அட்டாளைச்சேனை பேரணி தொடர்பில் ஹரீஸ் எம்.பி விளக்கம்
நூருள் ஹுதா உமர்.
எமது நாட்டில் இப்போது எழுந்துள்ள விலைவாசி உயர்வுகள், மின்தடைகள், பொருட்களின் தட்டுப்பாடுகளுக்கு எதிராகவும், பொருளாதார நெருக்கடிகளுக்காகவும் நாட்டின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், கண்டனங்கள் எழுந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள பேரணி மக்களின் இன்னல்களை உரியவர்களுக்கும், அரசுக்கும் எடுத்துரைக்கும் முயற்சியாகும் என முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில் மேலும், இந்த பேரணிக்கு எதிராக 20க்கு ஆதரவு வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்படுவதாக அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலர் சமூக வலைத்தளங்களில் பரப்புரைகளை செய்து வருகிறார்கள். இது முற்றிலும் பொய்யான புனைகதைகள் என்பதை தெரிவித்து கொள்வதுடன் நாட்டில் இப்போது நிலவும் விலைவாசி உயர்வுகள், மின்தடைகள், நீண்ட வரிசை அவலங்கள், பொருட்களின் தட்டுப்பாடுகளுக்கு எதிராக நடக்கும் எல்லா வித எதிர்ப்பு நடவடிக்கைகளையும் அரசாங்கமும், அரச தலைவர்களும் பார்த்துக் கொண்டிருக்கையில் அதன் நியாயத்தன்மையை சகலரும் ஏற்றுக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் மக்களின் ஜனநாயக போராட்டத்தை யாரும் தடுப்பதற்கில்லை.
மக்களின் நியாமான ஜனநாயக போராட்டத்தின் எத்தனங்களே இவ்வாறான போராட்டங்களும், பேரணிகளும் என்பதை நாம் சகலரும் நன்றாக அறிவோம். முஸ்லிங்களுக்கு இக்காலகட்டத்தில் நிகழ்ந்த நெருக்கடியான சூழ்நிலையின் போது சிலவற்றுக்கு தீர்வை பெற்றுக்கொடுத்தும் மற்றும் சிலவற்றுக்கு உரிய அதிகாரிகளிடமும், அரச பிரதானிகளிடமும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றோம்.
மக்களின் பிரச்சினைகளை அரசுக்கும், உரியவர்களுக்கும் எடுத்துரைக்க நாளை அட்டாளைச்சேனையில் நடைபெற இருக்கும் பேரணியை ஏற்றுக்கொள்ளும் மன பக்குவம் நிறைத்தவர்களாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்களாகிய நாங்கள் இருக்கிறோம் என பொறுப்புடன் கூறி வைக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
No comments