Breaking News

புத்தளம் வண்ணாத்தவில்லு பிரதேச சபையின் கன்னி அமர்வுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

செவ்வாய்க்கிழமை (24)நடைபெறவிருந்த புத்தளம் வண்ணாத்தவில்லு பிரதேச சபையின் கன்னி அமர்வு கூட்டத்தை நடத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. 


சமீபத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சம்பந்தப்பட்ட பிரதேச சபைக்குப் போட்டியிட்ட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குழுத் தலைவர் சமந்த முனசிங்க சமர்ப்பித்த மனுவை பரிசீலித்த பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ இந்த உத்தரவைப் பிறப்பித்தார். 


பின்னர் பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, மனுவை ஜூலை 16 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.


மனுதாரர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி சமன் கலப்பத்தி, சம்பந்தப்பட்ட பிரதேச சபையில் ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் பெண் பிரதிநிதித்துவத்திற்கான இடங்களை ஒதுக்குவதில் தனது கட்சிக்கு கடுமையாக அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறி, நீதிமன்றத்தில் ஆதாரங்களை சமர்ப்பித்தார். 


சம்பந்தப்பட்ட உறுப்பினருக்கான இடங்களை ஒதுக்குவதில் தெரிவத்தாட்சி அதிகாரி எடுத்த முடிவு முற்றிலும் சட்டத்திற்கு முரணானது என்றும், இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவிடம் எழுத்துப்பூர்வ முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தாலும், இன்றுவரை அவர்களிடமிருந்து எவ்விதமான பதிலும் வரவில்லை என்றும் சட்டத்தரணி சுட்டிக்காட்டினார். 


அதற்கமைய, பிரதிவாதியான தெரிவத்தாட்சி அதிகாரியின் சட்டவிரோத முடிவின் அடிப்படையில் இந்தப் பிரதேச சபையின் கூட்டம் நடத்தப்பட்டால், அது கடுமையான பாதகத்தை ஏற்படுத்தும் என்று கூறி, இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதித்து இடைக்கால தடை உத்தரவுகளை பிறப்பிக்குமாறு சட்டத்தரணி நீதிமன்றில் கோரினார். 


பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி, சம்பந்தப்பட்ட பிரதேச சபையின் முதல் கூட்டத்தை நடத்துவதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், இதனூடாக குறித்த சபையின் ஊடாக வழங்கப்படும் பொது சேவைகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என்றும் குறிப்பிட்டார். 


இதன்படி, மனுவில் கோரப்பட்டுள்ள இடைக்கால தடை உத்தரவை பிறப்பிக்க வேண்டாம் என்று அரச சட்டத்தரணி நீதிமன்றத்தை கோரினார். 


முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதிபதி, சம்பந்தப்பட்ட மனுவில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டிருந்த வனாத்தவில்லுவ பிரதேச சபையின் தெரிவத்தாட்சி அதிகாரி மற்றும் வடமேல் மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் ஆகியோருக்கு எதிராக இந்த இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்தார்.




No comments