புத்தளத்தில் ஆன்மீக கல்வியையும், லௌஹீக கல்வியையும் வளர்த்த அதிபர் இஸட். ஏ. சன்ஹீர் 36 வருட கால அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.
அக்கறைப்பற்று பிரதேசத்தில் காணப்படக்கூடிய கல்விமான்களின் வரிசையில் இஸட். ஏ. சன்ஹீர் இப்பிராந்தியத்தில் ஆன்மீக ரீதியாகவும், லௌஹீக ரீதியாகவும் அளப்பறிய சேவையாற்றி பல கல்விமான்களையும், பல உலமாக்களையும் உருவாக்கியதில் அரும்பாடுபட்ட ஒரு அதிபர். அவர் இத்துறை மாத்திரமன்றி சமூகத் தொண்டுகளிலும் சேவையாற்றிய ஒரு உத்தமராவார் என்பதை அவர் வகித்த பதவிகள் அவற்றுக்கு சான்றுகளாக ஆகின்றன. எனவே அவர் பற்றி ஒரு சில முக்கியமான தகவல்களை இப்பதிவில் பதிவிடலாம் என நினைக்கின்றேன்.
இவர் கனமூலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செய்னுல் ஆப்தீன், நபீலா உம்மா தம்பதிகளின் ஏழு பிள்ளைகள் உள்ள சாதாரண குடும்பத்தில் முதலாவது பிள்ளையாக பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை பு/கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தொடர்ந்த இவர் தரம் ஏழு வரை கற்றார். சிறுவயதிலேயே மார்க்க அறிவை கற்க வேண்டும் என்ற ஆர்வமும், இவரது ஆசையும் ஏழாம் தரம் வரை கற்று விட்டு 1978 - 1979 வரை மாதம்பை இஸ்லாஹியா (கியாபி) மார்க்க கல்வியை தொடர்ந்த இவர் 1979 - 1986 வரை மகரகம கபூரியா அறபுக் கல்லூரியில் கற்று அல் - ஆலிம் பற்றத்துடன் மௌலவியாக வெளியேறினார். அன்று முதல் இவர் இப்பிராந்தியங்களிலே காணப்படும் மாணவர்களை அடயாளம் கண்டு அவர்களை ஹாபிழ்களாகவும், ஆலிம்களாகவும் உருவாக்குவதற்காக அரும்பாடு பட்டதுடன், அவர்களுக்கு பொறுத்தமான அரபு கலாசாலைகளில் கொண்டு சேர்த்து அவர்களுக்கு பொருளாதார ரீதியாக கஷ்ட்டப்பட்ட மாணவர்களுக்கு உதவியும் செய்தார் என்பதும் இங்கு குறிபிட வேண்டிய விடயமாகும்.
1989.09.01 ஆம் திகதி தான் ஆரம்ப கல்வி கற்ற பாடசாலையான கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அரச பணியில் இணைந்து ஆரம்ப கல்வி உதவி ஆசிரியராக கடமையேற்று அப்பாடசாலையில் மார்க ரீதியான விடயங்களையும், கற்றல் கற்பித்தலோடு பௌதீக வள மேம்பாட்டுக்கும் அன்றைய அதிபர் அவர்களோடு கைகோர்த்து முன்னேற்ற பாடசாலையாக திகழ்வதற்கு முன்னின்றார். அங்கு 2002 - 2006 வரை அப்பாடசாலையின் பிரதி அதிபராக செயற்பட்ட அவர், அதிபர் தரத்தைப் பெற்று 2006.06.13 - 2013.06.27 வரை அப்பாடசாலையின் அதிபராக கடமையாற்றியதுடன், அப்பாடசாலை இப்பிராந்தியங்களில் காணப்படும் பாடசாலைகளில் ஒரு சிறந்த பாடசாலையாக மாறுவதற்கு தன்னை அர்ப்பணித்தார். இக்காலத்தில் இப்பாடசாலை கா. பொ. த. சாதாரண தரத்திலும், கா. பொ. த. உயர் தரத்திலும் சிறந்த பெறுபேறுகளைப் பெறறது இதற்கு சான்றாகும்.
