கண்டி நகர மறுசீரமைப்பு , போகம்பரைச் சிறைச்சாலை வளாக அபிவிருத்தி மற்றும் பேராதனை பல்கலைக்கழக பகுதியில் பஸ் நிலையம் அமைத்தல் - பாராளுமன்றத்தில் மு.கா. தலைவர் ஹக்கீம் எம்.பி.வலியுறுத்து
கண்டி நகர மறுசீரமைப்பு மற்றும் சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வு, போகம்பரைச் சிறைச்சாலை வளாக சுற்றுலா அபிவிருத்தி மற்றும் பேராதனை பல்கலைக்கழக பிரதேசத்தில் பஸ் நிலையம் அமைத்தல் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், கண்டி மாவட்ட எம்.பியுமான ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் திங்கள் கிழமை(24) கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சு என்பன தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவற்றை அவர் சம்பந்தப்பட்ட அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.
அங்கு அவர் பேசுகையில்,
அமைச்சரின் கூற்றுப்படி, அபிவிருத்தி அதிகாரசபை, நாடு முழுவதும் பத்து நகரங்களைக் கண்டறிந்துள்ளதாகக் கூறியுள்ளார். ஜனாதிபதி அவர்கள் யாழ்ப்பாணம், எஹலியகொட,மட்டக்களப்பு ,சிலாபம் மற்றும் மாத்தறை பற்றிப் பேசினார்.
மற்ற பத்து நகரங்கள் என்னவென்று எனக்குத் தெரியாது.
நான் கண்டி நகரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றேன்.
கண்டி,நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகவும், குறிப்பாக பௌத்தர்களுக்கு மிக முக்கியமான நகரமாகவும் உள்ளது.
நகர மறுசீரமைப்புத் திட்டங்களின் போது கண்டியில் பல பகுதிகள் கவனிக்கப்பட வேண்டும், குறிப்பாக இங்கு போதுமான சேவைகள் அற்ற பல குடியிருப்புகளில் (underserved settlements) குறைந்த வசதிகளுடன் மக்கள் வாழும் மஹியாவ, கட்டுகலை, தெய்யன்னாவல போன்ற பகுதிகள் உள்ளன.
கண்டி,கட்டுகலையைப் பற்றிப் பேசுகையில், நாம் அனைவரும் இளம் தடகள வீராங்கனை சபியா யாமிக் (Safia Yamic) பெற்ற மாபெரும் சாதனையைப் பாராட்டுகின்றோம். அவர் மூன்று தங்கப் பதக்கங்களையும் மூன்று சாதனைகளையும் பெற்றார்.
அவர் முன்னைய பதினெட்டு ஆண்டுகால சாதனையை முறியடித்திருந்தார், மேலும், அவர் இந்த வசதி குறைந்த பகுதியில் வாழ்ந்து வருபவர்.அது கண்டியில் உள்ள மிகவும் பின்தங்கிய குடியேற்றப் பகுதி.
அவரது அற்புதமான சாதனைக்காக நான் எனது பாராட்டுகளைப் பதிவு செய்கின்றேன். நாம் அனைவரும் அதைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறோம். சபியா யாமிக் என்ற அந்த வீராங்கனை குறித்து நாம் அனைவரும் பெருமை கொள்கிறோம். அந்த வீராங்கனை கட்டுகலை பிரதேசத்தில் இருந்து வருகிறார். அத்தகைய ஒரு கடினமான பகுதியில் இருந்து வந்து அவர் சாதித்துள்ளார்.
நான் அந்த வீராங்கனைக்கும், அவரது பெற்றோருக்கும், குறிப்பாக அவரது தந்தையாருக்கும் என் பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன். அவரது தந்தையாரை எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியும்; மேலும், அவர்கள் இவை அனைத்தையும் மீறி சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர்.
ஆனால் உண்மை என்னவென்றால், நகர மறுசீரமைப்புத் திட்டங்கள் என்று வரும்போது, அடுக்குமாடி வீடுகளைக் கட்டி, ஒரு நல்ல சூழலை உருவாக்குவதற்கான இந்த முயற்சியில், கண்டி நகரம் முழுவதையும் நாங்கள் கவனத்தில் கொள்ளவில்லை. குறிப்பாக, மஹியாவ, கட்டுகலை, தெய்யன்னாவல போன்ற பகுதிகள் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் வாழும் பகுதிகளாக இருப்பதால், இது குறித்து நிச்சயமாக முயற்சி எடுக்கப்பட வேண்டும் என்று நான் முன்மொழிகின்றேன்.
அது மட்டுமல்ல, இப்போது நீண்ட காலமாக, 2000ஆம் ஆண்டு முதல், கண்டி மாவட்டத்தில், கண்டி நகரில் உள்ள போகம்பரைச் சிறைச்சாலை வளாகம் இப்போது முற்றிலும் காலியாக உள்ளது.
சிறைக் கைதிகளைப் பல்லேகலைக்கு கொண்டு சென்றுள்ளனர் ஆனால், அந்த இடத்தை அபிவிருத்தி செய்வது குறித்து வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கொண்டுவருவோம் என்று கூறி, அதற்கான பெரிய திட்டங்களை வகுத்தாலும், இதுவரை எதுவும் நடக்கவில்லை.
