குருக்கள்மடம் விவகாரம், அஷ்ரப்பை மறந்து ஹக்கீம் மீது வசைபாடல். அதிகாரம் யாரிடம் இருந்தது ?
1990 இல் குருக்கள்மடத்தில் முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட விவகாரம் பற்றி மு.கா தலைவர் ரவுப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் பேசியதனை சிலர் வசைபாடுகின்றனர்.
அவ்வாறு அவர் எதுவும் பேசாமல் இருந்திருந்தால் இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு இது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை அத்துடன் விமர்சிப்பவர்களுக்கு புதிய தலைப்பும் இருந்திருக்காது.
ரவூப் ஹக்கீமை இலக்கு வைத்து தொடர்ச்சியான வசைபாடல்கள் மூலமாக மக்களின் மனங்களிலிருந்து முஸ்லிம் காங்கிரசை முற்றாக அழித்துவிடும் நோக்கில் சிலர் செயட்பட்டுவருகின்ற நிலையில், இவ்வாறான விடயங்களை பாராளுமன்றில் காரசாரமாக பேசுவதனால் முஸ்லிம் காங்கிரஸ் பலமடைந்துவிடுமோ என்ற அச்சம் சிலரிடம் காணப்படுகிறது.
1990 இல் இந்த படுகொலை நடைபெறும்போது ரவுப் ஹக்கீம் அவர்கள் எந்தவொரு அரசியல் பதவியிலும் இருக்கவுமில்லை, அவர் அரசியல் மட்டங்களில் பேசப்பட்ட பிரமுகருமல்ல. அவர் 1994 ல்தான் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்கு சென்றார்.
அப்போது மு.கா தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் குருக்கள்மடம் கொலையை பாராளுமனறத்தில் கண்டித்ததுடன், அன்று கிழக்கில் நடைபெற்ற அசம்பாவிதங்களுக்காக முஸ்லிம் பிரதேசங்களில் ஊர்காவல் படைகளை அமைக்க வேண்டுமென்றும், பாதுகாப்புக்காக முஸ்லிம்களுக்கு ஆயுதங்கள் வழங்க வேண்டுமென்றும் அழுத்தம் வழங்கினார்.
1994 தொடக்கம் 2000 வரைக்கும் பலம் பொருந்திய அமைச்சராகவும், ஆட்சியின் பங்காளியாகவும் தலைவர் அஷ்ரப் இருந்தபோது குருக்கள்மடம் விவகாரத்தை ஏன் அன்று தலைவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று எவரும் கேள்வி கேட்கவில்லை.
1990 இன் இறுதியில் களுவஞ்சிக்குடியில் பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டதுடன், அன்றிலிருந்து குருக்கள்மடம் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசமாக இருந்துவருகிறது.
மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் சட்டமா அதிபர் திணைக்களத்தை பிடுங்கிவிட்டு அதிகாரமில்லாத நீதி அமைச்சர் பதவி ரவுப் ஹக்கீமுக்கு வழங்கப்பட்டது.
அன்றைய மஹிந்தவின் ஆட்சியில் ராஜபக்ச சகோதரர்களைமீறி எந்த அமைச்சரும் தத்துணிவுடன் செயற்பட முடியாது என்பது ஒன்றும் ரகசியமல்ல.
ரவுப் ஹக்கீமின் நீதி அமைச்சில், அமைச்சருக்கு தெரியாமல் பசில் ராஜபக்சவினால் சிலருக்கு தொழில் வழங்கப்பட்ட விவகாரம் அப்போது பேசுபொருளாக இருந்தது. இதன்மூலம் ராஜபக்சவின் ஆட்சியில் ரவுப் ஹக்கீமுக்கு இருந்த அதிகாரத்தை புரிந்துகொள்ள முடியும். இந்த நிலையில் ரவுப் ஹக்கீமினால் நிதி வழங்கவில்லை என்று கூறுவது கற்பனையான வசைபாடலாகும்.
குருக்கள்மடம் புதைகுழியை தோண்டுவதற்கான முழு நிதியையும் ICRC வழங்க முன்வந்த நிலையில், அன்றைய மஹிந்த அரசு இழுத்தடிப்பு செய்ததாக அப்போது முஸ்லிம் காங்கிரஸ் மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாரூக் பகிரங்கமாக கண்டனம் தெரிவித்திருந்தார்.
கட்டுரை நீண்டுவிடும் என்பதற்காக சுருக்கிக்கொள்கிறேன். அப்போது வெளிவந்த செய்தியை இங்கே பதிவிட்டுள்ளேன். இதனை பார்வையிடுவதன் மூலம் மேலதிகமான உண்மை தகவல்களை அறிந்துகொள்ள முடியும்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
No comments