புத்தளம் இலவன்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்துக்கு மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட குழுவினர் விஜயம்.
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் வடக்கு கல்விக் கோட்டத்துக்கு உட்பட்ட இலவன்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்துக்கு அண்மையிலே மத்திய வங்கியின் ஆளுநர், பிரதி ஆளுநர் மற்றும் அதன் அதிகாரிகள் உள்ளிட்ட 25 பேர்களை கொண்ட குழுவினர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டனர்.
பாடசாலைக்கு விஜயம் செய்த ஆளுநரையும், பிரதி ஆளுநர் மற்றும் அதிகாரிகளையும் பாடசாலை அதிபர் ஏ.ஏ.பாரிஸ் உள்ளிட்ட பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பாடசாலை பழைய மாணவர் சங்கத்தினர் அனைவரும் இணைந்து கிராமிய பாரம்பரிய கலைகளில் ஒன்றான மாணவர்களின் கோலாட்டம் வரவேற்போடு வரவேற்றனர்.
பாடசாலைக்கு விஜயம் செய்த ஆளுநர் இதன் போது பாடசாலைக்கு மத்திய வங்கியின் சேவா வனிதா பிரிவால், 20 லட்சம் ரூபா பெறுமதியான தளபாடங்கள் மற்றும் புத்தகங்களையும் பாடசாலைக்கு அன்பளிப்பு செய்தார்.
முஸ்லிம் பாடசாலை ஒன்றுக்கு தான் முதன் முதலாக விஜயம் செய்வதில் தான் சந்தோஷப்படுவதாகவும், எதிர்காலத்தில் பாடசாலைக்கு தேவைப்படுகின்ற ஏனைய உதவிகளையும் வழங்க உள்ளதாகவும் இதன்போது ஆளுநர் தெரிவித்ததாக பாடசாலை அதிபர் ஏ.ஏ.பாரிஸ் தெரிவித்தார்.
மத்திய வங்கியின் ஆளுநர் பாடசாலை வளாகத்தில் இதன் போது பயன் தரும் மரங்களையும் நாட்டி வைத்தார்.
இலவன்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆரம்பத்திலே க.பொ.த.சாதாரண தர பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்று விகிதாசாரம் அடிப்படையில் ஆக அடிமட்டத்திலிருந்து தற்போது முதல் நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இதற்கு பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரின் அயராத முயற்சியும் ஒத்துழைப்புமே காரணம் என அதிபர் ஏ.ஏ.பாரிஸ் இதன் போது பெருமையாக தெரிவித்தார்.
பாடசாலை அதிபர் ஏ.ஏ.பாரிஸின் தந்தையும், ஓய்வு பெற்ற அதிபருமான அப்துல் அஸீஸ் அவர்களும் இதன்போது பாடசாலைக்கு சமூகமளித்து மத்திய வங்கி ஆளுனரோடு கலந்துரையாடினார்.











No comments