ஹக்கீம் – அதா, நடைமுறை அரசியல் விளங்காவிட்டால் ஏற்படுகின்ற ஆச்சர்யம்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் அழைப்பின்பேரில் அக்கரைப்பற்று மேயர் அதாஉல்லாஹ் அவர்கள் கண்டி மாவட்டத்தின் அனர்த்தம் இடம்பெற்ற இடங்களுக்கு சென்று ரவுப் ஹக்கீமுடன் இணைந்து செயற்படும் புகைப்படம் வெளியானதும் அதனை சிலர் ஆச்சர்யமாக பார்க்கின்றனர்.
நடைமுறை அரசியல் விளங்கியவர்களுக்கு இதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை.
முஸ்லிம் காங்கிரசின் வளர்ச்சியில் அதாஉல்லாஹ்வின் பங்களிப்பும் உள்ளது. மறுபுறம் அதாஉல்லாஹ் அரசியலில் வளர்ந்ததும் முஸ்லிம் காங்கிரஸ் மூலம்தான் என்று நான் கூறத்தேவையில்லை.
அரசியல்வாதிகள் மேடைகளில் ஆளையாள் தூற்றுவதும், தனிப்பட்ட ரீதியில் உறவுகளை பேணுவதும் இலங்கையில் மட்டுமல்ல, உலகம் முழுக்க நடைபெறுகின்ற நடைமுறை அரசியலாகும்.
2003 இல் ஹக்கீம் மீது 37 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அதாஉல்லாஹ் தலைமையிலான அணியினர் முஸ்லிம் காங்கிரசிலிருந்து பிரிந்துசென்ற பின்பு மு.கா தலைவரை மேடை மேடையாகவும், ஊடகங்கள் மூலமாகவும் கடுமையாக விமர்சித்தனர்.
ரவுப் ஹக்கீம் – அதாஉல்லாஹ் கொதிநிலை நிலவிய பதட்டமான அந்த காலகட்டத்தில் அதாஉல்லாஹ்வின் புதல்விக்கு திருமணம் நடைபெற்றது. அந்த திருமண வைபவத்தில் அதாஉல்லாவுக்கு அருகில் இருந்தவர் வேறு யாருமல்ல. அது தலைவர் ரவுப் ஹக்கீம். இது அப்போது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. பின்பு போகப்போக பழகிவிட்டது. அதாவது நடைமுறை அரசியல் என்றால் என்ன என்பது பற்றி நன்றாக புரிந்தது.
இதற்கு இன்னுமொரு உதாரணம் கூறுவதென்றால் அண்மையில் அமெரிக்காவில் நியுயோர்க் மாநகரசபை தேர்தலுக்கு முன்பு சொஹ்ரான் மம்தானி - ரொனால்ட் ட்ரம்ப் ஆகியோர்கள் எவ்வாறு ஆளையாள் தூற்றினார்கள் என்பதையும், தேர்தலுக்கு பின்பு இருவரும் சந்தித்தபோது எவ்வாறு நடந்துகொண்டார்கள் என்பதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நடைமுறை அரசியலை புரிந்துகொள்ள முடியும்.
சிறுபான்மை சமூகத்தினரான எமது ஒற்றுமை பிரதானமானது. தலைவர்கள் ஒன்றுபடுகின்றபோதுதான் மக்களும் ஒன்றுபட முடியும். எனவேதான் ரவுப் ஹக்கீம், அதாஉல்லாஹ் ஆகியோர்களது ஒற்றுமை நீடிக்க வேண்டுவதோடு, ஏனைய தலைவர்களும் இவ்வாறு ஒன்றுபட வேண்டுமென்று பிராத்திக்கிறேன்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

No comments