Breaking News

தேசிய அடையாளத்தை வெளிப்படுத்துவதனை ஏன் தடைசெய்ய வேண்டும் ?

இனத்தின், மதத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டி பாராளுமன்றத்தில் பிரேரணை கொண்டு செல்லப்போவதாக முன்னாள் அமைச்சர் ரவி கருனாநாயக்கா அறிவித்துள்ளார். 


இது முதன்முறையாக மேற்கொள்ளப்படுகின்ற முயற்சி அல்ல. இதே திட்டத்தினை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதியாக இருந்தபோது மகிந்த ராஜபக்ச எடுத்த முயற்சி தோல்வியடைந்தது.  


இது பல இனங்களும், மதங்களும் வாழ்கின்ற ஜனநாயக நாடொன்றுக்கு பொருத்தமற்ற கொள்கையாகும். நாட்டில் தீர்க்கப்பட வேண்டிய எத்தனயோ பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முயற்சிக்காமல், இனத்தின், மதத்தின் அடிப்படையில் கட்சிகள் இருப்பதனால் ரவி கருநாநாயக்காவுக்கு ஏற்பட்ட பிரச்சினை என்ன ? இவருக்கு பின்னணியில் இருப்பவர்கள் யார் என்ற சந்தேகம் உள்ளது.    


ஒரு இனத்தின் அடையாளம் என்பது உயிரிலும் மேலானதும், விலைமதிக்க முடியாததுமாகும். அந்த அடையாளத்தை நிலை நிறுத்துவதற்காகவே உலகில் எத்தனையோ யுத்தங்களும், போராட்டங்களும், அழிவுகளும் இடம்பெற்றது. இன்னமும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது.


எமது நாட்டில் அப்போது முஸ்லிம்கள் எட்டு சதவீதமாக வாழ்ந்தபோதிலும் முஸ்லிம்கள் ஒரு தனியான தேசிய இனம் என்ற அரசியல் அடயாளம் இருக்கவில்லை. வட கிழக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் தமிழ் தேசியத்துக்குள்ளும், ஏனைய மாகாணங்களில் வாழ்ந்தவர்கள் பெரும்பான்மை சமூகத்துக்குள்ளும் புதைந்து கிடந்தனர்.  


1987 இந்திய - இலங்கை ஒப்பந்தம் வரையிலான எந்தவொரு ஒப்பந்தத்திலும் முஸ்லிம்கள் கண்டுகொள்ளப்படவில்லை. இந்த நிலையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் எழுச்சிக்கு பின்பு இந்நாட்டில் முஸ்லிம்கள் ஒரு தேசிய இனம் என்று உலகத்துக்கு அடையாளப்படுத்தப்பட்டது.   


விடுதலை புலிகள் அழிக்கப்பட்டு யுத்தம் முடிவுற்றதன் பின்பு ஒரு இனத்தின், மதத்தின் பெயரில் அரசியல் கட்சிகள் இருக்கக்கூடாது என்ற சட்டத்தை இயற்றுவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ முயற்சித்தபோது, அவருடன் இருந்த சில முஸ்லிம் கட்சிகள் சட்டம் இயற்றுவதற்கு முன்பாகவே தங்களது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தினர்.  


அந்தவகையில் றிசாத் பதியுதீன் தலமையிலான “”அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்”” என்ற கட்சியின் பெயரை “”அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்”” என்றும், 


அதாஉல்லா தலமையிலான “”தேசிய முஸ்லிம் காங்கிரஸ்”” என்ற கட்சியின் பெயரை “”தேசிய காங்கிரஸ்”” என்றும் மாற்றிக்கொண்டனர்.        


ஆனால் மகிந்த ராஜபக்சவுடன் பங்காளியாக இருந்த டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையான் போன்றவர்கள் இதனை கடுமையாக எதிர்த்தனர். தமிழ் மக்களினால் துரோகிகளாக அடையாளப்படுத்தப்பட்ட இவர்கள் தங்களது கட்சியில் இருக்கின்ற இனத்தின் அடையாளத்தை அழிப்பதற்கு உடன்படவில்லை. 


அதேநேரம் ரவூப் ஹக்கீம் நீதி அமைச்சராக இருந்த நிலையில், மகிந்தவின் இந்த திட்டத்துக்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களின் உதவியை நாடியது. அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்தியாவின் உதவியை நாடியதுடன் இறுதியில் இந்தியா மற்றும் சில நாடுகளின் அழுத்தம் காரணமாக அத்திட்டம் மகிந்தவினால் கைவிடப்பட்டது.


எனவேதான் இனத்தின், மதத்தின் பெயரில் கட்சிகளை அழிக்க நினைப்பது சர்வாதிகார போக்கு மாத்திரமல்ல, சிறுபான்மை இனத்தின் தேசிய அடையாளத்துக்கும் சாவுமணி அடிக்கும் முயற்சி என்பதனை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.  


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




No comments