வகையில் உள்ளன.
துப்பரவு தொழிலாளர்கள் அதிகாலை முதல் இரவு வரை குப்பைகளை சேகரித்தல், வடிகால்களை சுத்தம் செய்தல், துர்நாற்றம் வீசும் இடங்களில் உழைத்தல் போன்ற பணிகளைச் செய்கிறார்கள். இப்பணி மிகவும் கடினமானதும், உடல் நலனுக்கு ஆபத்தானதுமாகும். ஆனால் அவர்களுக்கு கிடைக்கும் சம்பளம் மிக குறைவு. பலருக்கு சுகாதார வசதிகள், பாதுகாப்பு உபகரணங்கள், நிலையான வீடுகள் போன்ற அடிப்படை உரிமைகளே இல்லை.
சமூகத்தில் இவர்களின் நிலை
அவர்கள் செய்யும் பணியைப் பெரும்பாலோர் மதிப்பதில்லை. குப்பையை எடுத்து செல்லும் போது மூக்கைப் பொத்தி, முகத்தைத் திருப்புவது வழக்கமாகியுள்ளது. அவர்களைப் பாராட்டி அங்கீகரிப்பதற்கு பதிலாக, பெரும்பாலும் சமூக புறக்கணிப்பையே சந்திக்கின்றனர். இதனால் அவர்களது குடும்பங்களும், குழந்தைகளும் மனக்குமுறலுடன் வாழ வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இவர்களுக்கான சவால்கள்
1. குறைந்த சம்பளம்
2. பாதுகாப்பு உபகரணங்களின் இல்லாமை
3. சுகாதாரச் சீர்கேடு
4. சமூகத்தில் மதிப்புக் குறைவு
5. குழந்தைகளின் கல்வியில் சிரமம்
6. உறுதியான வீடுகள் மற்றும் அடிப்படை வசதிகளின் இல்லாமை
7.பங்குபற்றுவதற்கான வாய்ப்பு இல்லை.
அவர்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்த அரசு, உள்ளூராட்சி, சமூக அமைப்புகள், பாடசாலை, தனிநபர்கள் அனைவரும் பங்களிக்க வேண்டும்.
அரசு, சம்பள உயர்வு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு சட்டங்களை அமல்படுத்த வேண்டும்.
சமூக அமைப்புகள், நிதி சேகரிப்பு, கல்வி உதவி, வீடு அமைத்தல் போன்ற பங்களிப்புகளைச் செய்யலாம்.
பாடசாலையில், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, துப்பரவு தொழிலாளர்களை மதிக்கக் கற்றுத்தர வேண்டும்.
தனிநபர்கள், அவர்களிடம் அன்பு, மரியாதை காட்ட வேண்டும்.
துப்பரவு தொழிலாளர்கள் இல்லாமல் நமது வாழ்க்கை சுகாதாரமானதாக இருக்காது. அவர்கள் நமது சுகாதார ரட்சகர்கள் என்பதால், அவர்களை மதித்து, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பொறுப்பு சமூகத்திற்கே உரியது. அவர்களை மனிதர்களாகக் கருதி மரியாதை செய்வதே உண்மையான நாகரிகத்தின் அடையாளமாகும்.
ஆக்கம்
பாரூக் எப் சுபியானி - புத்தளம் (சமாதான நீதவான், சமாதானத் தூதுவர் , மனித உரிமைகள் பாடநெறியின் புத்தளம் மாவட்ட இணைப்பாளர்)
No comments