இது குறிப்பாக நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் (UDA) சொந்தமான திட்டமாக இருப்பதால், உடனடியாக ஏதாவது செய்யப்பட வேண்டும். கண்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் பலர் ஓர் இரவுக்கு மேல் தங்க மாட்டார்கள் என்று சொல்லப்படுகிறது, ஏனென்றால், அங்கே பொழுதுபோக்குக்கு அதிக இடங்கள் இல்லை என்பதே அதற்கான காரணமாகச் சொல்லப்படுகின்றது.
எனவே, கண்டி மாவட்டத்தில் உள்ள போகம்பரைச் சிறைச்சாலை வளாகத்தை, அது இப்போது முற்றிலும் காலியாக உள்ளதால், மேம்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.
தற்போது,எஹெலேபொல வளவில் ஒரு மெழுகு அருங்காட்சியகம் (Wax Museum) மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளது, அதைத் தவிர வேறு எதுவும் நடக்கவில்லை. அதுமட்டுமல்ல, பல பழைய கட்டிடங்கள் உள்ளன. 200க்கும் மேற்பட்ட பழைய கட்டிடங்களை பேணிப் பாதுகாக்க ஜப்பானிய உதவி கிடைக்கும் என்று கூறப்பட்டது. அதில் எதுவும் இதுவரை நடக்கவில்லை. அதையும் நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
மேலும்,நான் வசிக்கும் கண்டியில் உள்ள மஹகந்த கிராம அலுவலர் பிரிவில், மஹகந்த நகரத்தின் மத்தியில் அமைந்துள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான 42 பேர்ச்ஸ் பரப்புள்ள ஒரு தனி நிலத்தை வழங்கும்படி எனது கோரிக்கையின் பேரில் நகர அபிவிருத்தி அதிகாரசபையால் (UDA) வழங்கப்பட்ட ஓர் ஆவணத்தை நான் இங்கு சபையில் சமர்ப்பிக்கிறேன்.
அங்கு ஒரு பஸ் நிலையம் கட்டப்பட வேண்டும். ஏனென்றால்,அது பேராதனை நகரம் மற்றும் கலஹா நகரத்திற்கு இடையே உள்ள ஒரு விசேடமான பஸ் தரிப்பிடமாகும் . அந்த ஒரு சிறிய நிலத்துண்டானது, அது பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமானது. அதில் ஒரு சிறிய தொழிலாளர் வசதி மையம் உள்ளது; யாரும் தங்குவதில்லை. எனவேதான் அதைப் பற்றி நாங்கள் ஒரு கோரிக்கை விடுத்தோம். அதையும் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டு உரையை நிறைவு செய்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமின் உரைக்கு பிரதி அமைச்சரின் பதில்:
மஹியாவ பகுதியில் உள்ள குறைந்த வாழ்க்கை நிலை பற்றியது. மஹியாவ பகுதியில் MC மற்றும் MMC என இரண்டு பகுதிகள் உள்ளன. MC பகுதியில் முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழ்கின்றனர். ஆனால் அங்கு நிலைமை தரமாக உள்ளது.
MMC பகுதியில்தான் வாழ்க்கை நிலை மிகவும் குறைவாக உள்ளது மற்றும் சிக்கல் உள்ளது. இது குறித்து, சுமார் 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதியை மேம்படுத்த, அமைச்சுக்கள் மாற்றப்பட்ட ஒரு வாரத்திற்குள்,நகர அபிவிருத்தி அதிகார சபை (UDA), போன்றவற்றுடன் ஒரு கூட்டம் நடத்தப்பட்டு, வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான திட்டம் வகுக்கப்பட்டது. இதன் முதற்கட்டமாக, மக்கள் இங்கிருந்து மாற விரும்புகிறார்களா, அல்லது இங்கேயே வீடுகளைக் கட்டி குடியேற விரும்புகிறார்களா என்று அறிய ஒரு சமூக ஆய்வு செய்யப்பட வேண்டும். அன்றைய தினம் வந்திருந்த பல்கலைக்கழக சமூக அறிவியல் துறை நிபுணர்கள் அதை இலவசமாகச் செய்ய ஒப்புக்கொண்டனர், அவர்களுக்குப் போக்குவரத்து வசதியை மட்டுமே UDA வழங்கும். அந்த வேலை தொடங்கப்பட்டுள்ளது.
சமூக ஆய்வுக்குப் பிறகு, மக்கள் எந்த விதத்தில் குடியேற்றப்படுவார்கள் என்ற முடிவுக்கு வர ஒரு சாத்தியப்பாட்டு ஆய்வு செய்யப்படும்.
அடுத்து,போகம்பரை பற்றி பாரம்பரிய மதிப்பீடு (Heritage Assessment) ஒன்று செய்யப்படுகின்றது. இந்த மதிப்பீட்டுப் பணிக்கு இரண்டு மாதங்கள் கால அவகாசம் தேவை. அதன் பிறகு, அடுத்த வருடம் மே மாதமளவில், தனியார் -அரச பங்களிப்புடனான (Public-Private Partnership) திட்டமாக இதன் வேலைகளைத் தொடங்க முடியும் என்று பிரதி அமைச்சர் பதிலளித்தார்.
(தொகுப்பு : எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA)- ஓட்டமாவடி.)

No comments