Breaking News

இஸ்ரேலை அங்கீகரிக்காத சவூதி அரேபியா : வரலாற்று, கொள்கை நிலைப்பாடு

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) - ஓட்டமாவடி.

மேற்குலக நாடுகளின் தேவையின் அடிப்படையில், ஐக்கிய நாடுகள் சபையில் 1948ம் ஆண்டு பாலஸ்தீன தேசத்தின் நிலப்பரப்புக்குள் இஸ்ரேல் என்ற ஒரு நாடு அங்கீகரிக்கப்பட்டது. 


ஆயினும், பாலஸ்தீன தேசத்திற்குள் உருவாக்கப்பட்ட இஸ்ரேலை அன்று முதல் இன்று வரை அரபு உலகம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதில் முதன்மையான நாடான சவூதி அரேபியா இஸ்ரேலை நாடாக அங்கீகரிக்காமல் தனது எதிர்ப்பை தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருகிறது.


சவூதி அரேபியாவின் தற்போதைய நிலைப்பாடு: நிபந்தனையுடன் கூடிய அங்கீகாரம் தற்போதுள்ள இஸ்ரேல்-பாலஸ்தீன உடன்படிக்கை சூழலிலும் கூட, சவூதி அரேபியாவின் நிலைப்பாடு மிகத்தெளிவாகவுள்ளது.


பாலஸ்தீனம் 1967ம் ஆண்டு எல்லைகளுடன் கிழக்கு ஜெரூசலமைத்தலைநகராகக்கொண்ட ஒரு நாடாக அங்கீகரிக்கப்படாத வரை இஸ்ரேலை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுவே இஸ்ரேலுடன் உறவுகளை இயல்பாக்குவதற்கான சவூதி அரேபியாவின் முதன்மையான நிபந்தனையாகும்.


அதே சமயம், "அகண்ட இஸ்ரேல்" திட்டத்தை சவூதி அரேபியா கடுமையாக எதிர்க்கிறது. பாலஸ்தீன மக்களுக்கெதிராக இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதோடு, சர்வதேசளவில் இஸ்ரேலின் போக்கிற்கெதிரான ஆதரவைத்திரட்டி பாலஸ்தீனத்தை அதன் எல்லைகளுடன் ஒரு நாடாக அங்கீகரிப்பதற்கான முயற்சிகளைத் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகிறது.


அரபுலகின் ஒரு பலமான நாடாக சவூதி அரேபியா திகழ்வதால் இஸ்ரேல் விவகாரத்தில் அது அதிக அக்கறை கொண்ட நாடாகச்செயற்படுகிறது. இஸ்ரேல் உருவாக்கப்பட்ட 1948ம் ஆண்டு முதல் அரபு உலகின் சக்தி வாய்ந்த நாடாக இருந்ததால் இஸ்ரேல் விவகாரங்களில் சவூதி அரேபியா எப்போதும் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.


சவூதி தலைவர்களின் வரலாற்று நிலைப்பாடுகள் அன்றிலிருந்து இன்று வரை சவூதி தலைவர்களின் நிலைப்பாடுகள் பாலஸ்தீன உரிமைகளுக்கான அவர்களின் உறுதிப்பாட்டைப் பின்வருமாறு வெளிப்படுத்துகின்றன:


 *மன்னர் அப்துல் அஸீஸ் இப்னு சௌத் (சவூதி அரேபியாவின் நிறுவனர்): 

1937ல் சியோனிச யூதர்களை "இறைவனால் சபிக்கப்பட்ட இனம்," "இஸ்லாத்திற்கும் நபி முஹம்மதுக்கும் எதிரிகள்" என்று கடுமையாக விமர்சித்தார்.


 *மன்னர் பைஸல் பின் அப்துல் அஸீஸ் அல் சௌத்: 1966ல், "நாங்கள் யூதர்களின் மதத்திற்கு எதிரானவர்களல்ல, ஆனால், சியோனிஸ்ட்களுக்கும் சியோனிஸ்டுகளுக்கு உதவும் யூதர்களுக்கும் எதிரானவர்கள்" எனக்குறிப்பிட்டார்.


