அல்-உலா : வரலாறும் இயற்கையும் நிறைந்த அதிசய பூமி.!
✍️ எஸ். சினீஸ் கான்
பாலைவனத்தின் அமைதிக்குள் புதைந்திருக்கும் பல ஆயிரம் ஆண்டு வரலாற்று சாட்சியாக உலகத்தின் காட்சியை தன் பக்கம் திருப்பியிருக்கும் ஒர் அற்புத நிலம்தான் அல்-உலா.
சவூதி அரேபியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள அல்-உலா தற்போது உலக சுற்றுலாத்தளத்தில் தனித்த அடையாளத்துடன் காணப்படும் ஒரு வரலாற்றுச் செல்வமாக திகழ்கிறது. பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித நாகரிகத்தின் தடங்களை தன்னகத்தே சுமந்து நிற்கும் இந்தப் பகுதி, தற்போது நவீன சுற்றுலாத்துறையின் மையமாக மாற்றப்பட்டு வருகிறது. இயற்கை அழகு, பண்டைய வரலாறு, கலாச்சாரம் மற்றும் நவீன வசதிகள் ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்து அல்-உலா உலகின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக உயர்த்தியுள்ளது.
அல்-உலாவின் மக்களின் கவனத்தை ஈர்க்கும் முக்கிய பல இடங்கள் காணப்படுகிறது. இங்கு பல நாடுகளிலிருந்து சுற்றுலாப்பயணிகள் வருகைதந்து பார்வையிட்டு வருகின்றனர்.
அவற்றில் சில முக்கிய இடங்களாக.
• ஹெக்ரா வனவிலங்கு இயற்கை அனுபவம் (Hegra Wildlife and Nature Experience)
சவூதி அரேபியாவின் அல் உலா பகுதியில் அமைந்துள்ள ஹெக்ரா (Hegra) என்பது உலகப் புகழ்பெற்ற நபதேயன் நாகரிகத்தின் சான்றுகளைக் கொண்ட, யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளமாக விளங்குகிறது. வரலாற்றுச் சிறப்புடன் மட்டுமல்லாது, இயற்கை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பையும் ஒருங்கிணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது
இந்த அனுபவம், ஹெக்ராவைச் சுற்றியுள்ள பாலைவன நிலப்பரப்பு, பாறை மலைகள், அரிய தாவரங்கள் மற்றும் பாலைவன விலங்குகளை பாதுகாக்கும் நோக்குடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய நபதேயன் கல்லறைகள், பாறைச் செதுக்கல்கள் ஆகியவற்றை பார்வையிடும் பயணிகள், அதே நேரத்தில் அல் உலாவின் இயற்கை சூழலையும் உணரக் கூடிய வகையில் வனவிலங்குகளை பார்க்கும் அனுபவங்கள் ஆகியவை வழங்கப்படுகின்றன.
வரலாறும் இயற்கையும் இணையும் இந்த இடம் அல் உலாவை வெறும் தொல்லியல் தளமாக மட்டுமல்லாது, நிலைத்த சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அடையாளமாகவும் உயர்த்திக் காட்டுகிறது. இது அல் உலாவின் தனித்துவமான சுற்றுலா அனுபவங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
• ஜபல் இத்லிப் (Jabal Ithlib)
இது அல்உலா சுற்றுலாவின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் இடமாகும். உயர்ந்து நிற்கும் பாறை மலைகளும், அவற்றுக்கிடையில் உருவான இயற்கை காரணிகளும் பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்கின்றன. நபத்தியர் காலத்தில் இது ஆன்மிக மற்றும் பொது இடமாகவும் பயன்படுத்தப்பட்டதாக வரலாறு கூறுகிறது. பாறைகளில் காணப்படும் கல்வெட்டுகள், செதுக்கல்கள் மற்றும் பழமையான சின்னங்கள், அந்த கால மக்களின் வாழ்க்கை முறையையும் நம்பிக்கைகளையும் வெளிப்படுத்துகின்றன. சுற்றுலாப் பயணிகள் இங்கு பயணம் செய்து, வழிகாட்டிகளின் மூலம் வரலாற்றை உயிர்ப்புடன் அனுபவிக்க முடிகிறது.
