அருவக்காலு குப்பை விவகாரம்; புத்தளம் மக்களுக்கு அநுர அரசும் அநீதி இழைக்கிறதா? - ஐக்கிய காங்கிரஸ் கேள்வி..
ரஸீன் ரஸ்மின்
புத்தளம் அருவாக்காலு நோக்கி கொழும்பு குப்பைகளை கொண்டுவரும் அரசாங்கத் திட்டத்திற்கு எதிராக புத்தளம் மாவட்ட மக்களின் ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலிற்கும் பேராபத்தாக விளங்கக்கூடிய, கொழும்பு நகரின் குப்பைகளை புத்தளம் அருவாக்காலு பகுதியில் கொண்டு வந்து கொட்டும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு, ஐக்கிய காங்கிரஸ் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.
இது தொடர்பாக ஐக்கிய காங்கிரஸ் செயலாளர் ஸப்வான் சல்மான் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
இத்திட்டம் புத்தளம் மக்களின் வாழ்வாதாரம், நிலம், நீர் மற்றும் காற்றை தீவிரமாக பாதிக்கக்கூடியது. இதனால் சுற்றுச்சூழல் மாசு, துர்நாற்றம், நோய்த்தொற்றுகள், நிலப் பாழடைதல் போன்ற அபாயங்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, புத்தளம் மாவட்ட மக்களும் பல்வேறு அமைப்புகளும் இந்தக் குப்பை திட்டத்திற்கு எதிராக பல போராட்டங்கள், கோரிக்கைகள் மற்றும் கண்டன நடவடிக்கைகள் முன்னெடுத்துள்ளனர். இது புத்தளம் மக்களின் நீண்டநாள் எதிர்ப்பின் வெளிப்பாடாகும்.
அதேசமயம், புத்தளம் மாவட்டம் கடந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் ஆளும் தரப்புக்கு மிகுந்த ஆதரவு வழங்கிய பகுதி என்பதும் மறுக்க முடியாத உண்மை.
ஆனால், மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த அரசாங்கம், அந்த மக்களின் உண்மையான கோரிக்கையான குப்பை பிரச்சினைக்கு இதுவரை தீர்வு அளிக்காதது மிகுந்த வருத்தத்திற்குரியது.
அரசாங்கம் தற்போது சுமார் ரூ. 2.5 பில்லியன் (250 கோடி ரூபா) நிதி ஒதுக்கீடு செய்து, கொழும்பு குப்பையை புத்தளத்திற்கு கொண்டு வரும் முயற்சியை முன்னெடுத்து வருவது புத்தளம் மக்களின் விருப்பத்துக்கும் நலன்களுக்கும் முரணானது.
ஐக்கிய காங்கிரஸ், புத்தளம் மக்களின் நலனை முன்னிறுத்தி, இந்தத் திட்டத்திற்கு எதிராக தன் முழுமையான எதிர்ப்பை தெரிவிக்கிறது. மேலும், புத்தளம் மக்களும் இத்திட்டத்துக்கு எதிராக ஒன்றிணைந்து தங்கள் குரலை உயர்த்தி, புத்தளத்தின் மண், நீர், காற்றை காக்க உறுதியாக நிற்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments