யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதியின் சுதந்திரமான நடைபவனிக்கு யார் காரணம் ?
ஜனாதிபதி அனுரகுமார அவர்கள் யாழ்ப்பணத்தில் சுதந்திரமாக நடைபவனி செல்வதற்குரிய சூழ்நிலையை உருவாக்கியவர் மஹிந்த ராஜபக்ச என்ற பதிவுகள் நேற்று வைரலாகியது.
2009 மகிந்தவின் ஆட்சியில் நாட்டில் யுத்தம் முடிவுக்கு வந்தது என்பது உண்மைதான். ஆனால் யாழ்ப்பாணத்தை கைப்பற்றியதற்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதனை இன்றைய இளைய சமுதாயத்தினர் புரிந்துகொள்ள வேண்டும்.
1996 இல் சந்திரிக்காவின் ஆட்சியில் “”ரிவிரச”” (Operation Riviresa) என்ற இராணுவ நடவடிக்கை மூலமாக விடுதலை புலிகளிடமிருந்து யாழ் குடாநாடு முழுமையாக கைப்பற்றப்பட்டு சுமார் நாற்பது ஆயிரம் படையினர் (40,000) அங்கு குவிக்கப்பட்டனர். இராணுவத்தினரின் இந்த எண்ணிக்கையானது யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த மக்கள் சனத்தொகையில் நான்கில் ஒரு பகுதிக்கு சமனானது என்று அப்போது விமர்சிக்கப்பட்டது.
யாழ்ப்பான மீட்பு நடவடிக்கைக்கு பொறுப்பாக மேஜர் ஜெனரல் ரொஹான் தழுவத்தை இருந்ததுடன், பிரிகேடியர் தரத்தில் சரத் பொன்சேகா பதவியில் இருந்தார்.
யாழ் குடாநாட்டின் தெற்கு எல்லையாக முகமாலை, நாகர்கோவில் ஆகிய பிரதேசங்கள் வரைக்கும் இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது யாழ்ப்பாணத்துக்கான போக்குவரத்துக்கள் ஆகாயம், கடல் மார்க்கமாகவே மேற்கொள்ளப்பட்டது.
கொழும்பு உட்பட நாட்டின் எந்தப் பாகத்திலும் புலிகளின் பிஸ்டல் குழு மற்றும் தற்கொலைத் தாக்குதல்கள் நடைபெற்றாலும், யாழ் குடாநாட்டுக்குள் அவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்வது புலிகளுக்கு சவாலாக இருந்தது. படையினரின் இறுக்கமான பாதுகாப்பு கெடுபிடிகளே இதற்கு காரணமாகும்.
எனவே யாழ்ப்பாணத்தில் இன்றைய ஜனாதிபதி சுதந்திரமாக நடைபவனி மேற்கொள்வதற்கான சூழ்நிலையை உருவாக்கிய ஜனாதிபதி யார் என்றால், அதற்கு அன்றைய ஜனாதிபதி சந்திரிக்காவை குறிப்பிடுவதே சிறந்தது.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

No comments