மூன்றாவது புனித அல் குர்ஆன் மனனப் போட்டிக்கான சவூதி தூதுவரின் வாழ்த்துச்செய்தி..!
அருளாளனும் கருணையாளனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்
மனிதர்களுக்கான நேர்வழிகாட்டியாகவும், தெளிவான ஆதாரமாகவும், தவறுகளை வேறுபடுத்தும் அளவுகோலாகவும் காணப்படும் புனித அல் குர்ஆனை அருளிய அல்லாஹ்வுக்கே அனைத்து புகழும் உரித்தாகட்டும்.
அல் குர்ஆனைச் சிறப்பாக ஓதியவரும், இறைத்தூதுச் செய்தியை முழுமையாக அறிவித்தவரும், ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றியவருமான நமது நபி முஹம்மது (ஸல்) அவர்கள்மீது அமைதியும் சாந்தியும் உண்டாவதாக.
இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு முஸ்லிம்கள் மற்றும் புனித அல் குர்ஆனை நேசிக்கும் அனைவருடனும், சவுதி அரேபிய தூதரகம் ஏற்பாட்டு செய்துள்ள மூன்றாவது அல் குர்ஆன் மனனப் போட்டியை முன்னிட்டு ஏற்படும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
இப் போட்டி, இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கு சேவை செய்தல், புனித அல் குர்ஆனை மனனமிடல் மற்றும் கற்பித்தல் உற்பட அதன் உயரிய மதிப்புக்களை உலகம் முழுவதும் பரப்புதல் ஆகியவற்றில் சவுதி அரேபிய அரசு கடைப்பிடித்து வரும் அணுகுமுறையின் தொடர்ச்சியாகும்.
இப் புனிதமான போட்டி, மனனமிடல் மற்றும் ஓதுதலை மாத்திரம் நோக்கமாகக் கொள்ளாமல், அதற்கு மேலதிகமாக, புனித அல் குர்ஆனின் அர்த்தங்களை இதயங்களில் பதியச் செய்வதும், அதன் மதிப்புகளை நடத்தை வழியாக உறுதிப்படுத்துவதும், மிகச் சரியான பாதைக்குத் வழிகாட்டி, நீதி, நேர்மை மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றின் மீது இதயங்களை ஒன்றிணைக்கும் குர்ஆனுடன் உள்ள உறவைக் ஆழப்படுத்துவதையும் பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது.
இம் முயற்சி, இரு புனித தலங்களின் காவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் ஆலு சௌத் அவர்களதும், பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் பின் அப்துல் அசீஸ் ஆலு சௌத் அவர்களதும் தலைமையிலான சவுதி அரேபிய அரசின், புனித அல் குர்ஆன் மற்றும் நாட்டு மக்களைப் பராமரிக்கும் அர்ப்பணிப்பையும், மிதத்தன்மை மற்றும் சமநிலையைப் பரப்புவதையும், மக்களிடையே அமைதியான சகவாழ்வு மற்றும் பரஸ்பர புரிதலை ஊக்குவிக்கும் இஸ்லாமிய மதிப்புகளை வலுப்படுத்துவதையும் பிரதிபலிக்கிறது.
இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசில் அமையப்பெற்றுள்ள சவுதி அரேபிய அரசின் தூதரகமாகிய நாங்கள், இப்போட்டியில் பங்கேற்க இளைஞர்களும் இளம்பெண்களும் மேற்கொள்ளும் பெரும் ஆர்வத்தைக் கண்டு பெருமிதம் கொள்கிறோம். அவ்வாறே, எதிர்கால தலைமுறைகளுக்குப் புனித அல் குர்ஆனை கற்பித்து மனனமிடச் செய்ய வைக்கும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் மேற்கொள்ளும் புனித முயற்சிகளையும் பெரிதும் பாராட்டுகிறோம். இந் நற்குணம் கொண்ட மனிதர்களையும் ஒருமைப்பாடு நிறைந்த சமூகத்தையும் உருவாக்கும் உண்மையான முதலீடாகும்.
இச் சந்தர்ப்பத்தில், இப்போட்டியின் வெற்றிக்காக அக்கறையும் வழிகாட்டுதலையும் வழங்கிய இஸ்லாமிய விவகாரங்கள், தஃவா மற்றும் வழிகாட்டல் அமைச்சர் மதிப்பிற்குரிய கலாநிதி ஷெய்க் அப்துல் அசீஸ் பின் அப்துல் லதீஃப் ஆலு ஷெய்க் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், புத்தசாசன, மத மற்றும் பண்பாட்டு விவகாரங்கள் அமைச்சர், இலங்கை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், தூதரகத்திலுள்ள எனது சக ஊழியர்கள், மதிப்பிற்குரிய போட்டி நீதிபதிகள் , இப்போட்டியில் பங்கேற்ற எனது அருமைப் பிள்ளைகள், மற்றும் இப்போட்டியின் வெற்றிக்காக உழைத்த அனைத்து அமைப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்கள் செய்த இந்நற்பணிகளை அல்லாஹ் அவர்களின் நன்மைகளின் தராசில் சேர்ப்பானாகவும், புனித அல் குர்ஆனை மனனம் செய்து அழகாக ஓதுவதற்காக உழைத்த பங்கேற்பாளர்களுக்கு அளவற்ற நன்மைகளை வழங்குவானாகவும் நாம் அல்லாஹ்வை வேண்டுகிறோம்.
புனித அல் குர்ஆன் எங்கள் இதயங்களின் வசந்தமாகவும், உள்ளங்களின் ஒளியாகவும், எங்கள் துயரங்களை அகற்றக் கூடியதாகவும் அமைய அல்லாஹ்வை வேண்டுகிறோம். எங்கள் பிள்ளைகள் அதனை மனனம் செய்து, அதன் போதனைகளின்படி செயல்பட அல்லாஹ் அவர்களுக்கு அருள் பாழிப்பானாக.
உங்கள்மீது அல்லாஹ்வின் அமைதியும், அருளும், உண்டாவதாக.
இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசிற்கான
சவுதி அரேபிய அரசின் தூதுவர்
காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி.







No comments