Breaking News

பல்கலைக்கழக உதவிப் பதிவாளர், உதவி நிதியாளர் பதவிகளுக்கான பரீட்சை; மொழிபெயர்ப்பு பிழையால் தமிழ் மொழி மூலப் பரீட்சாத்திகளுக்கு பாதிப்பு.!

(அஸ்லம் எஸ்.மெளலானா)

பல்கலைக்கழகங்களில் நிலவும் உதவிப் பதிவாளர் மற்றும் உதவி நிதியாளர் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடாத்தப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் தமிழ் மொழி மூல வினாத்தாள்களில் மொழிபெயர்ப்பு தவறு இடம்பெற்றிருந்தமையால் தமிழ் மொழி மூல பரீட்சாத்திகள் பாதிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி, கல்வி அமைச்சர் ஆகியோரதும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினதும் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.


பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் கடந்த ஆகஸ்ட் மாதம் 23, 24, 30, 31 ஆம் திகதிகளில், கொழும்பில் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழி மூலம் நடாத்தப்பட்டது.  இதன்போது சிங்கள, ஆங்கில மொழி மூல வினாக்களுக்கும் தமிழ்மொழி மூல வினாக்களுக்கும் இடையே பாரிய மொழி பெயர்ப்பு தவறுகள் இடம்பெற்றிருந்தமை காரணமாக தம்மால் திருப்தியாக விடை எழுத முடியாமல் போனதாக தமிழ் மொழி மூல பரீட்சாத்திகள் சுட்டிக்காட்டுகின்றனர்.


பொதுவாக அரசாங்க பொதுப் பரீட்சைகள் தொடர்பான வினாக்கள் சிங்கள மொழி மூலம் தயாரிக்கப்பட்டு பின்னர் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளுக்கு மாற்றம் செய்யப்படுகிறது.


மொழிகளுக்கிடையே ஏதும் ஒவ்வாமை காணப்பட்டால் சிங்கள மொழி மேலோங்கும் என அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது.


இந்நிலையில் வினாத்தாள்களில் ஏற்பட்ட மொழிபெயர்ப்பு தவறினால் இப்பரீட்சையில் சில புள்ளிகள் குறைவாகப் பெற்று, வெட்டுப் புள்ளிகள் தீர்மானிக்கப்படும் போது தாம் பாதிக்கப்படலாம் என்று அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.


யாழ்ப்பாணம், வவுனியா, கிழக்கு, தென்கிழக்கு பல்கலைக் கழகங்களில் இருந்து தமிழ் மொழி மூலம் தோற்றிய பரீட்சார்த்திகளுக்கே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.


பரீட்சைகள் தொடர்பான 1968 ஆம் ஆண்டின் பொதுச்சட்டம் மற்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் ஆலோசனை பெறப்பட்டு உடனடித் தீர்வு வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்படுவதுடன் அதுவரை புள்ளிகள் வெளியிடப்படக் கூடாது எனவும் மொழிபெயர்ப்பு தவறு காரணமாக வினாத்தாள்களில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வாக குறித்த வினாக்களுக்கு விடை எழுதிய சகல பரீட்சார்த்திகளுக்கும் அவ்வினாக்களுக்கு வழங்கப்பட வேண்டிய முழுப்புள்ளிகளும் வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்படுகிறது.





No comments