• தாதான் (Dadan)
தாதான் என்பது அல்-உலாவின் பெருமையை உலகுக்கு எடுத்துச் சொல்லும் மற்றொரு முக்கிய இடமாகும். லிஹ்யானியர் மற்றும் ததானியர் ஆகிய பழங்கால நாகரிகங்களின் தலைநகராக விளங்கிய இந்த இடம், அரேபிய தீபகற்பத்தின் வரலாற்றில் மிக முக்கியமான பங்காற்றியுள்ளது. மலைப்பாறைகளில் செதுக்கப்பட்ட அரச கல்லறைகள், கட்டிட இடிபாடுகள் மற்றும் கல்வெட்டுகள், அந்த கால அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாச்சார வளர்ச்சியை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. இது ஒரு திறந்தவெளி அருங்காட்சியகமாக மாறி, வரலாற்றை நேசிக்கும் சுற்றுலாப் பயணிகளின் கனவு தளமாக உள்ளது.
• அல்உலா பழைய நகரம் (AlUla Old Town)
அல்உலா பழைய நகரமாது பாரம்பரிய அரேபிய வாழ்க்கை முறையின் பிரதிபலிப்பாகும். மண் மற்றும் கற்களால் கட்டப்பட்ட நூற்றுக்கணக்கான பழைய வீடுகள், குறுகிய தெருக்கள், பழமையான மசூதிகள் ஆகியவை இந்த நகரத்தின் தனித்துவத்தை வெளிப்படுத்துகின்றன. வணிகப் பாதைகளின் முக்கிய மையமாக இருந்த இந்த நகரம், பயணிகளுக்கும் வணிகர்களுக்கும் பாதுகாப்பான தங்குமிடமாக விளங்கியது. இன்று இது புதுப்பிக்கப்பட்டு, கலாச்சார நிகழ்ச்சிகள், பாரம்பரிய சந்தைகள் மற்றும் சுற்றுலா அனுபவங்களுடன் உயிர்ப்பூட்டப்பட்டுள்ளது.
• ஜபல் அல்-பீல் (Elephant Rock)
இயற்கை உருவாக்கிய அபூர்வமான பாறை அதிசயம் இதுவாகும். யானை வடிவத்தில் தோன்றும் இந்தப் பெரும் மணற்கல் பாறை, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக காற்று மற்றும் மணல் அரிப்பால் உருவானது. அல்-உலாவின் முக்கிய சுற்றுலா அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் இது, குறிப்பாக சூரியன் மறையும் நேரத்தில் மிக அழகாகத் தோன்றுகிறது.
சுற்றுலா பயணிகளுக்காக நடைபாதைகள், அமர்விடங்கள், சிறிய கடைகள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இயற்கை, புகைப்படக் கலை, அமைதி ஆகியவற்றை விரும்பும் பயணிகளுக்கு இது ஒரு மறக்க முடியாத அனுபவமாக விளங்குகிறது.
இந்த மிகப்பெரும் முன்னேற்றத்திற்கு பின்னால் காணப்படுவது தூரநோக்கு கொண்ட தலைமைமையின் ஆளுமையிக்க செயற்பாடுகளாகும்.
அல்-உலாவை உலக சுற்றுலாவின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் இந்த மாபெரும் மாற்றத்தின் பின்னால், இரு புனிதஸ்தலங்களின் காவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்களும், இளவரசர் மற்றும் பிரதமர் முகம்மது பின் சல்மான் அவர்களும் கொண்ட தொலைநோக்கு சிந்தனையே அடிப்படையாக உள்ளது. Vision 2030 என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க திட்டத்தின் மூலம், சவூதி அரேபியாவின் பொருளாதாரத்தை பலதுறைகளாக விரிவுபடுத்தி, சுற்றுலாத்துறையை முக்கிய தூணாக மாற்றியுள்ளனர்.
அல்உலாவில் வரலாற்று மரபுகளை பாதுகாத்தபடியே, சுற்றுச்சூழலுக்கு உகந்த வளர்ச்சி, உலகத் தரத்திலான வசதிகள், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் ஆகியவற்றை உருவாக்கியிருப்பது இவர்களின் தலைமைத்துவத்தின் சிறந்த எடுத்துக்காட்டாகும். பாரம்பரியமும் நவீனமும் கைகோர்த்து பயணிக்கும் இந்த வளர்ச்சி, உலக நாடுகளுக்கே ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது.
அல்உலா இன்று சாதாரண சுற்றுலா தளமாக மட்டுமல்லாமல் அது மனித நாகரிகத்தின் நினைவுச் சின்னமாகவும், இயற்கையின் அதிசயம் மற்றும் தொலைநோக்கு தலைமைத்துவத்தின் வெற்றி கதையாகவும் காணப்படுகிறது. இங்கு பயணிப்பதன் மூலம் கடந்த காலத்தை அனுபவிக்கவும், நவீன வசதிகளுடன் எதிர்காலத்தை உணரவும் முடியும். இந்த இடமானது உலகின் கவனத்தை ஈர்க்கும் சுற்றுலா மையமாக மாறிவருகிறது.








No comments