Breaking News

கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் கீழ் புத்தளம் நெடுங்குளம் பகுதி சுத்தப்படுத்தப்பட்டது.

எம்.யூ.எம்.சனூன்

ஜனாதிபதி அவர்களின் கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் கீழ் புத்தளம் நெடுங்குளம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிளை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் சனிக்கிழமை (01) காலை இடம்பெற்றது.


நெடுங்குளம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளை சுத்தப்படுத்துவதன் ஊடாக அப்பகுதியை பொதுமக்கள் ஒன்றுகூடும் பொழுது போக்குக்கான இடமாக மாற்றும் வேலைத் திட்டத்தின் கீழ் இந்த பணிகள் இடம்பெற்றன.


தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீலங்கா செயல்திட்டத்தின் ஓர் அங்கமாக இடம்பெற்ற இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் நகர அணியின் வேண்டுகோளுக்கிணங்க புத்தளம் நகர சபை, புத்தளம் பிரிவு பொலிஸ் அதிகாரிகள், பொது மக்கள், மகளிர் மற்றும் சிறுவர் கழகத்தினர் ஆகியோரின் முழுமையான ஒத்துழைப்புடன் தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் நகர குழுவினரும் இணைந்து சிரமதான பணியில் ஈடுபட்டனர்.


இந்நிகழ்வுக்கு புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மது பைசல், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், புத்தளம் நகர சபை செயலாளர் எல்.ஜீ.பி. பிரீத்திக்கா, வட மேற்கு - மேற்கு பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா, உதவி பொலிஸ் அத்தியட்சகர்,  எம்.பி. வைத்தியதிலக, பிரதி பொலிஸ் நிலைய பரிசோதகர் டி.எம்.பி.பி. திசாநாயக, நீர் வழங்கள் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் எம்.சீ.எம். நபீல், புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பின் சிவஸ்ரீ வெங்கட சுந்தாராம குருக்கள், அஷ்ஷெய்க் முஜீப் ஸாலிஹ், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் புத்தளம் நகர கிளை தலைவர் அஷ்ஷெய்க் எம்.பி.எம்.ஜிப்னாஸ் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் சிரமதானம் சிறப்பாக நடைபெற்றது.


புத்தளம் நகரை ‘முன்மாதிரி இரம்மியமான நகரமாக’ (An Exemplary Pleasant City) பரிணமிக்க வேண்டுமென்ற புத்தளம் பிரதேச மக்களின் ஆவலை புரிந்துகொண்டு, கிளீன் ஸ்ரீலங்கா தேசிய செயற்றிட்டத்தின் கீழ், நெடுங்குளம் கட்டு சுத்தப்படுத்தல், அழகுபடுத்தல் திட்டத்தின் இன்னுமொரு பகுதி தேசிய மக்கள் சக்தியின் மூலமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.


முஸ்லிம்களின் ஆன்மாவை சுத்தப்படுத்தும் புனித ரமழான் (நோன்பு) மாதம் ஆரம்பிக்கும் இச் சிறப்புமிக்க தினத்தில் மேற்கொண்ட சுத்திகரிப்புப் பணியில் ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் ஏற்பாட்டாளர்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றனர்.


















No comments