அக்கரைப்பற்று மாநகர வர்த்தகர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு.!
(அஸ்லம் எஸ்.மெளலானா)
அக்கரைப்பற்று மாநகர சபையினால் வர்த்தகர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விஷேட விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று, இன்று திங்கட்கிழமை (28) ஹல்லாஜ் மண்டபத்தில் அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் தலைமையில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் எம்.அன்சார், பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.சலீம், நுகர்வோர் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்களான இஸட்.எம். சாஜித், எம்.எச்.எம். றிபாஜ் மற்றும் அக்கரைப்பற்று வர்த்தகர் சங்கத்தின் நிர்வாகிகள் உட்பட வர்த்தகர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது அக்கரைப்பற்று மாநகர சபை எல்லைக்குட்பட்ட அனைத்து வர்த்தக நிலையங்களும் வியாபார அனுமதிப் பத்திரங்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய ஆணையாளர், வர்த்தகர்களுக்கு இதனை இலகுபடுத்தும் பொருட்டு அடுத்த வாரமளவில் தமது மாநகர சபையினால் நடமாடும் சேவை ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அதன்போது ஆதன வரி உள்ளிட்ட சேவைக் கட்டணங்களுடன் விண்ணப்பங்களை சமர்ப்பித்து, வியாபார அனுமதிப் பத்திரங்களை இலகுவாகவும் துரிதமாகவும் பெற்றுக் கொள்ள முடியும் என்று தெளிவுபடுத்தினார்.
மேலும், திண்மக்கழிவகற்றல் சேவையை வினைத்திறனுடன் இன்னும் சிறப்பாக முன்னெடுப்பதற்கு மாநகர சபை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இதற்கு வர்த்தகர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க முன்வர வேண்டும் எனவும் ஆணையாளர் நௌபீஸ் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் நுகர்வோர் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர் இஸட்.எம். சாஜித், வர்த்தகர்களுக்கான விழிப்புணர்வு விரிவுரையொன்றை நிகழ்த்தினார்.
இதன்போது பொருட்களின் விலைகளை காட்சிப்படுத்தல், அவற்றின் உற்பத்தி, தரம் மற்றும் காலாவதி உள்ளிட்ட விடயங்களில் நுகர்வோர் அதிகார சபையின் சட்டங்கள், ஒழுங்கு விதிகள் தொடர்பாக தெளிவுபடுத்தி, அறிவுறுத்தங்களை வழங்கிய அவர், தமது வியாபார நடவடிக்கைளின்போது வர்த்தகர்கள் இவற்றை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியதுடன் தவறும் வர்த்தகர்கள் மீது எவ்வித தயவுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.சலீம், உணவு விடயங்களில் வர்த்தகர்கள் பேண வேண்டிய நடைமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்ததுடன் இந்த நடைமுறைகளை கடைப்பிடிக்கத் தவறும் வர்த்தகர்களுக்கு எதிராக உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தினார்.
No comments