சுதந்திர தினத்தை முன்னிட்டு புத்தளம் காஸிமிய்யாவில் முப்பெரும் நிகழ்வுகள்.
எம்.யூ.எம். சனூன்
இலங்கையின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புத்தளம் காசிமிய்யா அரபுக் கல்லூரியில் முப்பெரும் நிகழ்வுகள் சுதந்திர தினத்தன்று கல்லூரி வளாகத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
மத்ரஸா உள்ளக பாதை அமைப்பு திறப்பு விழா, 77 வது சுதந்திர தின நிகழ்வுகள் மற்றும் காலஞ்சென்ற காஸிமிய்யா முன்னாள் அதிபர் அப்துல்லாஹ் ஹஸரத் அவர்களின் நினைவேந்தல் ஆகிய மூன்று நிகழ்வுகளே நடந்தேறின.
மத்ரஸா வளாகத்தில் இடம்பெற்ற சுதந்திர தின கொடியேற்ற நிகழ்வில் தேசியக் கொடியினை புத்தளம் உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.அனீஸ் அவர்களும், மத்ரஸா கொடியினை கல்லூரி முதல்வர் அஷ்ஷெய்க் எச்.எம்.மின்ஹாஜ் (இஸ்லாஹி) அவர்களும் ஏற்றி வைத்தனர்.
சிங்கள மொழியிலான தேசிய கீதத்தை தொடர்ந்து மத்ரஸா மாணவர்களினால் கல்லூரி கீதமும் இசைக்கப்பட்டன.
சுதந்திர தின பிரதான உரையினை புத்தளம் உதவிக் கல்விப்பணிப்பாளர் ஏ.எம்.அனீஸ் நிகழ்த்தினார்.
புத்தளம் சமூக சேவை அமைப்பான கெஸ்மோ அமைப்பினர் மத்ரஸா உள்ளக பாதை அமைப்புக்கு சுமார் 5 இலட்சம் ரூபாய் செலவில் அனுசரணை வழங்கி இந்த பாதை அமைப்பினை ஏற்படுத்தி கொடுத்திருந்தார்கள்.
இதன்போது கெஸ்மோ அமைப்பினருக்கு மத்ரஸா நிர்வாகத்தினால் நினைவு சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வின் இறுதியாக காலஞ்சென்ற அப்துல்லாஹ் ஹஸரத் அவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு கல்லூரியின் மஹ்மூத் ஹஸரத் மண்டபத்தில் நடைபெற்றது. புத்தளம் சர்வமத ஒன்றியமும் மத்ரஸா நிர்வாகமும் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
அப்துல்லாஹ் ஹஸரத் அவர்களின் குடும்ப உறவினர்களும் இதில் பங்கேற்றனர்.
காஸிமிய்யா அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எச்.எம்.மின்ஹாஜ் (இஸ்லாஹி) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் சமய தலைவர்கள், ஓய்வு நிலை உதவி கல்விப்பணிப்பாளர் இஸட்.ஏ.சன்ஹீர், புத்தளம் மாவட்ட ஜம்இயத்துல் உலமா சபை தலைவர் அஷ்ஷெய்க் ஏ.பீ.ஜிப்னாஸ் (அல் மிஸ்பாஹி) உள்ளிட்ட உலமாக்கள், கெஸ்மோ அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், காஸிமிய்யா அரபுக் கல்லூரியின் நிர்வாக சபை தலைவர் எஸ்.ஆர்.எம்.முஸம்மில், முகாமைத்துவ சபை தலைவர் அஷ்ஷெய்க் எஸ்.எம்.பாரிஸ் (காஸிமி,மதனி) கொழும்பு அமேசன் கல்லூரி பணிப்பாளர் இல்ஹாம் மரிக்கார், மத்ரஸா உஸ்தாதுமார்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
No comments