Breaking News

புத்தளத்தில் போதைக்கு எதிரான பவர் புட்சால் போட்டித்தொடர்.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் அமைப்பான "பவர் 90" பழைய மாணவர் குழுவினர் ஏற்பாடு செய்த போதைக்கு எதிரான பவர் புட்சால் போட்டித்தொடர் அண்மையில் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி மைதானத்தில் நள்ளிரவு வரை வெகு விமரிசையாக நடைபெற்றது.


31 இளம் அணிகள் பங்கேற்புடன், ஊரின் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அரங்கில் திரண்டிருந்த மேற்படி நிகழ்வில், விளையாட்டுடன் இணைந்ததாக பல்வேறு போதைக்கெதிரான மனோநிலைகளை உருவாக்கும் நிகழ்வுகளும் இணைக்கப்பட்டிருந்தன.


31 அணிகள் பங்குபற்றிய மேற்படி போட்டியில் இறுதிப்போட்டிக்கு சாஹிராவின் பழைய மாணவர் குழுவினரான சிகோன் மற்றும் இஸட் 14 அணிகள் தகுதிபெற்றன.


பலத்த போட்டிக்கு மத்தியில் பெனால்டி முறையில் சிகோன் அணி 02 : 00 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை சுவீகரித்துக்கொண்டது.


சிறுவர்கள் போதைக்கெதிரான கோஷங்களை செய்ததும், போதைப்பொருட்களின் மாதிரிகள் மாணவர்களால் உடைக்கப்பட்டதும், அரங்கின் மையத்தில் பாரிய போதை உருக்கள் வைக்கப்பட்டு உதைப்பந்தால் தகர்க்கப்பட்டதும், உள்ளம் தொடும் சில உரைகள் நிகழ்த்தப்பட்டதும் அவற்றுள் சிலவாகும்.


புத்தளம் மாநகரத்தின் மேயர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத் பிரதம அதிதியாக பங்கேற்ற மேற்படி நிகழ்வில், கெளரவ அதிதிகளாக புத்தளம் சாஹிரா கல்லூரி அதிபர் ஐ.ஏ.நஜீம், புத்தளம் மாநகர சபை உதவி மேயர் எம்.என்.எம்.நுஸ்கி, மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.


நிகழ்வின் அனுசரணையாளர்களுக்கும், நண்பர்களுக்கும், ஊடக உதவி நிறுவனங்களுக்கும் இந்த நிகழ்விற்கு பக்கபலமாக இருந்த சகல உறவுகளுக்கும் பவர் 90 அமைப்பின் தலைவர் கவிஞர் "புத்தளம் மரிக்கார்" மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.











No comments