வை.எல்.எஸ்.ஹமீத் மற்றும் அல் ஹாபிழ் அஸ்மி சாலி ஆகியோரின் மறைவையிட்டு மு.கா.தலைவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தி
இரவிலும் , அதிகாலையிலும் இருவரின் அதிர்ச்சிக்குரிய மறைவுச் செய்திகள் என்னை எட்டின. இரவில் கேட்ட மறைவுத் தகவல் அல் ஹாபிழ் அஸ்மி சாலி பற்றியது. அதிகாலையில் வந்தடைந்த தகவல் வை.எல்.எஸ். ஹமீத் பற்றியது. இவர்கள் இருவருமே ஏதோ ஒரு வகையில் நீண்ட காலமாக பழகியதால் அவர்களின் குண இயல்புகளை நான் நன்கறிந்திருந்தேன்.
கல்முனைகுடியைச் சேர்ந்த வை.எல்.எஸ் ஹமீதை பொறுத்தவரை ஆங்கில ஆசிரியராக இருந்து, மறைந்த எமது பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களால் ஆகர்ஷிக்கப்பட்டு, அரசியலில் ஈர்க்கப்பட்டவர். தலைவர் அமைச்சராக இருந்த பொழுது அவரது ஒருங்கிணைப்புச் செயலாளராக இருந்தவர். எனது அமைசொன்றிலும் ஒரு காலத்தில் ஒருங்கிணைப்புச் செயலாளராகப் பணி புரிந்துள்ளார்.
அவர் சட்டத்தரணியாகி பின்னர் சட்ட முதுமாணியானார். அரசியல் அமைப்பு விவகாரம், இனப்பிரச்சினைக்கான அரசில் தீர்வு, முஸ்லிம்களின் சுய நிர்ணய உரிமை போன்றவற்றில் ஆழமான ஈடுபாடு காட்டி வந்தவர். தேசிய அரசியல் நீரோட்டத்தில் இருந்து கொண்டு குறிப்பாக முஸ்லிம்களினதும் பொதுவாக சிறுபான்மை சமூகங்களினதும் அரசியலில் இறுதி மூச்சு வரை அதீத அக்கறை செலுத்தி வந்தவர் என்பதற்கு அவரது கருத்தாடல்களும் கட்டுரைகளும் சமூக வலைதளங்களில் அவரது பதிவேற்றல்களும் சான்று பகர்கின்றன.
எங்களது கட்சியில் இருந்து அவர் தூரமாக நேர்ந்த போதிலும் கூட, கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்றிருப்பவன் என்ற அடிப்படையில் சமூக அரசியல் சார்ந்த விடயங்களில் சர்ச்சைகளும், முரண்பாடுகளும் அவ்வப்போது தலை தூக்கும் போது உடனடியாகவே என்னை தொடர்பு கொண்டு அவை பற்றி உணர்வு பூர்வமாகவும், ஆக்கபூர்வமாகவும் கருத்துக்களை மனம் விட்டு பகிர்ந்து கொண்டதோடு உரிய ஆலோசனைகளையும் வழங்கி வந்திருக்கின்றார். சமூகம் சார்ந்த அனைத்து விடயங்களையும் நுணுக்கமாக அவதானித்தும் வந்திருக்கின்றார். கையசைவுகளோடு கூடிய அவரது கதையாடல்கள் அலாதியானவை. சமூக நலம் சார்ந்த பல்வேறு எதிர்பார்ப்புகளை சுமந்தவாறே இறைவனின் அழைப்பை ஏற்று எங்களை விட்டு பிரிந்து சென்றிருக்கின்றார்.
அடுத்ததாக இன்று முற்பகல் மாளிகாவத்தையில் நல்லடக்கம் செய்யப்பட்ட அல் ஹாபிழ், காரி அஸ்மி சாலி பற்றி நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அவரும் கூட சமூகம், சமயம் சார்ந்த ஈடுபாடுகளுடன், ஆரவாரம் இ;ன்றி அமைதியாக வாழ்ந்து நாம் சற்றும் எதிர் பார்த்திராத விதத்திலும், வேளையிலும் இவ்வுலக வாழ்வை நீத்திருக்கின்றார். இஸ்லாமிய தமிழுலகு நன்கறிந்த ஒலிபரப்பாளர், சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் முழு நேர தொழில் செய்தவாறே ஒலிபரப்பு துறையிலும் பிரகாசித்தவர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் அதிக ஈடுபாடு கொண்டிருந்தவர். கிரேண்டபாஸ் உள்ளடங்கலாக கொழும்பு மத்திய பிரதேசத்தில் கட்சி நடவடிக்கைகளில் கரிசனை காட்டி வந்தவர். தொழிலின் நிமித்தம் நேரடி அரசியலில் ஈடுபடாமல் மிகவும் அவதானமாக விருப்பு வெறுப்புக்களை பிரதபலித்தவர்.
2015ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அகில இலங்கை ரீதியில் நடாத்திய “அழகிய தொனியில் அல் குர்ஆன்” என்ற போட்டி நிகழ்ச்சி கொழும்பு தாமரை தடாக கேட்போர் கூடத்தில் வெளிநாட்டு, உள்நாட்டு காரிகளின் பங்குபற்றுதலுடன் சிறப்பாக நடந்;தேறிய போது நண்பர் ஹாபிழ் அஸ்மி சாலி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து தனது வழமையான காந்த குரல்வளத்தினால் அனைவரையும் கவர்ந்திருந்தார். பின்னர் சில காலம் வெளிநாட்டில் தொழில் புரிந்து நாடு திரும்பி இருந்தார்.
மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ_ல் அஃலா என்ற சுவன வாழ்வு கிட்டி அவர்கள் இருவரதும் மறுமை வாழ்வு சிறக்க எல்லாம் வல்ல அல்லாஹ்வை இறைஞ்சுகின்றேன்.
No comments