இன வாதம், மத வாதங்களால் எமக்கேற்பட்ட அழிவுகள் போதும் - புத்தளம் சுதந்திர தின நிகழ்வில் பைசல் எம்.பி. தெரிவிப்பு!.
எம்.யூ.எம். சனூன்
எமது நாட்டில் இனிமேல் இனவாதம் தலை தூக்குவதற்கு எமது ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் ஒருபோதும் இடம் அளிக்காது. இன வாதம், மத வாதங்களால் எமக்கேற்பட்ட அழிவுகள் போதும் என புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மது பைசல் தெரிவித்தார்.
புத்தளம் கொழும்பு முகத்திடலில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
இந்நிகழ்வுக்கு தலைமை தாங்கி கொண்டிருக்கின்ற புத்தளம் மாவட்டச் செயலாளர், இங்கு வருகை தந்திருக்கின்ற சமய தலைவர்கள், முப்படைகளின் பிரதானிகள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது வந்தனங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இன்று எமது தாய் திருநாட்டின் சுதந்திர தினம் நாடு முழுவதும் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு கொண்டிருக்கிறது. 77 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற அந்த வெற்றி நிகழ்வே இன்று வரையும் எமது நாட்டில் கொண்டாடப்பட்டு வருகின்றது.
ஒல்லாந்தர்களுக்குப் பின்னர் 1815 ம் ஆண்டு முதல் 1948 ம் ஆண்டு வரை எமது நாடு சுமார் 133 வருடங்கள் ஆங்கிலேயரின் முழுமையான அடிமைப்படுத்தலுக்கு கீழாக இருந்து, எமது நாட்டு சுதந்திரப் போராட்ட வீரர்கள் முன்னெடுத்த பல்வேறு தியாகங்கள், போராட்டங்களுக்குப் பிறகு இற்றைக்கு சரியாக 77 வருடங்களுக்கு முன்னர் 1948ம் ஆண்டு பெப்ரவரி 04ம் திகதி எமது நாடு சுதந்திரம் பெற்றது
ஆங்கிலேயரின் காலனித்துவத்திற்கு முன்னர் இலங்கையில் மன்னராட்சி நிலவி வந்ததோடு, மன்னராட்சியின் அன்றைய கால இலங்கை வர்த்தகத்திற்கும் வணிகத்திற்கும் பெயர் போன நாடாக இருந்தது.
இதனை அறிந்து கொண்ட ஆங்கிலேயர் இலங்கை வளங்களையும் இலங்கை மக்களையும் அடிமைப்படுத்துவதற்கு மேற்கொண்ட பல்வேறு சதிகளின் ஊடாக அவர்கள் வெற்றி கொண்டு இறுதியில் இலங்கை அவர்களின் ஆதிக்கத்திற்குள் சென்றது.
இரண்டாம் இராஜசிங்க மன்னனின் ஆட்சியை வீழ்த்தி இலங்கையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த ஆங்கிலேயர்கள் பின் தங்கள் எண்ணப்படி மக்களை அடிமையாக்கி இலங்கையின் வளங்களை ஏற்றுமதி செய்தார்கள். சிறுவர்களை வேலைக்கு அமர்த்தி குறைந்த சம்பளமும் வழங்கினார்கள். இந்திய நாட்டு மக்களையும் குறைந்த சம்பளத்திற்கு நாட்டுக்குள் அழைத்து வந்தனர்.
இவ்வாறு இலங்கை மக்களை மிக கொடூரமாக நடத்தியதைத் தாங்கிக் கொள்ள முடியாத நிலையில்தான் இலங்கையை ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுவிப்பதற்காக முன்னைய தலைவர்கள் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு இந்த சுதந்திரத்தை எமக்கு பெற்று தந்திருக்கிறார்கள். அதனைத் தான் இன்று நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
ஆங்கிலேயர்களின் கொடுமைகளிலிருந்து, ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திலிருந்து எமது நாட்டை விடுவித்துச் சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக இன, மத வேறுபாடுகளின்றி எல்லா இனத்தைச் சேர்ந்தவர்களும் ஒன்றாக செயற்பட்டு இலங்கைக்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தந்திருக்கின்றார்கள். அவர்களின் ஒவ்வொரு வாதங்களும் புரட்சிகளும் தான் இந்த நாடு நமக்கான இன்றைய சுதந்திர இலங்கையாக மாறியிருக்கிறது. சுதந்திர இலங்கையின் அந்த தலைவர்களை நாம் நினைவு கூற கடமைப்பட்டு இருக்கிறோம். இலங்கையின் சுதந்திர வரலாற்றை ஒவ்வொருவரும் படிக்க வேண்டும். எமது பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.
ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி மாதம் நான்காம் திகதி தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடிவிட்டுச் செல்வதற்கு அப்பால் எமது நாட்டின் வரலாற்றை தேடிப் படிப்பவர்களாக நாம் மாற வேண்டும்.
