அறிவு ஏந்தி ஊடகத்துறையை வளமாக்குவோம்" எனும் தொனிப்பொருளில் விருது வழங்கும் விழா.
எம்.யூ.எம்.சனூன்
"அறிவு ஏந்தி ஊடகத்துறையை வளமாக்குவோம்" எனும் தொனிப் பொருளின் கீழ் முதன் முறையாக ஸ்கை லைன் ஊடக நிறுவனத்தின் மூலம் இடம்பெற்ற விருது வழங்கும் விழா அண்மையில் குருநாகல் வடமேல் மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
திறமைக்கு முதலிடம் அளிக்கும் வகையில் தேடல் திறன் மிக்க மாணவர் சமுதாயத்தை கட்டியெழுப்பும் வகையில், நாடு முழுவதும் பல்வேறு போட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வெற்றிவாகை சூடியவர்களுக்கான கெளரவிப்பு விழா பிரம்மாண்டமான முறையில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் இடம்பெற்றது.
ஸ்கை லைன் ஊடக நிறுவனம் தனது பயணத்தை அதிகார பூர்வமாகத் தொடங்கியதுடன், நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் சமூகத்தில் பல துறைகளில் பங்காற்றியவர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப் பட்டது. நிறுவனம் தனது முதலாவது முயற்சியாக ஏற்பாடு செய்திருந்த தேசிய அளவிலான கௌரவிப்பு விழா இதுவாகும்.
இந்த நிகழ்ச்சி, நிறுவன ஸ்தாபகரும், சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் பிரதிப் பணிப்பாளருமான செல்வி நுஹா முஸம்மிர் தலைமையில் மிக கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக எப்.என்.மீடியா நெட்வேர்க் நிறுவனத்தின் உரிமையாளரும், கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் சக்தி தொலைக்காட்சி மற்றும் சிரச தொலைக்காட்சி ஊடக அமைப்பின் குருணாகல் மாவட்ட செய்தியாளரும், சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் குழும பனிப்பாளர் மற்றும் ஊடகப் பணிப்பாளருமான ஏ.டபில்யூ.எம். பஸ்லான், கராத்தே கலை பயிற்றுவிப்பாளர் இம்ரான் வஹ்ஹாப், சர்வதேச வாழ்க்கை திறன் பயிற்சியாளர் உளவியல் ஆலோசகர் டாக்டர் ருக்ஷனா ஜவாஹிர், என்.ஜீ.டீ. நிறுவனத்தின் ஸ்தாபக தலைவி செல்வி அம்னா ஹலீம், ஒய்ஸ் ஒப் ராபிக் சமூக வலைதள உரிமையாளர் ஆர்.எம்.ராபிக் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
நாடளாவிய ரீதியில் இருந்து வருகை தந்திருந்த மாணவ மாணவிகள், பெற்றோர்கள், சமூகவியலாளர்கள், ஊடக நிறுவன ஸ்தாபகர்கள், தொழிலாளர்கள், நலன் விரும்பிகள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
அகில இலங்கை ரீதியாக இடம்பெற்ற போட்டி நிகழ்ச்சிகளான சித்திரம், மருதானி இடல், கவிதை, பொது அறிவு, அறிவிப்பாளர் போட்டி, கட்டுரை, கிராஅத், நடனம், பாடல், செய்தி வாசிப்பு,
புகைப்பட கலை, வானொலி அறிவிப்பு, அரபு எழுத்தனி,பேச்சு, சிறுவர் ஆளுமை போட்டிகள் என அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியவாறு போட்டி நிகழ்ச்சிகள் அமைந்திருந்தன.
இதன் போது விழாவை மகிழ்ச்சியூட்டும் வகையில், கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்தப்பட்டன. இசை, நடனம் மற்றும் கலை நிகழ்வுகள் மூலம் மாணவர்களின் திறமைகள் மேடையேற்றப்பட்டன.
மேலும், சிறப்பு பங்களிப்பு செய்திருந்த அதிதிகளையும் சமூகத்தில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தவர்களையும் கௌரவிக்கும் வகையில் கௌரவ விருதுகள் இதன் போது வழங்கப்பட்டன.
இதன்போது மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் மாணவர்களால் உருவாக்கப்பட்ட ஆக்கங்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன.
இறுதியாக ஸ்கை லைன் ஊடக நிறுவனத்தின் அங்கத்தவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
No comments