ஜித்தா : யாத்ரீகப் பயணத்தையும் சுற்றுலாவையும் இணைக்கும் ஓர் சிறந்த நகரம்.!
✍️ எஸ். சினீஸ் கான்
இஸ்லாமிய உலகின் இதயமாக விளங்கும் மக்காவிற்கு வருகை தரும் கோடிக்கணக்கான யாத்ரீகர்களின் பயணப் பாதையில் தவிர்க்க முடியாத நகரமாக ஜித்தா திகழ்வதுடன், தற்போதைய காலப்பகுதியில் சுற்றுலா நகரமாக உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
கடலை ஒட்டி அமைந்துள்ள இந்த அழகிய நகரம், வரலாறு, கலாசாரம், நவீனத்துவம் மற்றும் இயற்கை அழகு ஆகிய அனைத்தையும் ஒருங்கே தன்னகத்தே கொண்டுள்ளது. உம்ரா அல்லது ஹஜ் நிறைவு செய்த பிறகு, அல்லது அதற்கு முன், யாத்ரீகர்கள் ஜித்தாவைச் சுற்றிப்பார்ப்பது ஆன்மிகப் பயணத்திற்கு அப்பால் மனநிறைவையும் மகிழ்ச்சி நிறைந்த அனுபவத்தையும் தரக்கூடியதாக காணப்படுகிறது.
ஜித்தாவிலுள்ள சில முக்கிய இடங்களாக..
• Red Sea Museum - கடலின் கதையைச் சொல்லும் அருங்காட்சியகம்
ஜித்தாவின் முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்றாக Red Sea Museum விளங்குகிறது. நவீன காட்சிப்படுத்தல்களுடன் சிவப்பு கடலின் வரலாறு, கடல் வர்த்தகம், மீன்வளம், கடல் வாழ்க்கை மற்றும் பழங்காலக் கடலோடிகள் பற்றிய விரிவான தகவல்களை இந்த அருங்காட்சியகம் வழங்குகிறது. அறிவும் அனுபவமும் ஒருங்கிணையும் இந்த இடம், சுற்றுலாப்பயணிகளுக்கும் யாத்ரீகர்களுக்கும் பயனளிக்கும் ஒரு சிறந்த இடமாக விளங்கிவருகிறது.
அல்பலத் (Al Balad) - வரலாற்றிலௌ உயிர்ப்புடன் நிற்கும் பழைய நகரம்
யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள அல்பலத் பகுதி, ஜித்தாவின் வரலாற்றை சிறப்பாக வெளிப்படுத்துகிறது. பல நூற்றாண்டுகள் பழமையான கட்டிடங்கள், வீடுகள், பாரம்பரிய சந்தைகள் ஆகியவை இன்றும் உயிருடன் காணப்படுகின்றன. இங்கு நடைபயணம் செய்வதே ஒரு பழைமையான நகரத்திற்கு செல்வதது போல் உணர்வை தருகிறது.
ஜித்தா கார்னீஸ் - மன அமைதிக்கான ஓர் ஓய்வு
சிவப்பு கடலின் கரையோரமாக காணப்படுகின்ற ஜித்தா கார்னீஸ், யாத்ரீகப் பயணத்தின் சோர்வை போக்கி, மனதிற்கு அமைதி தரும் இடமாக திகழ்கிறது. மாலை நேரங்களில் கடல் காற்றுடன் நடைபயணம், குடும்பங்களுடன் ஓய்வு, இயற்கையை ரசிக்கும் தருணங்கள் என ஜித்தா ஒரு முழுமையான சுற்றுலா அனுபவத்தை இது வழங்குகிறது.
மக்கா முகர்ரமாவிற்கு வரும் யாத்ரீகர்கள், தங்களின் ஆன்மிகப் பயணத்துடன் சேர்த்து ஜித்தாவையும் பயணத் திட்டத்தில் இணைத்தால், சவூதி அரேபியாவின் வரலாறும் நவீன முன்னேற்றமும் ஒரே நேரத்தில் அனுபவிக்கக் கூடிய ஓர் வாய்ப்பை பெறுகிறார்கள். இது பயணத்தை மேலும் அர்த்தமுள்ளதாகவும் நினைவில் நிற்கக்கூடியதாகவும் மாற்றுகிறது.
இன்று ஜித்தா உள்ளிட்ட நகரங்களில் காணப்படும் இந்த அபாரமான வளர்ச்சி, இரு புனித பள்ளிவாசல்களின் காவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்களின் வழிகாட்டுதலிலும், இளவரசரும் பிரதமருமான முகம்மது பின் சல்மான் அவர்களின் Vision 2030 தொலைநோக்கு திட்டத்தின் விளைவாக காணப்படுகிறது. சுற்றுலா, கலாசாரம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் சவூதி அரேபியாவை உலகின் முன்னணி நாடுகளுள் ஒன்றாக மாற்றும் இந்த முயற்சிகள் பாராட்டுக்குரியவை.
ஆன்மிகத்தையும் முன்னேற்றத்தையும் ஒருங்கே தாங்கி நிற்கும் ஜித்தா நகரம், இன்றைய சவூதி அரேபியாவின் மாற்றத்தை பிரதிபலிக்கும் ஒரு பிரகாசமான அடையாளமாக திகழ்கிறது.
மக்காவிற்கு வரும் யாத்தீகர்கள் தங்கள் ஆன்மீகப் பயணத்தை இன்னும் அழகாக்க இந்நகரத்து சென்று வரலாம்.





No comments