Breaking News

எது இனவாதம் ? எது சமத்துவம் ? வார்த்தைகளில் இனிமை, நடைமுறையில் எது ?

இன்றைய ஆட்சியில் முஸ்லிம்களின் உரிமைகள் சத்தமின்றி பறிக்கப்பட்டு வருகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அது விமர்சிக்கப்படுகின்றபோது, சிறிய விடயங்களை பெரிது படுத்துகின்றனர் என்றும், இனவாதம் பேசுகின்றனர் என்றும் ஆட்சியாளர்களின் இனவாத நடைமுறைப் போக்கினை எம்மவர்களில் சிலர் நியாயப்படுத்தி வருகின்றனர். 


இவ்வாறான நியாயப்படுத்தலானது எமது கைகளைக்கொண்டு எமது கண்களை குத்துவது போன்றதாகும்.  


இங்கே எனது கேள்வி இதுதான்: 


ஜனநாயக நாடொன்றில் சிறுபான்மையாக வாழ்கின்ற ஒரு இனம், காலாதிகாலமாக அனுபவித்து வருகின்ற உரிமைகள் அல்லது சலுகைகள் மறுக்கப்படுகின்றபோது, அதற்கான நியாயத்தினை கோருவது இனவாதமாகுமா ? 


அல்லது 


பத்து வீதமாக வாழ்கின்ற முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை அல்லது காலாதிகாலமாக அனுபவித்துவந்த சலுகைகளை விகிதாசார அடிப்படையில் சமத்துவமாக வழங்க மறுப்பது இனவாதமாகுமா ? 


சமத்துவ கொள்கைகளை முன்னிறுத்தி ஆட்சிக்கு வந்த இடதுசாரி ஆட்சியாளர்கள், சமத்துவத்தை வார்த்தைகளில் பேசிக்கொண்டு நடைமுறையில் ஓரவஞ்சனை செய்யலாமா ?  


ஊழலற்றவர்கள் என்று பேசப்படுகின்ற இன்றைய அரசாங்கமானது, அதிகாரமுள்ள உயர் பதவிகளில் முஸ்லிம்களை அமர்த்துவதில் காண்பிக்கின்ற பாரபட்சமான நடைமுறையானது தலையை தடவிக்கொண்டு கண்களை பிடுங்குவது போன்றுள்ளது. 


இவ்வாறு அரசாங்கத்தை விமர்சிக்கின்றோம் என்பதற்காக ஆட்சியை மாற்றுங்கள் என்று கூறவில்லை. மாறாக அரசாங்கத்துக்கு அழுத்தம் வழங்குவதன் மூலம் சிறுபான்மை சமூகமான முஸ்லிம்களுக்கு இருக்கின்ற ஒருசில உரிமைகளையாவது பாதுகாக்க முடியும் என்பது எமது நம்பிக்கையாகும். 

 

முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




No comments