கபூரிய்யாவின் நட்"பூ" ஒன்று உதிர்ந்தது..! - அஷ்ஷெய்க் ரசீத் பவாஸ் (கபூரி)
என் உயிர் நண்பன் அரூஸ்..!
1989ஆம் ஆண்டு கபூரிய்யா கலாசாலைக்குள் கனவுகள் பலதுடன் கால்பதித்தாய் நீ..!
1995இல் பட்டம் பெற்ற பன்னிரு ஆலிம்களின் ஒருவன் நீ..!
நம் பன்னிரு நட்புக்களில்
முதலாய் பேரிழப்பாய் உதிர்ந்த முதல் பூவும் நீ..!
உன் இறப்பின் துயரில் ஏனைய நட்"பூ"க்கள் எல்லாம் வாடியே நம் ஏழாண்டு கல்லூரியின் நினைவுகள் மீட்டுகின்றது..!
கல்லூரியில் நீ கழித்த நாட்கள் கண்முன்னே வந்து செல்கிறது ஆனாலும் கண்முன்னே நீ இன்றி..!
கலாசாலை வாழ்வில் தண்டனைக்குரிய குற்றம் ஏதும் நீ செய்ததே இல்லை..!
விடுதியில் மற்றவர்களை கலாய்க்கும் உன் குரலை கேட்கிறோம்
ஆனாலும் அங்கே உன்னை காண முடியவில்லையடா..!
மஸ்ஜிதில் நீ ஆடி ஆடி குர்ஆன் மனனம் செய்வதை மனக்கண்ணில் காண்கின்றோம் ஆனாலும் நிஜமாய் நீ அங்கேயும் இல்லையடா..!
வகுப்பறையில் நீ சகபாடிகளை பகடி செய்வதை நினைவுகளில் பார்க்கிறோம்
இப்போது அங்கேயும் உன்னை காணவில்லையடா..!
பரீட்சை வந்து விட்டால் பிலிங்கா மரத்தடியில் பாடம் மீட்டுவதை நினைவு கூறுகிறோம்
அங்கேயும் நீ இல்லையடா..!
மைதானத்தில் உன் சக வீரர்களை உற்சாகமூட்டும் சத்தம் கேட்கிறது அங்கே கூட நீ இல்லையடா...!
நூருல் ஹம்சா உஸ்தாத் அரீஸ் என்று உன்னை அழைக்கும் சத்தம் கேட்கிறது அதற்கு பதிலளிக்க அங்கேயும் உன்னை காணவே முடியலையடா..!
இப்படி ஒவ்வொன்றாய் உன் நினைவுகள் வதைக்கின்றது..!
உனக்காக எங்களால் என்னதான் செய்ய முடியுமோ புரியவே இல்லையடா..!
அன்பு நண்பா..!
நீ சுகயீனம் உற்ற செய்தி செவி வந்ததும் நம் உறவுகள் எல்லாம் உனக்காக இரு கரம்
ஏந்தினோம்..
எம் பிரார்த்தனைகள் இறைவனை சென்றடைய முன்
நீ இறைவனிடம் சென்று விட்டாய்..!
உன் மரணச் செய்தி செவிகளை வந்தடைந்தபோது இது பொய்யாக இருக்காதா என்றே பலரையும் தொடர்புகொண்டோம் இருப்பினும் இறுதியில் நீ ஏமாற்றம் தந்தாயடா தோழா..!
உன் மரணச் செய்தி வினவிய எம் உறவுகள் பலவற்றுக்கும் என் கண்ணீர் தான் பதிலளித்தது நண்பா..!
அன்பு நண்பன் அரூஸே..!
காலமெல்லாம் கால்கடுக்க நின்று கடமையாற்றியவனே..!
ஊருக்காய் சேவை செய்த சேவகனே..!
மார்க்கத்தின் காவலனே..!
உன்னால் எம் கபூரிய்யா பெருமை அடைகின்றது..!
உன் சேவைகளைக் கேட்க அதன் ஆணிவேரும் இல்லை.. (முபாரக் ஹஸரத்)
ஊரின் இருகண்களான
மஸ்ஜிதின் இமாமாக
பாடசாலையின் பணியாளராக
கனமூலையின் காவலர்களில் ஒருவனாய் நீ இருந்திருந்தாய் என்பது சந்தோசமான ஆறுதலாக இருக்கிறது..!
அரூஸ்..!
உன்னை புகழ்ந்து எழுதுமிந்த ஒருவொரு வரிகளின் முன்னும்
உன் பெற்றோரின் நல்ல வளர்ப்பை காண்கிறேன்..
உன் சகோதரர்கள் உன் மீது கொண்ட அன்பையும்,
உன் மனைவியின் தியாகத்தையும்,
பிள்ளைகளின் அர்ப்பணிப்பையும் காண்கிறேன்..!
உடல் சலித்தாலும் மனம் சலிக்காத மணமகனே..!
நீ அனைவருக்கும் இனியவன் என்பதை உன் பிரிவுத் துயரால் கண்ணீர் வடிப்போரை காணுகையில் உணருகிறேன்..!
பாடசாலை மாணவர்களுக்கு மார்க்கத்துடன் ஈடுபாட்டை கொடுத்தவனே..!
உன் உயர் பண்பால் இறை மார்க்கத்தை எம் ஊர் மனங்களில் பதிக்க வைத்தாய்..!
இம்மை வாழ்வில் நீ செய்த சேவைகள் அதிகமடா..!
இறையருளால் உன் மறுமை வாழ்வு நிச்சயம் செழிக்கும்
மகிழ்ந்திருப்பாய்..!
ஸாலிஹீன்கள், ஷுஹதாக்களோடு சுவன சுகந்தம் கொள்வாய்!
இன்ஷா அல்லாஹ்..!
رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا
அன்புடன் சகபாடி, Moulavi Rasheed Fawaz 1995 (ghafoori) Kanamoolai
Puttalam
05/09/2021

No comments