பாரத குடியரசு தினச்சிறப்பும் : இலங்கை - இந்திய உறவுகளும்
எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) - ஓட்டமாவடி.
நவீன பாரதத்தின் உதயம்
பாரத தேசத்தின் வரலாறு என்பது படிப்பினைகள் மற்றும் மீண்டெழுதல்கள் நிறைந்த ஒரு காவியமாகும். ஜனவரி 26, 1950 அன்று இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட குடியரசு நாடாக மலர்ந்தது.
இது வெறும் அரசியல் மாற்றம் மட்டுமல்ல, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகால நாகரிகத்தின் மீளுருவாக்கமாகும்.
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தலைமையிலான குழுவினால் செதுக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச்சட்டம், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் அச்சாணியாக இன்றும் திகழ்கிறது.
வறுமையிலிருந்து விண்வெளி வரை
அன்று வறுமையிலும் பஞ்சத்திலும் தவித்த ஒரு தேசம், இன்று செவ்வாய்க்கிரகத்திற்கு விண்கலம் அனுப்புமளவிற்கும் (Mangalyaan), உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார சக்தியாகவும் உயர்ந்து நிற்பது ஒரு வரலாற்று அதிசயம்.
குறிப்பாக, 2047ம் ஆண்டுக்குள் 'விக்சித் பாரத்' (வளர்ச்சியடைந்த பாரதம்) என்ற இலக்கை நோக்கி இந்தியா பயணிப்பது அதன் வல்லரசு கனவின் உச்சமாகும். டிஜிட்டல் பரிவர்த்தனை (UPI), பசுமை எரிசக்தி மற்றும் தொழிநுட்பத்துறையில் இந்தியா இன்று உலகளாவிய தலைமைத்துவத்தை வழங்கி வருகிறது.
அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை: ஒரு மனிதாபிமானப்பார்வை
இந்தியாவின் இந்த எழுச்சி அதன் அண்டை நாடான இலங்கையுடனான உறவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' (Neighbourhood First) என்ற கொள்கையின் அடிப்படையில், இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது வழங்கப்பட்ட 4 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி ஒரு முக்கிய மைற்கல்லாகும்.
'டித்வா' புயல்: சோதனைக் காலத்தில் இலங்கைக்கு கைகொடுத்த தோழன்
2025ம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இலங்கையின் வட, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களை நிலைகுலையச்செய்த 'டித்வா' (Dithwa) புயலின் போது, இந்தியா காட்டிய வேகம் அதன் உண்மையான நட்புறவை வெளிப்படுத்தியது. புயல் கரையைஒகடந்த சில மணி நேரங்களிலேயே, 'ஆபரேஷன் சாகர் பந்து' (Operation Sagar Bandhu) என்ற பெயரில் இந்தியா மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கியது.
*கடற்படை உதவி:
இந்தியக்கடற்படையின் விமானம் தாங்கி கப்பலான ஐ என் எஸ் விக்ராந்த் (INS Vikrant), ஐ என் எஸ் உதயகிரி மற்றும் ஐ என் எஸ் சுகன்யா ஆகியவை கொழும்பு மற்றும் திருகோணமலைத் துறைமுகங்களுக்கு விரைந்து வந்து 1,100 டன் நிவாரணப்பொருட்களைக் கையளித்தன.
*விமானப்படை உதவி:
சி-130ஜே மற்றும் ஐஎல்-76 விமானங்கள் மூலம் 14.5 டன் உயிர்மருந்துகள் வழங்கப்பட்டன.
*மருத்துவ சேவை:
கண்டி மற்றும் மஹியங்கனை பகுதிகளில் இந்திய இராணுவத்தினால் அமைக்கப்பட்ட தற்காலிகக் கள மருத்துவமனைகள் (Field Hospitals) மூலம் 8,000-க்கும் மேற்பட்டோருக்கு அவசர சிகிச்சையளிக்கப்பட்டது.
*உள்கட்டமைப்பு: கிளிநொச்சி மற்றும் சிலாபம் பகுதிகளில் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட போக்குவரத்தைச்சீரமைக்க வான்வழியாகக் கொண்டு வரப்பட்ட 'பெய்லி' (Bailey) பாலங்கள் மீட்புப்பணிகளை துரிதப்படுத்தின.
பொருளாதார மீள்கட்டுமாணம்
இந்த இக்கட்டான சூழலில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மீள்கட்டுமானப் பணிகளுக்காக 450 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 4,032 கோடி இந்திய ரூபாய்) மதிப்பிலான நிதித்தொகுப்பை அறிவித்தார்.
இதில் 100 மில்லியன் டொலர் மானிய உதவியாகவும், 350 மில்லியன் டாலர் சலுகைக்கடனாகவும் வழங்கப்பட்டது. இதனை இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்கள் "இரு நாடுகளுக்குமிடையிலான உறவின் புதிய அத்தியாயம்" எனப்பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
இந்தியா வல்லரசாக உருவெடுப்பது என்பது வெறும் இராணுவ பலத்தினால் மட்டுமல்ல, தனது அண்டை நாடுகளின் வளர்ச்சியிலும் பங்கெடுத்து, தெற்காசிய பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தான் அடங்கியுள்ளது. தரைவழி மற்றும் கடல்வழி இணைப்புகள் மூலம் இரு நாடுகளும் ஒன்றிணைவது, ஆசிய நூற்றாண்டின் (Asian Century) எழுச்சிக்கு வலுசேர்க்கும் சான்றாகும்.
இந்தியாவின் 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு, உலக அமைதிக்கும் வளர்ச்சிக்கும் வித்திடும் ஒரு வல்லரசாக பாரதம் திகழட்டும்.
இந்திய மக்களுக்கும், இந்திய வம்சாவளியினருக்கும் எமது மனமார்ந்த குடியரசு தின நல்வாழ்த்துகள்!

No comments