 *இளவரசர் துர்க்கி பின் பைசல் பின் அப்துல் அஸீஸ் அல் சௌத்:

   *2020ம் ஆண்டில், "இஸ்ரேலுடன் உறவுகளை இயல்பாக்குவதற்கான விலை, ஜெரூசலத்தை தலைநகராகக்கொண்ட ஒரு இறையாண்மை கொண்ட பாலஸ்தீன அரசை உருவாக்குவதேயாகும்" என வலியுறுத்தினார்.


   *2025ல், இஸ்ரேலியப் பிரதமரான நெதன்யாகுவை "ஒரு இனப்படுகொலை செய்யும் கொலைவெறி மனநோயாளி" என்று கடுமையாகச்சாடினார்.


 *மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ்: 

இவர் 1967ம் ஆண்டு எல்லைகளுடன் கிழக்கு ஜெரூசலத்தை தலைநகராகக்கொண்ட ஒரு சுதந்திர பாலஸ்தீன அரசை ஆதரிப்பதுடன், இஸ்ரேலுடன் உறவுகளை ஏற்படுத்துவதற்கெதிராகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.


 *பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மான்:

*பாலஸ்தீன அரசை உருவாக்காமல் இஸ்ரேலுடன் உறவை நிறுவமாட்டோம்" என உறுதியாகத் தெரிவித்தார்.

  *காசாவில் இஸ்ரேல் செய்யும் நடவடிக்கைகளை "இனப்படுகொலை" என கடுமையாகக் கண்டித்துள்ளார்.

   

சவூதி அரேபியாவின் நிலைப்பாடு - நம்பிக்கைக்கெதிரான மாயையா?


பாலஸ்தீனத்தின் காசா மக்களின் மோசமான நிலையைக்கண்டு மக்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கும் சூழலில், சவூதிக்கும் இஸ்ரேலுக்குமிடையே இரகசிய உறவுகள் இருப்பதாகச் சவூதி அரேபியாவின் எதிரிகள் பொய்யான செய்திகள் பரப்பப்பட்டன.


ஆனால், சவூதி அரேபியாவின் வரலாற்று நிலைப்பாடுகள், அதன் தலைவர்களின் தொடர்ச்சியான உறுதிமொழிகள் மற்றும் புனித இஸ்லாமியக் கோட்பாடுகளின் தாக்கம் ஆகியவற்றை நாம் ஆழமாகப் பார்க்கு ம்போது, இஸ்ரேலுடன் அது இரகசியமாக உறவு வைத்திருக்கிறது என்ற விமர்சனம் ஒரு மோசமான அவதூறாகவும் (vicious criticism) மற்றும் வெறும் மாயையாகவும் மட்டுமே பார்க்க முடியும்.


காசா பகுதியில் சியோனிச யூதர்கள் நடத்தும் பெரும் கொடுமைகளை இஸ்லாமிய உலகத்தின் மையமாகத் திகழும் சவூதி அரேபியா ஒரு போதும் கண்டும் காணாமலிருக்கவோ அல்லது கொடுமை செய்யும் இஸ்ரேலுடன் மறைமுகமாக உறவைப்பேணவோ அதன் அநீதிகளுக்கு உடைந்தையாக இருக்கவோ ஒரு போதும் விரும்பாது.


அநீதிக்குத் துணை போவது இஸ்லாத்தில் கண்டிக்கத்தக்கது

அநியாயக்காரர்களுக்குத் துணை நிற்பதென்பது இஸ்லாத்தின் அடிப்படைக்கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானது. அநீதியிழைப்போருக்குச் சாய்ந்து விடக்கூடாதென்று அல்லாஹ் அல்குர்ஆனில் மிகக்கடுமையாக எச்சரிக்கின்றான்:


 "அநீதி இழைத்தோரின் பக்கம் நீங்கள் சாய்ந்து விடாதீர்கள்; (அப்படியானால்,) உங்களை நரக நெருப்பு தீண்டி விடும். அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த உதவியாளர்களும் இல்லை; (நீங்கள் சாய்ந்துவிட்டால்) நீங்கள் உதவப்படமாட்டீர்கள்."

