வென்னப்புவவில் 202 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
இலங்கை கடலோர காவல்படை, இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்துடன் இணைந்து வென்னப்புவ போலவத்தை பகுதியில் புதன்கிழமை (02) நடாத்தப்பட்ட சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது 900 கிலோகிராம் கேரளா கஞ்சா, இரண்டு வெளிநாட்டு துப்பாக்கிகள், நான்கு மெகசீன்கள், 40 தோட்டாக்கள் ஆகியவற்றை ஏற்றிச் சென்ற ஒரு கெப் வாகனம் மற்றும் இச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு மோட்டார் காருடன் மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.
இலங்கை கடலோர காவல்படைக்கு கிடைத்த நம்பகமான இரகசிய தகவலுக்கு அமைய வென்னப்புவ போலவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு கூட்டுத் தேடுதலின் போது சந்தேகத்திற்கிடமாக அவ் வழியாக சென்ற கெப் வானத்தை சோதனையிட்ட போதே இப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன் மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து வெளிப்படுத்தப்பட்டமேலதிக தகவலின் அடிப்படையில் இம் மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மேலும் ஒருவர் மோட்டார் வாகனத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி கைப்பற்றப்பட்ட மொத்த கேரளா கஞ்சாவின் பெறுமதி 202 மில்லியனுக்கும் அதிகமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 44 கும் 51 வயதிற்கும் உட்பட்ட உலுக்குளம், போத்தானேகம, மற்றும் அனுராதபுரம் இஹலகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர் சந்தேக நபர்கள், கேரள கஞ்சா, கைத்துப்பாக்கிகள், மெகசீன்கள், தோட்டாக்கள் மற்றும் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






No comments