ஈரானை அமெரிக்கா தாக்கி, கொமைனி கொல்லப்பட்டால் – அடுத்து என்ன?
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற பதட்டமான சூழ்நிலையில், ஈரானின் ஆத்மீகத் தலைவர் ஆயத்துல்லா கொமைனி அவர்கள் ரஷ்யாவுக்கு தப்பிச் செல்லத் தயாராகி வருவதாக செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
வெனிசுவேலாவின் அதிபரை கடத்திச் சென்றதற்கு பின்னர், இவ்வாறான செய்திகள் பரவத் தொடங்கியுள்ளது.
பண்டைய பாரசீகமாக (Persia) அறியப்பட்ட ஈரான், ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட எழுத்துமூல வரலாற்றை கொண்ட ஒரு பண்டைய நாடாகும். உலகை ஆட்சி செய்த முக்கிய சாம்ராஜ்யங்களான ரோம், பாரசீகம் ஆகிய இரண்டில் ஒன்றாக ஈரான் விளங்கியது. போர் என்பது ஈரானிய வரலாற்றில் இயல்பான ஒன்றாகவே இருந்து வந்துள்ளது.
வரலாற்றுக் காலம் தொடக்கம், அவர்கள் சந்திக்காத போர்கள் இல்லை. உலகின் பலம் வாய்ந்த பேரரசுகளுடன் ஈரான் மோதியுள்ளது. அந்த வகையில், உலகின் முதல் “சூப்பர் பவர்” பேரரசுகளில் ஒன்றான அகேமேனிய பேரரசு (Achaemenid Empire) காலம் தொடங்கி, கிரேக்கம், ரோம், அரபுகள், மங்கோலியர்கள், ஒட்டோமான்கள், மெசபொத்தேமியா (இன்றைய ஈராக்) ஆகிய சக்திகளுடன் நேரடியாக மோதிய வரலாறு கொண்டது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ரஷ்யாவுடன் நடந்த போர்களும், 1980 – 1988 காலப்பகுதியில் எட்டு ஆண்டுகள் நீடித்த ஈரான் – ஈராக் போரும் முக்கியமானவை. அந்தப் போரில், அமெரிக்கா, சோவியத் யூனியன் உள்ளிட்ட பல மேற்கு மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் (சிரியாவைத் தவிர) சதாம் ஹுசைனுக்கு ஆதரவளித்தன.
இத்தகைய கடுமையான சூழலிலும், ஈரான் தனித்து நின்று போரிட்டு, நாட்டை பாதுகாத்து தன் அரசியல் மற்றும் இராணுவ வலிமையை உலகிற்கு எடுத்துக் காட்டியது.
இன்றைய சூழலில், அமெரிக்காவின் நவீன விமானங்களாலும், கடற்படைக் கப்பல்களிலிருந்தும் நடத்தப்படும் தாக்குதல்களால், ஈரானின் கட்டிடங்கள் மற்றும் உட்கட்டமைப்புகளுக்கு சேதம் விளைவிக்க முடியும்.
ஆனால், ஈரானிய மக்களின் மனவலிமையை முறியடிக்கவோ, நிலப்பரப்பை கைப்பற்றவோ முடியாது. அதாவது, அமெரிக்கா தனது அரசியல் இலக்குகளை அடைய முடியாது.
தாக்குதலில் ஈரானின் ஆத்மீகத் தலைவர் கொல்லப்பட்டால், அரசியல் – மத அமைப்பின் அடிப்படையில் புதிய தலைமை நியமிக்கப்பட்டு போர் தொடரும். இதனால், ஈரானின் அடிப்படை அரசியல் கட்டமைப்பை மாற்ற முடியாது.
வெனிசுவேலாவின் ஜனாதிபதி மதுரோவை கடத்திச் சென்றிருந்தும் அவரது ஆட்சியே தொடர்கிறது என்பது ஓர் எடுத்துக்காட்டாகும்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

No comments