அல்குர்ஆன் (11:113)


மேலும், முஸ்லிம்கள் அனைவரும் ஒரு உடலைப் போன்றவர்கள் என நபி (ஸல்) வலியுறுத்தியுள்ளார்கள். ஒரு பகுதி துன்பப்படும் போது ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயமும் அதற்குப்பதில் சொல்ல வேண்டும்.


 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

"உடல் உறுப்புகளில் ஒன்று நோய்வாய்ப்பட்டால், அதனால் இரவிலும் பகலிலும் மற்ற உறுப்புகளும் விழித்திருந்து காய்ச்சலால் பாதிக்கப்படுவது போல, விசுவாசிகள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதிலும் கருணை காட்டுவதிலும் இரக்கம் காட்டுவதிலும் ஒரு உடலைப்போன்றவர்கள்."

ஸஹீஹ் முஸ்லிம் (2586)


இவ்வசனங்களும், நபிமொழியும் சவூதி அரேபியா மீதுள்ள இஸ்லாமியக்கடமையை தெளிவாக உணர்த்துகின்றன. பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களின் பக்கம் நின்று இறுதி வரை நீதிக்காகப் போராடவும் அமைதியை ஏற்படுத்தவும் உரிமைகளோடு வாழ வைக்கவுமே பாடுபடுவார்கள்.


சவூதி அரேபியாவின் இறுதி முடிவு

இத்தகைய உன்னதமான இஸ்லாமிய உணர்வுகளையும், அரபு தேசிய உணர்வையும் வரலாற்றுப்பொறுப்பையும் கொண்ட சவூதி அரேபியா மீது, இஸ்ரேலுடன் மறைமுக உறவென்பது அதன் பிராந்திய எதிரிகளால், அதன் தலைமைத்துவத்தின் மீது களங்கம் கற்பிப்பதற்காகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட மிக மோசமான விமர்சனமாகும்.


சவூதி அரேபியா, இஸ்ரேலை நாடாக அங்கீகரிக்காதது ஒரு நேர்மையான, கொள்கை ரீதியான மற்றும் வரலாற்றுபூர்வமான நிலைப்பாடாகும். இந்நிலைப்பாடு, பாலஸ்தீன உரிமைகளுக்கான ஆதரவு, அரபு உலகின் ஒற்றுமை மற்றும் அரபு-இஸ்ரேல் பிரச்சினையை அமைதியான முறையில் தீர்க்க வேண்டுமென்ற விருப்பத்தை வெளிப்படுத்துகிறது.


தற்போதைய உடன்படிக்கை சூழலிலும் சவூதி அரேபியாவின் இறுதி முடிவு:

 *சுதந்திர பாலஸ்தீன அரசு: 

1967ம் ஆண்டு எல்லைகளுடன் கூடிய, கிழக்கு ஜெரூசலத்தைத் தலைநகராகக் கொண்ட ஒரு சுதந்திர, இறையாண்மை கொண்ட பாலஸ்தீன அரசு அங்கீகரிக்கப்பட வேண்டும்.


 *பிராந்திய அமைதி: 

பாலஸ்தீன பிரச்சினைக்கு நியாயமான மற்றும் நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டும்.


இந்த இரண்டு நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்ட பின்னரே சவூதிக்கும் இஸ்ரேலுக்குமிடையேயான உறவுகளை இயல்பாக்குவது சாத்தியமாகும் என்ற தெளிவான செய்தியை இது உலகுக்கு வழங்குகிறது. 


சவூதி அரேபியா பாலஸ்தீன விடுதலைக்கான அதன் முயற்சியிலிருந்து சற்றும் பின்வாங்கவில்லை. அதன் அனைத்து நடவடிக்கைகளும் அநீதிக்குத் துணைபோகாமல் நீதிக்காகக்குரல் கொடுக்கும் இஸ்லாமியக்கடமையை அடிப்படையாகக் கொண்டவையாகவே காணப்படும்.




No comments