Breaking News

மதினா: நபியின் நகரம், நிம்மதியின் இருப்பிடம்..!

✍️ எஸ். சினீஸ் கான்.

உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும், ஒரு முஸ்லிமின் இதயம் நிம்மதியை நாடும் தருணங்களில் தன்னிச்சையாகச் சென்று வர விரும்பும் புனித நகரம்தான் மதினா. அது ஒரு சாதாரண ஒரு நகரமல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வும் வழியும் இன்னும் உயிருடன் துடித்துக் கொண்டிருக்கும் ஆன்மீகத் தங்குமிடமாக காணப்படுகிறது. இதயம் கனத்திருக்கும்போது அதை இலகுவாக்கும் சக்தி கொண்ட ஓர் நகரம் என்றால், அது மதீனா நகரம் தான்.


• நபியின் நகரம்  


 மக்காவிலிருந்து துன்பங்களையும் சோதனைகளையும் கடந்து வந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை, அன்போடும் மரியாதையோடும் வரவேற்ற இந்த பூமி, பின்னர் இஸ்லாமிய நாகரிகத்தின் மையமாக மாறியது. சகோதரத்துவம், சமூக நீதி, சமத்துவம், மனிதாபிமானம் ஆகிய உயரிய கொள்கைகள் அரசியல், சமூக வாழ்வில் நடைமுறைக்கு வந்த முதல் நகரம் மதினா என்பதே அதன் பெருமை ஆகும்.


• மஸ்ஜிதுன் நபவி  


மதினாவின் இதயமாக மஸ்ஜிதுன் நபவி விளங்குகிறது. நபி (ஸல்) அவர்களின் ரௌளா அதாவது “சுவர்க்கத்தின் தோட்டம்” என வர்ணிக்கப்படும் அந்த இடம், சொற்கள் மௌனமாகி, கண்ணீர் மட்டும் பேசும் ஆன்மீக அனுபவத்தை வழங்குகிறது. அங்கு நடைபெறும் தொழுகை, ஸலவாத், மனித வாழ்வின் பாரங்களைக் குறைக்கும் அளவுக்கு வலிமை பெற்றதாக உணரப்படுகிறது என்பதே உண்மை.


மதினாவின் முக்கிய சுற்றுலா மற்றும் புனித இடங்கள்.

---------------------------------------


1- மஸ்ஜிது குபா:


இஸ்லாமிய வரலாற்றில் முதல் மஸ்ஜித்தாக விளங்கும் குபா பள்ளிவாசல், தூய நோக்கத்துடன் கட்டப்பட்ட இபாதத்தின் சின்னமாக திகழ்கிறது. இங்கு இரண்டு ரக்அத் தொழுகை நிறைவேற்றுவது ஒரு உம்ராவின் நன்மையைப் பெறும் என்ற நபி நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.


2- உஹத் மலை:


தியாகமும் உறுதியும் சொல்லும் மௌனப் பாடமே உஹுத் மலை எனலாம் . “உஹத் எங்களை நேசிக்கிறது; நாமும் அதை நேசிக்கிறோம்” என்ற நபி (ஸல்) அவர்களின் வார்த்தைகற் அந்த மலையை வெறும் கற்களாக அல்லாது, உயிருள்ள வரலாறாக மாற்றுகின்றன.


3- ஜன்னத்துல் பக்கீ: 


நபி (ஸல்) அவர்களின் தோழர்கள், குடும்பத்தினர் உட்பட பலர் அடங்கப்பட்டிருக்கும் இந்த புனித அடங்கஸ்தலம்தான் இதுவாகும். இது மறுமை நினைவூட்டுவதுடன், மனிதனை பெருமையிலிருந்து பணிவுக்கு அழைக்கும் இடமாக விளங்குகிறது.


மஸ்ஜிதுல் 4- கிப்லதைன்:


ஒரே தொழுகையில் இரண்டு கிப்லாக்கள் மாறிய வரலாற்று நிகழ்வை நினைவூட்டும் இந்த மஸ்ஜிது, இஸ்லாமிய வரலாற்றின் முக்கிய சாட்சியாக திகழ்கிறது.


மரபையும் நவீனத்தையும் இணைக்கும் இன்றைய மதினா.

----------------------------------------


மதினா நகரமானது ஆன்மீக அடையாளத்தை இழக்காமல் நவீன வசதிகளுடன் வளர்ந்து வரும் ஒரு முன்மாதிரி நகரமாக விளங்குகிறது. உலகின் பல நாடுகளிலிருந்து வரும் கோடிக்கணக்கான ஆன்மீக பயணிகள் சிரமமின்றி இபாதத் செய்ய, தங்க, பயணிக்க தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளன.


மதினா வளர்ச்சியில் மன்னர் மற்றும் இளவரசரின் தூரநோக்குமிக்க பணிகள்.


சவூதி அரேபியாவின் மன்னரும், இளவரசர் முகம்மது பின் சல்மான் அவர்களும் மேற்கொண்டு வரும் தூரநோக்கு மிக்க பணிகள், மதினாவை உலகளாவிய ஆன்மீக மற்றும் சுற்றுலா மையமாக உயர்த்தி வருகின்றன. Vision 2030 திட்டத்தின் கீழ், ஹஜ் மற்றும் உம்ரா பயணிகளுக்கான வசதிகள், போக்குவரத்து, தங்குமிடம், சுகாதாரம், பாதுகாப்பு ஆகிய அனைத்தும் உலகத் தரத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளன.


மஸ்ஜிதுன் நபவி சுற்றுவட்டார அபிவிருத்தித் திட்டங்கள், விரிவாக்கப் பணிகள், நிழற்குடை, குளிரூட்டல் வசதிகள், பசுமை பூங்காக்கள் போன்றவை, ஆன்மீக பயணிகள் வசதியையும் பாதுகாப்பையும் முன்னிலைப்படுத்தியுள்ளன. இது சாதாரண அபிவிருத்தி அல்லாமல் நபியின் நகரத்தை நேசிக்கும் ஒரு தலைமையின் பணிவான சேவையாகவே இவை பார்க்கப்படுகின்றன.


மதினாவை விட்டு வெளியேறும் போது, ஒருவர் ஒரு நகரை விட்டுச் செல்கிறார் என்று சொல்ல முடியாது. அது ஒரு உணர்வு, ஒரு நிம்மதி, ஒரு ஆன்மீக நிலை. மீண்டும் வர வேண்டும் என்ற ஏக்கம், பிரியும் தருணத்திலேயே இதயத்தில் விதைக்கப்படுகிறது.


உண்மையிலேயே, மதினா ஒரு சாதாரண நகரமல்லாமல் அது நபியின் நகரம், நிம்மதியின் இருப்பிடம், இறை அருளில் இதயங்கள் தஞ்சம் அடையும் நிரந்தர இடமாக காணப்படுகிறது.













No comments