நாவற்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய அதிபர் பா.ஜெனற்ராஜ் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
எம்.யூ.எம். சனூன்
நாவற்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய அதிபர் பா.ஜெனற்ராஜ் பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
வடமேல் மாகாணத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கான தேசிய பரீட்சைகளில் சிறந்த பெறுபேறு பெற்ற பாடசாலை அதிபர்களையும், மாணவர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் (18) குருநாகலில் நடைபெற்ற போதே இவர் கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. (உ.த), க.பொ.த (சா.த) ஆகிய பரீட்சைக்குத்தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பாடசாலைக்கு பெற்றுத் தந்த வடமேல் மாகாண சபைக்கு உட்பட்ட எட்டு வலயங்களைச் சேர்ந்த 220 அதிபர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இப்பாடசாலையில் கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் க.பொ.த.(சா.த) பரீட்சைக்கு மாணவர்கள் தோற்றி வந்துள்ளனர். இருப்பினும் 2017ஆம் ஆண்டு தரம் 5 புலமை பரிசில் பரீட்சைக்குத் தோற்றி வலய மட்டத்தில் உள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளில் முதல் இடத்தை பெற்றுத் தந்த இம் மாணவர்களே 2024 ஆம் ஆண்டு க.பொ.த. (சா.த) பரீட்சைக்குத் தோற்றி அதே போல் முதல் இடத்தை பெற்றுத் தந்தனர்.
அது மட்டுமல்லாது கடந்த ஏப்ரல் மாதம் வலயத்தில் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன் முதல் முறையாக மாகாணத்திலும் பாராட்டி கௌரவிக்கப்பட்டமை வரலாற்றுச் சாதனையாகும்.
இந்நிகழ்வில் வடமேல் மாகாண ஆளுனரினால் அதிபர் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் வடமேல் மாகாண ஆளுநரின் செயலாளர், வடமேல் மாகாண கல்வித் திணைக்களத்தின் பணிப்பாளர், ஏனைய பணிப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.
இந்த வெற்றியினைப் பெறுவதற்கு தம்மை முழுமையாக பாடசாலைக்கு அர்ப்பணித்து சிறப்பான தலைமைத்துவம் மூலம் ஆசிரியர்களையும், மாணவர்களையும் வழி நடத்தி வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்ற அதிபர் ஜெனற்ராஜுக்கு பாடசாலை சமூகம் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த வெற்றியினைப் பெற தமது சிறப்பான கற்பித்தல் மூலம் மாணவர்களை நெறிப்படுத்திய தரம் 1,2 ஆசிரியர் எமான்சியா, தரம் 3, 5 ஆசிரியர் றொசில்டா வாஸ், இடை நிலைப் பிரிவு ஆசிரியர்களான டேவிட், மெரின், வஜிஹூ, ஜலீல், அஸ்ரப்கான், தவச்செல்வி, வினோஜினி, நுஸ்ரா, பசீனா, அஸ்கியா, சிறீல், சசிகலா, பஸ்ரினா , பிரிஸ்கா, துஷானி , தனூசா, பிறின்சி ஆகிய ஆசிரியர்களுக்கும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறார்கள்.
No comments