ஈரானுக்குள் ஆழ ஊடுருவியுள்ள மொசாட். இலக்கு வைக்கப்பட்ட அணு விஞ்ஞானிகள். முடிவு என்ன ?
மத்தியகிழக்கில் ஒரேயொரு அணு ஆயுத நாடான இஸ்ரேலின் புலனாய்வுத் துறையினர் இஸ்லாமிய நாடுகளை கண்காணித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பலம்பொருந்திய நாடான ஈரானுக்குள் ஆழ ஊடுருவியுள்ளனர்.
இதற்காக மொசாட் அமைப்பினர் சில இராணுவ உயர் அதிகாரிகளையும், அணு விஞ்ஞானிகளையும் தங்களின் வலையில் சிக்கவைத்ததுடன், மறுத்தவர்களை மர்மமான முறையில் கொலை செய்தனர்.
மிகவும் பாதுகாக்கப்பட்டிருந்த ஈரானின் அணு ஆயுத ரகசியங்களை அதிகாரிகளின் உதவியுடன் மொசாட் அமைப்பினர் திருடிச்சென்று அமெரிக்காவிடம் கையளித்தனர். அதனாலேயே 2018 இல் அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து (JCPOA) அமெரிக்கா விலகியதுடன் ஈரான்மீது இறுக்கமான பொருளாதார தடையினை விதித்தது.
கடந்த 13.06.2025ம் திகதி ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் ஆரம்பித்த தாக்குதலில் முதலில் இலக்கு வைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர்கள் அணு விஞ்ஞானிகள். இவ்வாறு ஈரானில் அணு விஞ்ஞானிகள் கொலை செய்யப்பட்டது இது முதல் முறையல்ல.
2010 ம் ஆண்டிலிருந்து ஈரானிய அணு விஞ்ஞானிகளும், இராணுவ அதிகாரிகளும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு வருகின்றார்கள். அத்துடன் 2010 இல் மொசாட் மற்றும் CIA இணைந்து Stuxnet என்ற வைரஸ் மூலம் ஈரானின் Natanz அணு உலையில் இயந்திரங்களை சேதப்படுத்தியது.
27.11.2020 ம் திகதி ஈரானின் பிரதம அணு விஞ்ஞானி மொஹ்சன் பக்ரிசாதி தெஹ்ரானுக்கு அருகில் ரிமோட் குண்டு மூலம் கொல்லப்பட்டார். இவரது கொலைக்கு CIA, மொசாட் செயல்பட்டதுடன், சவூதி அரேபியாவின் அனுசரணையும் இருந்ததாக ஈரான் குற்றம் சுமத்தியது.
2018 இல் ஈரானின் இரண்டு அணு விஞ்ஜானிகள் மொசாட்டுடன் தொடர்பிருந்ததனை உறுதிப்படுத்திய ஈரானிய புலனாய்வுத்துறையினர் அவர்களை கைது செய்யசென்ற சில நிமிடங்களுக்குள் நாட்டின் எல்லையை கடந்து அசர்பைஜான் வழியாக தப்பித்தனர். இவர்களை மொசாட் அமைப்பினர் பத்திரமாக அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று தஞ்சம் வழங்கினர்.
“கலகம் பிறந்தால்தான் நியாம் பிறக்கும்” என்பதுபோல் இந்த போரின் இறுதியில் பலவித நன்மைகள் கிடைத்தாலும், ஈரானுக்குள் ஆழ ஊடுருவியுள்ள இஸ்ரேலின் புலனாய்வுக் கட்டமைப்பினை முற்றாக அழித்தொழிப்பதற்கு இந்த போர் உதவும் என்பதில் ஐயமில்லை.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
No comments