மன்னாரில் ஒரு மில்லியன் மதிப்புள்ள வெளிநாட்டு கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
மன்னார் பள்ளியமுனை பகுதியில் இலங்கை கடற்படை மற்றும் காவல்துறையினர் புதன்கிழமை (10) நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் ஆறு (06) கிலோகிராம் வெளிநாட்டு கஞ்சாவுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
முழு நாடுமே ஒன்றாக' என்ற தேசிய நடவடிக்கையின் கீழ் “போதையற்ற நாடு -ஆரோக்கியமான பிரஜைகள் வாழ்கை” என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து விடுவிக்கும் தேசிய பணிக்கு பங்களிக்கும் கடற்படை, தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் உள்ளூர் நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணித்து போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
வடமத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் கஜபா, மன்னார் பிரிவு காவல்துறை குற்றப்பிரிவுடன் இணைந்து பள்ளியமுனை பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த சுமார் ஆறு (06) கிலோகிராம் வெளிநாட்டுஓ கஞ்சாவுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு கஞ்சா இருப்பின் மொத்த தெரு மதிப்பு ஒரு மில்லியன் ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் 34 மற்றும் 40 வயதுடைய பள்ளியமுனை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் வெளிநாட்டு கஞ்சாவையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் காவல் நிலையத்தில் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

No comments