சுற்றுச்சூழல் சிரமதான பணிகளில் ஒவ்வொரு தனி மனிதனும் முழுமையான பங்களிப்பை வழங்க முன் வரவேண்டும். புத்தளம் மாநகர சபையின் மேயர் தெரிவிப்பு.
எம்.யூ.எம்.சனூன்
"சுற்றுச்சூழல் சிரமதான பணிகளில் மாநகர சபையை மாத்திரம் தங்கி இருக்காமல் ஒவ்வொரு தனி மனிதனும் தனது முழுமையான பங்களிப்பை வழங்க முன் வரவேண்டும்" என புத்தளம் மாநகர சபையின் மேயர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத் தெரிவித்தார்.
புத்தளம் முன்பள்ளி ஆசிரியைகள் சங்கத்தின் மாதாந்த அமர்வு புத்தளம் சவீவபுரத்தில் அமைந்திருக்கின்ற முன்பள்ளி ஆசிரியர்கள் பயிற்சி நிலையத்தில் இன்று வியாழக்கிழமை (06) பிற்பகல் நடைபெற்ற போது அங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முன்பள்ளி ஆசிரியைகள் சங்கத்தின் தலைவி அமிதா எதிரிசிங்க தலைமையில் நடைபெற்ற இந்த மாதாந்த கூட்டத்தில் புத்தளம் மாநகர சபையின் சமூக அபிவிருத்தி அதிகாரி திருமதி ரதி பிரதீப், முன்பள்ளிகளுக்கான பொறுப்பதிகாரி திருமதி தயானி உள்ளிட்ட முன்பள்ளிகளின் பொறுப்பாசிரியர்களும் கலந்து கொண்டனர்.
மாநகர மேயர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
புத்தளம் நகரில் இந்த சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விடயத்தில் நாம் முழு வீச்சாக இறங்கியுள்ளோம். இது விடயத்தில் முன்பள்ளி ஆசிரியர்கள் எம்மோடு இணைந்து பணியாற்ற முன்வரவேண்டும்.
முன்பள்ளியில் கல்வி பயிலும் சிறார்கள் மத்தியில் சுத்தம் சுகாதாரம் தொடர்பாக தெளிவு படுத்த வேண்டும்.
சுத்தம் தொடர்பாக இஸ்லாம் சமயம், "சுத்தம் ஈமானின் பாதி" என தெளிவாக குறிப்பிடுகிறது. அந்த வகையிலே எதிர்காலத்தில் மாநகர சபை மேற்கொள்ளும் சிரமதான பணிகளில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
மாநகர சபையின் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டவுள்ளதால் முன்பள்ளிகளுக்கான வரப்பிரசாதமாக இணைத்துக்கொள்ளும் பொருட்டு உங்கள் முன்மொழிவுகளை அவசரமாக சமர்ப்பிக்குமாறும் மேயர் இதன்போது தெரிவித்தார்.




No comments