முஸ்லிம் பிரதேச அபிவிருத்தியும், ஒதுக்கீடுகளும், நேர்மையற்ற விமர்சனமும்.
நாங்கள் முஸ்லிம் தலைவர்களையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும் விமர்சிப்பது பாரிய அபிவிருத்திகளை செய்யவில்லை என்பதற்காக அல்ல. மாறாக மக்களின் அடிப்படை பிரச்சினைகள், காணி விவகாரம், கட்சி நடவடிக்கைகள் மற்றும் இனப்பிரச்சினை தீர்வு விவகாரங்களுக்காக மாத்திரமே.
அபிவிருத்தி செய்யவில்லையென்று முஸ்லிம், தமிழ் தலைவர்களை சிலர் விமர்சிப்பது தவறானது. ஏனெனில் ஒரு நாட்டை அபிவிருத்தி செய்வது ஆட்சி செய்கின்ற அரசின் கடமையாகும்.
முஸ்லிம் கட்சிகள் அரசின் பங்காளி மற்றும் அமைச்சர்களாக இருந்தாலும் அவர்களுக்கு அரசின் நிதி ஒதுக்கீடுகளுக்கு ஏற்பவே அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க முடியும்.
நாட்டில் நீண்ட யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலங்களில் பெருமளவான நிதிகள் பாதுகாப்பு செலவுக்கே ஒதுக்கப்பட்டது. அவ்வாறான நிலையில் நாட்டினை அபிவிருத்தி செய்வது சாத்தியமற்ற விடையமாகும்.
சிங்கள அமைச்சர்களையும், எம்பிக்களையும் தாண்டி முஸ்லிம் அமைச்சர்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டிருந்தாலும், இனவாதப் பொறிக்குள் நாடு இருந்த நிலைமைக்கு அதனை தொடர்ந்து எதிர்பார்க்க முடியாது.
ஒரு நாடு அபிவிருத்தி அடைவதென்றால் அந்த நாட்டின் அனைத்து பிரதேசங்களும், உட்கட்டமைப்புக்களும் அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும். அந்தவகையில் யுத்தம் முடிவுற்றதன் பின்பு நாடு முழுவதும் வீதி அபிவிருத்திகள் இடம்பெற்றது பின்பு நாட்டினை விழுங்குகின்ற நிலையில் கடன் சுமை அதிகரித்தது.
எமது நாட்டில் வருமானத்தைவிட செலவுகளே அதிகம். அன்றாடத் தேவைகளுக்காக நாட்டு மக்கள் வரிசையில் இருந்த நிலையினை மறந்துவிட முடியாது.
அவ்வாறான சூழ்நிலைகள் மற்றும் நாட்டின் வருமானம், பொருளாதார நிலைமை ஆகியவற்றினை பற்றி சிந்திக்காமல் ஐரோப்பா போன்ற மேற்கு நாடுகளுடன் ஒப்பிட்டு அதுபோன்று முஸ்லிம் பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்படவில்லை என்று நாங்கள் கூக்குரளிடுவதானது அரசியலுக்காக காழ்ப்புணர்சியின் காரணமாக கூறப்படுகின்ற பிரச்சாரங்களாகும்.
எனவே ஒன்றும் செய்யவில்லை, முஸ்லிம் பிரதேசங்கள் ஆடம்பரமாக அபிவிருத்தி செய்யப்படவில்லை என்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத விமர்சனமும், பிரச்சாரமுமாகும்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
No comments