Breaking News

வெள்ளம், மற்றும் 'டிட்வா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ISRC வழங்கும் இலவச மருத்துவ முகாம்கள்

ISRC இலங்கையில் பல தசாப்தங்களாக மனிதாபிமான, சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரும் ஒரு பிரசித்தி பெற்ற நிறுவனம் — அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ‘சைக்ளோன் டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவும் வகையில் தனது அவசர உதவி நடவடிக்கைகளை விரிவுபடுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாகப் பல பகுதிகளில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.


ஐக்கிய நாடுகள் சபையின் ECOSOC அங்கீகாரத்தைப் பெற்றுள்ள ISRC, அரச சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து இவ்விலவச மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறது. இதன் மூலம் பாதிப்பு அதிகம் ஏற்பட்ட மக்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


சுமார் 30 ஆண்டுகளாக நாட்டில் பணியாற்றி வரும் ISRC, நீர் மற்றும் , சுகாதார சேவைகள், கல்வி உதவி, வீட்டுத்திட்டம், அனாதை பராமரிப்பு, வாழ்வாதாரம், மற்றும் பருவகால நிவாரணங்கள் போன்ற துறைகளில் சேவைகளை வழங்கி வருகிறது.


ISRC இன் தகவலின்படி, திட்டமிடப்பட்ட 14 மருத்துவ முகாம்களில் ஏழு முகாம்கள் ஏற்கனவே வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இவை அனைத்தும் புத்தளம் மாவட்டத்தின் பல பகுதிகளில் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


இம்முகாம்களில் பரிசோதனை, மருத்துவ ஆலோசனை, சுகாதார வழிகாட்டுதல், காயங்களுக்கு மருந்து கட்டுதல் மற்றும் இலவச மருந்துகள் வழங்குதல் போன்ற சேவைகள் வழங்கப்பட்டன.


நிறைவடைந்த ஏழு முகாம்கள் மூலம் மொத்தமாக 2,121 நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். முன்னர் மருத்துவ முகாம்கள், அஷ்ரஃபிய்யா அரபுக் கல்லூரி, மணல்குன்று, அசன் குத்தூஸ் முஸ்லிம் வித்யாலயம், வெட்டாளை, மஸ்ஜிதுல் ஹசனாத் ஜும்ஆ பள்ளிவாசல், அல் ஜித்தா, தில்லையடி, ISRC அலுவலகம், நுரைச்சோலை, G.R.C. தமிழ் வித்யாலயம், ஏத்தாலை, கண்டக்குளி அவசர குடியேற்ற முன்பள்ளி, எளுவன்குளம் M.M.V., வனாதவில்லுவ ஆகிய இடங்களில் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றன.


மீதமுள்ள மருத்துவ முகாம்கள் டிசம்பர் மாதம் 11 முதல் 17 வரை ஹுசைனியாபுரம், பலாவிய, செவ்வந்தீவு, முந்தல், கருவலகஸ்வெவ, ஆறச்சிக்கட்டுவ மற்றும் நாத்தாண்டி ஆகிய பகுதிகளில் நடைபெறவுள்ளதாக ISRC அறிவித்துள்ளது.


அரச சுகாதாரத் துறைகள், மருத்துவக் குழுக்கள், தன்னார்வலர்கள், நன்கொடையாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோரின் ஒத்துழைப்புக்கு நிறுவனம் தனது நன்றியைத் தெரிவித்துள்ளது.


இயற்கைப் பேரிடர்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நீண்டகால மனிதாபிமான உதவிகளை வழங்குவதே இம்முயற்சியின் நோக்கமாக இருப்பதாக ISRC மேலும் குறிப்பிட்டுள்ளது.












No comments