Breaking News

தேசிய கல்வியியற் கல்லூரிக்கான வர்த்தமானி இன்னும் இல்லை; A/L சித்தி பெற்ற மாணவர்களுக்கு அநீதி.!

(அஸ்லம் எஸ்.மெளலானா)

நாடாளாவிய ரீதியிலுள்ள தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு ஆசிரிய பயிலுநர்களை அனுமதிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் இதுவரை வெளியிடப்படாமை காரணமாக  2023/24 ஆம் கல்வியாண்டில் உயர்தரத்தில் சித்தி பெற்ற சுமார் 8,000க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கடுமையான அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கல்வி நிருவாக சேவை சங்கம் தெரிவித்துள்ளது.


பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களும் கல்லூரிகளை தேர்ந்தெடுப்பதால், குறித்த மாணவர்களுக்கும் கடுமையான அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் ஆலோசகரும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட கல்விப் பணிப்பாளருமான ஏ.எல்.எம். முக்தார் இது பற்றி மேலும் கூறுகையில்; 


புதிய கல்வி சீர்திருத்தத்தில் கல்விக் கல்லூரி மாணவர்களுக்கான பொருத்தமான பாடத்திட்டம் தயாரிக்கப்படாததால், வர்த்தமானி வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என தாம் அறிய வருவதாகவும் புதிய கல்விச் சீர்திருத்தம் அமுலாகும் வரை இம்மாணவர்களின் நிலை என்னவாகும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார். 


நாட்டிற்கு தேவையான ஆசிரியர்களில் 70 சதவீதமான பாடசாலை ஆசிரியர்கள் கல்வியியற் கல்லூரிகள் மூலமாகவே உருவாக்கப்படுகிறார்கள் என்றும் ஆட்சேர்ப்பில் ஏற்படும் இந்த தாமதம் காரணமாக, எதிர்காலத்தில் ஆசிரியர் பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


தற்போது கல்லூரிகளில் பயிற்சி பெறும் மாணவர்களில் ஒரு குழு எதிர்வரும் ஒக்டோபர் 13 ஆம் திகதி பாடசாலைகளுக்கு அனுப்பப்படும், மற்றொரு குழு அடுத்த ஆண்டு (2026) ஜூலை மாதத்துக்குள் பாடசாலைகளுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.


மாணவர் சேர்ப்பு விரைவாக மேற்கொள்ளப்படா விட்டால், அடுத்த ஆண்டு ஜூன் மாதமாகும் போது ஒரு குழுவேனும் கல்வியியற் கல்லூரிகளில் இல்லாத சூழ்நிலை ஏற்படும்.


ஏற்கனவே நாடளாவிய ரீதியில் 30,000 க்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக கல்வியமைச்சின் புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ள நிலையில் கல்விக்கல்லூரி அனுமதி வழங்கப்படாமை காரணமாக நிலைமை மேலும் மோசமடையும் எனவும் இலங்கை கல்வி நிருவாக சேவை சங்கத்தின் ஆலோசகரான ஏ.எல்.எம். முக்தார் தெரிவித்தார்.





No comments