நாட்டின் இன்றைய 77வது சுதந்திர தினக் கொண்டாட்டம் புதிய ஜனாதிபதியின் கீழ், புதிய அரசாங்கத்தின் கீழ் கொண்டாடப்படுவது முக்கியமான விடயமாகும். சுதந்திர இலங்கையில் அனைத்து இன மக்களும் இன மத வேறுபாடுகளுக்கு அப்பால் மிகவும் சுதந்திரமாக ஒரு தாய் மக்களாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவதற்கு எமது ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அர்ப்பணிப்போடு செயல்பட்டு வருகிறது.
எமது நாட்டின் சுதந்திரத்திற்காக எவ்வாறு அனைத்து இனங்களின் தலைவர்களும் ஒற்றுமை பட்டு ஒரே சிந்தனையோடு செயற்பட்டு வெற்றி கொண்டார்களோ அதை போன்று இந்நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் அனைத்து வேறுபாடுகளையும் துறந்து நாட்டின் வளர்ச்சிக்காக நாட்டின் முன்னேற்றத்திற்காக செயற்பட வேண்டும். எமது நாட்டில் இனிமேல் இனவாதம் தலை தூக்குவதற்கு எமது ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் ஒருபோதும் இடம் அளிக்காது. இன வாதம், மத வாதங்களால் எமக்கேற்பட்ட அழிவுகள் போதும்.
இனிமேல் நாம் நாட்டைப் பற்றிச் சிந்திப்போம். எமது வருங்கால சிறார்களை பற்றி சிந்திப்போம். நல்ல விடயங்களையும், நல்ல சிந்தனைகளையும் எமது வருங்கால சந்ததியினருக்கு விட்டு செல்வோம். இனிமேல் ஒருபோதும் இலங்கையில் இனவாதம் மதவாதம் தலை தூக்காத அழகிய ஒரு சூழலை எமது எதிர்கால சந்ததியினருக்கு ஏற்படுத்திக் கொடுப்போம். நாம் ஒவ்வொருவரும் நாட்டை நேசிக்கின்ற உண்மையான தேசப்பற்றாளர்களாக மாறுவோம்.
நாட்டில் வாழும் அனைத்து மக்களும் எல்லா சமயங்களையும் மதிக்கும், அம்மதங்கள் மீது மரியாதை செலுத்தும் சூழலை ஏற்படுத்த வேண்டும். நாட்டு மக்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தும் சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். அப்போது அழகான இலங்கையை எம்மால் காண முடியும். அழகான மக்களின் செயற்பாடுகளைக் காண முடியும். மக்களின் அழகான உணர்வுகளைக் காண முடியும்.
இனரீதியாக நாம் பிரிந்து நின்றது போதும். இன ரீதியாக நாம் பிளவுபட்டு எமக்கு நாமே அழிவை ஏற்படுத்திக் கொண்டது போதும். எமது நாடான இலங்கை ஒரு அழகிய நாடு. இந்த நாட்டில் தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்தி இந்நாட்டை மேலும் அழகாக்க வேண்டும். அப்போது நாடு செழிக்கும். வளங்கள் பெருகும். இதற்கான முன்னெடுப்புகளையே எமது அரசாங்கம் இப்போது மேற்கொண்டு வருகிறது.
இறுதியாக ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன் எமது அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கை ஒருபோதும் வீணாகாது. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அரசாங்கமாக எமது அரசாங்கம் அதற்கு வேண்டிய அனைத்து செயற் திட்டங்களையும் முன்னெடுக்கும் என்பதை உறுதியாக கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.
நாட்டையும் நாட்டு மக்களையும் உண்மையாக நேசிக்கின்ற ஒரு அரசாங்கம் என்ற வகையில் செழிப்பான நாடு அழகிய வாழ்க்கை என்ற வேலைத் திட்டத்தின் ஊடாக மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுக்க எமது அரசாங்கம் திட்டமிட்டிருக்கின்றது. செழிப்பான நாட்டில் மக்களின் அழகான வாழ்க்கையைக் காண்பதே எமது ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின் பிரதான குறிக்கோளாகும்.
அதேபோன்று எமது புத்தளம் மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளும் எவ்வித குறைபாடுகளும் இன்றி முன்னெடுக்கப்படும். புத்தளம் மாவட்டத்தின் தேவைகளை இனம் கண்டு அவற்றை முறையாக முன்னெடுப்பதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் நானும் என்னோடு இயங்கிக் கொண்டிருக்கின்ற குழுவினரும் செய்து கொண்டிருக்கிறோம். அதற்குத் தேவையான முறையான வேலைத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான வேலை திட்டங்கள் நிச்சயமாக முன்னெடுக்கப்படும் என்பதையும் கூறிக் கொண்டு விடைபெறுகிறேன்.
No comments