பதற்றமடைந்த ட்ரம்ப். அமெரிக்காவின் அரசியல் முறைமை.
நியுயோக் மேயராக சொஹ்ரான் மம்தானி தெரிவானதன் பின்பு அமெரிக்க ஜனாதிபதியே அச்சப்படுகின்ற நிலையில் விவாதம் எழுந்துள்ளதனால் அமெரிக்காவின் அரசியல் முறைமையையும், ஜனாதிபதி, மாநில ஆளுநர், நகர மேயர் ஆகியோர்களின் அதிகாரங்கள் பற்றியும் மேலோட்டமாக ஆராய்வதுதான் இந்த கட்டுரையின் நோக்கமாகும்.
அமெரிக்கா 50 மாநிலங்களைக் கொண்ட சமஸ்டி ஆட்சிமுறையை (Federal System) பின்பற்றி வருகின்றது. இதன் அரசியலமைப்பு 1787 இல் உருவாக்கப்பட்டதுடன், ஜனாதிபதிமுறை அடிப்படையில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையில் அதிகாரங்களைத் தெளிவாக வரையறுக்கின்றது.
அமெரிக்காவின் சட்டமன்றம் “காங்கிரஸ்” எனப்படுகிறது. இது மேல் சபை (Senate), கீழ் சபை (பிரதிநிதிகள் சபை) என இரு சபைகளைக் கொண்டது.
பட்ஜெட், போர் அறிவிப்பு, வர்த்தகம், பாதுகாப்பு போன்ற விடயங்கள் மற்றும் சட்டங்களை இயற்றுவது காங்கிரசின் பொதுவான அதிகாரங்களாகும்.
அத்துடன், ஜனாதிபதி நியமிக்கும் நீதிபதிகள், அமைச்சர்கள், தூதர்களின் நியமனங்கள், சர்வதேச உடன்படிக்கைகள் ஆகியவற்றுக்கு காங்கிரசின் மேல் சபையான செனட்டின் அங்கீகாரமின்றி நடைமுறைப்படுத்த முடியாது.
ஜனாதிபதி அமெரிக்காவின் மாநிலங்களின் தலைவர், அரசுத் தலைவர் மற்றும் படைத்தலைவர் ஆவார்.
மத்திய அரசின் அனைத்து துறைகளையும் மேற்பார்வை செய்தல், சட்டங்களை நிறைவேற்றுதல், வெளிநாட்டு கொள்கை மற்றும் தூதரக நடவடிக்கைகளை வழிநடத்துதல், ராணுவத்தை கட்டுப்படுத்துதல், உச்சநீதிமன்ற நீதிபதிகள், அமைச்சர்கள், தூதர்கள் ஆகியோரை நியமித்தல், அவசரகால பிரகடனம் மற்றும் மன்னிப்பு வழங்கும் அதிகாரம் போன்றன ஜனாதிபதிக்குள்ள முக்கிய அதிகாரங்களாகும்.
மாநில கவர்னர் (The Governor):
ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி அரசமைப்பும், சட்டமன்றமும் உள்ளதுடன், அதன் நிர்வாகத் தலைவராக “கவர்னர்” உள்ளார். கவர்னர் பதவியானது இந்தியாவின் மாநில முதலமைச்சருக்கு ஒப்பானது,
மாநில சட்டங்களை அமல்படுத்துதல், காவல் துறை மற்றும் தேசிய காவல் படையை கட்டுப்படுத்தல், நிர்வாக அதிகாரிகளை நியமித்தல், சட்டமன்றத்தைக் கூட்டுதல் அல்லது கலைத்தல், மன்னிப்பு வழங்குதல் போன்ற மாநில அதிகாரங்கள் கவர்னருக்கு உள்ளது.
நகர மேயர் (The Mayor):
அமெரிக்காவில் பெரிய நகரங்கள் அனைத்தும் நகராட்சி அரசுகள் (Municipal Governments) ஆகும். இதன் மேயர் நகரத்தின் தலைவராக இருப்பார். நியூயோர்க், சிக்காகோ, லொஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களில் மிகுந்த நிர்வாக அதிகாரம் பெற்றுள்ளதுடன், மாநில ரீதியில் செல்வாக்கு கொண்டதாகவும் உள்ளது.
நகர நிர்வாகம், காவல்துறை, போக்குவரத்து, கழிவு மேலாண்மை ஆகியவற்றை நேரடியாகக் கட்டுப்படுத்துதல், நகர நிதி, வரி, மற்றும் மேம்பாட்டு திட்டங்களை வடிவமைத்தல், அவசரநிலைகளில் நேரடி தீர்மானங்கள் எடுத்தல் போன்றன மேயரின் முக்கிய அதிகாரங்களாகும்.
மத்திய அரசும், மாநில அரசுகளும் தங்களுக்குரிய துறைகளில் முழு தன்னாட்சியுடன் இயங்குகின்றன. அதிபர், கவர்னர், மேயர் என மூன்று நிலைகளில் நிர்வாகத் தலைவர்கள் இருப்பது அமெரிக்க அரசியலமைப்பின் தனித்துவம் ஆகும். இதுவே அந்த நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு அடிப்படையாகக் கருதப்படுகிறது. இந்த நிலையில் மம்தாணியின் வெற்றியினால் ஜனாதிபதி ட்ரம்ப் பதட்டமடைவதில் எந்தவித நியாயமுமில்லை.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

No comments