Breaking News

சமூக நலனுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து பணியாற்றிய சிறந்த மனிதர் மௌலவி A.L. ஆதம்லெப்பை பலாஹி.

காத்தான்குடியின் மூத்த உலமாவும், புதிய காத்தான்குடி அல் அக்ஸா பெரிய ஜும்ஆ பள்ளிவாயலின் ஆயுட்கால பிரதம பேஷ் இமாமாகவும், பல சமூக, சமய மற்றும் பொது தொண்டு நிறுவனங்களின் உறுப்பினராகவும் ஸ்தாபக உறுப்பினராகவும் இருந்த, சமூக நலனுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து பணியாற்றிய சிறந்த சமூக செயற்பாட்டாளரும் ஓய்வுநிலை ஆசிரியருமான மௌலவி A.L. ஆதம்லெப்பை பலாஹி அவர்களின் மறைவு, எங்களுக்கு மிகுந்த மனவேதனையையும் ஆழ்ந்த துயரையும் ஏற்படுத்துகிறது.


எனக்கும் அவரது குடும்பத்துக்கும் சிறுவயது முதல் நெருக்கிய உறவு காணப்படுகிறது. அவர் எனக்கு அல் குர்ஆன் கற்றுத்தந்ததுடன், நான் ஹாபிழ் ஆக வேண்டும் என்று என்னை ஊக்குவித்தவர். எனது முதலாவது தேர்தலில் இருந்து என் வெற்றியில் அவர் அளித்த பங்களிப்பு மறக்கமுடியாதது.


நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பே, அவருடன் இணைந்து சமூகம் சார்ந்த பல பணிகளில் பங்கேற்றுள்ளோம். அதேபோல், அல் அக்ஸா பள்ளிவாசலை விரைவாக கட்டிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கிலும் அவர் அதிகமாக பங்களித்தவர்.


அவரின் அற்புதமான சமூக சேவையில் ஒன்றுதான் உலமாக்கள், இமாம்கள், கதீப்மார்கள் மற்றும் முஅத்தின் மார்களின் நலனுக்காக ஒரு நலன்புரி அமைப்பை உருவாக்கி, அவர்களுக்கு மாதாந்தம் நன்மைகள் கிடைக்கும் காப்புறுதி திட்டத்தை உருவாக்கியது. இதன் மூலம் அவர்களுக்கு பாதுகாப்பும் நன்மைகளும் உறுதி செய்யப்பட்டது.


அவரின் மறைவு, காத்தான்குடி மக்களுக்கும், உலமா பெருமக்களுக்கும், இஸ்லாமிய சமூகத்திற்கும், தனிப்பட்ட ரீதியில் எனக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். கல்வி, தக்வா, மார்க்க வழிகாட்டல், சமூக ஒற்றுமை மற்றும் பொதுநலப் பணிகளில் அவர் ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க சேவைகள் என்றும் காத்தான்குடி மக்களால் நினைவுகூறப்படும்.


மறைந்த அன்னாரை இழந்து துயருறும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் மற்றும் காத்தான்குடி மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


அல்லாஹ் தஆலா மறைந்த மௌலவி A.L. ஆதம்லெப்பை பலாஹி அவர்களின் பாவங்களை மன்னித்து, அவர்களின் நற்கருமங்களை ஏற்றுக் கொண்டு, ஜன்னத்துல் ப்ரீதௌஸை அளித்து, அவர்களின் குடும்பத்தாருக்கும் அனைவருக்கும் சப்ர் (பொறுமை) அருள்வானாக.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்

(பாராளுமன்ற உறுப்பினர்)




No comments