2013.06.27 - 2025.11.06 வரை பு/ கஜுவத்தை முஸ்லிம் அரசினர் வித்தியாலத்தில் அதிபர் பொறுப்பை பொறுப்பேற்று மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்பட்ட அப்பாடசாலையை ஒரு தரமான பாடசாலையாகவும், பௌதீக வளங்களில் காணப்பட்ட குறைபாட்டை நிவர்த்தி செய்ததுடன் கல்வி பெறுபேறுகளை உயர்த்துவதற்கும் தன்னை அர்ப்பணித்து செயற்பட்டார். மேலும் இவர் இப்பிராந்தியத்திலேயே சமூகப் பணிக்கென தமது கிராமத்துக்கு வெளியிலும் பல சேவைகளை செய்தார் என்பதற்கு பின்வரும் காரணங்களைக் குறிப்பிடலாம்.
1994 - 1998 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா அக்கறைப்பற்று கிளையின் செயலாளராக கடமை புரிந்துள்ளார்.
1992 ஆம் ஆண்டு புத்தளம் மாவட்ட அகதியா சம்மேளத்தின் செயலாளராகவும், அதே காலத்தில் கனமூலை அகதியா ஸ்தாபகராகவும், அதன் அதிபராகவும் செயற்பட்டார்.
இவைதவிர இவரது குத்பா பிரசங்கம் மக்களை நேர்வழியில் காட்டுவதற்கும் இவரது பிரச்சார பாணியும் மிகக் கவர்ச்சிகரமாக இருக்கும் அந்தவகையில் புத்தளம் பெரிய பள்ளி, கனமூலை பெரிய பள்ளி, கடையாமோட்டை ஜாமிவுல் உமர் ஜும்ஆ மஸ்ஜித் ஆகியவற்றில் பேஷ் இமாமாக கடமையாற்றி மார்க்க ரீதியாக புரட்சிகரமான மாற்றங்களையும் செய்துள்ளார்.
இதற்கு மேலாக அக்கறைப்பற்றுக்கென ஒரு குர்ஆன் மத்ரசாவை உருவாக்கி பல உலமாக்களை இப்பிராந்தியங்களில் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அவரது அடிமனதில் இருந்ததன் காரணத்தினால் பல்வேறு முயற்சிக்கு மத்தியில் 1997.06.28 ல் அவர் கடையாமோட்டை அர் - ரஷீதியா அறபுக் கல்லூரியை ஸ்தாபித்து அதனை இன்று ஒரு பாரிய கலாசாலையாக மாறுவதற்கு அன்னார் முக்கிய காரணம் என்பது தெளிவு.
இவரது எண்ணத்தில் தோன்றிய மற்றொரு சிந்தனையாக ஆங்கில கல்வி மூலம் உலமாக்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தோன்றிய இவர் பிரபல தொழிலதிர் என். எம். சித்தீக் ஹாஜியார் அவர்களோடு கைகோர்த்து சித்தீக் சர்வதேச கலாபீடத்தை உருவாக்குவதில் முன்னணியாக திகழ்ந்து அதன் பணிப்பாளராக செயற்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏழு பிள்ளைகளைக் கொண்ட இவர் ஒரு குடும்பத் தலைவராக செயற்பட்டார் என்பதற்கு ஒவ்வொரு பிள்ளைகளையும் சிறந்த கல்வி மான்களாகவும், ஒழுக்கமுள்ளவர்களாகவும் உருவாக்கி சமூக சேவை சேவையாளர்களாக சமூகத்துக்கு வழங்கியிருப்பது மற்றுமொரு சான்றாக இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகின்றேன்.
இவரது மீதியான காலத்தை அல்லாஹ்தஆலா நீண்ட ஆயுளையும், உடல் ஆரோக்கியத்தையும், நிறைந்த செல்வத்தையும் வழங்க வேண்டும் என்று வல்ல இறைவனிடம் பிராத்திக்கின்றேன்.
நன்றி
ஏ. எச். பௌசுல் ஆசிரியர்
பு/கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி.

No comments