ஜனாஸா எரிப்பு விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் கார்த்தினலின் இரட்டை முகம் அம்பலம் !!
(சர்ஜுன் லாபீர்)
மரணித்த உடல்களை நல்லடக்கம் செய்யவேண்டும் என்பது இஸ்லாமிய, கத்தோலிக்க மக்களின் கட்டாய மார்க்க கடமையாகும். கொரோனா தொற்று ஏற்பட்ட பின்பு மரணித்த உடல்களை அடக்கம் செய்வதற்கு பதிலாக எரிப்பதற்கு அரசு தீர்மானித்த போது. பாராளுமன்றத்தில் உள்ள சகல முஸ்லிம் கட்சிகளின் எம்பிக்களும், தலைவர்களும், போர்க்கொடி தூக்கினார்கள். இதற்காக அரசின் உயர்மட்டத்தை சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தினர். உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்ய முயன்றனர். போதாக்குறைக்கு வெளிநாட்டு தூதுவர்கள் இராஜதந்திரிகளை சந்தித்து முறையிட்டார்கள்.
அதே நேரம் இதே மதக்கடமையை செய்யவேண்டிய இன்னுமொரு சமூகமான கிறிஸ்தவ, கத்தோலிக்க சமூகம் திட்டமிட்டே மௌனிக்க செய்யப்பட்டது. இலங்கையில் கத்தோலிக்க, கிறிஸ்தவ சமூகத்தில் இரண்டு குழுக்கள் இருக்கின்றது.
1. சிங்கள கிறிஸ்தவ சமூகம்
2. தமிழ் கிறிஸ்தவ சமூகம்
அதில் சிங்கள கிறிஸ்தவ சமூகத்தை வழிநடத்தும் பிரதானியாக கார்த்தினால் மால்கம் ரஞ்சித் ஆண்டகை இருக்கிறார். இந்த ஜனாஸா எரிப்பு விவகாரம் வந்தவுடன் சஹ்ரானின் குண்டுவெடிப்பு காரணத்தை கொண்டு முஸ்லிங்கள் மீது இருந்த கோபத்தை அவர் தனக்கு சாதகமாக பயன்படுத்தி "தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை முஸ்லிங்களுக்கு இரண்டு கண்களும் போக வேண்டும்" என்ற அடிப்படையில் ஜனாதிபதி கோத்தாபாயவை சந்தித்து கடும் நிபந்தனையாக அடக்க அனுமதிக்க கூடாது என்ற நிபந்தனையை முன்வைத்திருந்தது நாடறிந்த ரகசியமாக உள்ளது.
இதில் உள்ள முக்கிய விடயம் என்னவென்றால் வடக்கு, கிழக்கில் உள்ள லட்சக்கணக்கான தமிழ் கிறிஸ்தவ சமூகத்தை தலைமையேற்று வழிநடாத்தும் அவர்களின் பிரதிநிதியாக உள்ளவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர். இதன் பின்னணியில் உள்ள மர்மத்தை நாங்கள் ஆராய்ந்து தெளிவுபடுத்தவேண்டிய கடமை எமக்கு இருக்கிறது. ஏனென்றால் தமிழ் கிறிஸ்தவ சமூக அடிப்படை உரிமையை அரசு மறுத்த போது தமிழ் தேசிய கூட்டமைப்பு அதட்க்கு எதிராக போராடாமல் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காமல் வழக்குகள் கூட தாக்கல் செய்யாமல் மௌனமாக இருந்தது. இது ஏன் என்று புலனாய்வு செய்த போதே பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகின.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தரான சுமந்திரன் என அறியப்படும் மதியாபரணன் ஆபிரகாம் சுமந்திரன் ஒரு கிறிஸ்தவர். மற்றும் சாணக்கியன் 2015 இல் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டவர். அதனால் இவருக்கு இப்போதைய அரசுக்கும் நெருங்கிய உறவு இருக்கிறது. என்பதை எல்லோரும் அறிவர். இவர்கள் இருவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இருந்த நெருங்கிய உறவின் காரணமாகவே இந்த விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இறந்த உடல்களை நல்லடக்கம் செய்கின்ற விவகாரத்தில் வெளிப்படையாக எதையும் பேசாமல், போராடாமல் இவ்விவகாரத்தை லாபகரமாக அரசு கையாண்டு மௌனிக்க செய்யப்பட்டார்கள். இதற்கான பிரதியுபகாரமாக சுமந்திரனுக்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பும் வழங்கி வேறுபல சலுகைகளும் வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது. அண்மையில் கூட பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் முஸ்லிங்கள் உச்சநீதிமன்றில் தாக்கல் செய்திருந்த வழக்குக்கு சட்டத்தரணியாக ஆஜரானாரே தவிர அவரின் சமூகத்தின் சார்பில் எவ்வித வழக்கு தாக்கல்களையும் செய்ய முன்வரவில்லை. என்பதை நாம் இங்கு கூர்ந்து கவனிக்க வேண்டும்.
மேலும் பாராளுமன்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களாக உள்ள இரா. சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், போன்றோர் இந்த நாட்டில் வாழும் தமிழ் கிறிஸ்தவ கத்தோலிக்க மக்களின் இறுதி மதக்கடமையான உடல்களை நல்லடக்கம் செய்ய இந்த அரசு மறுக்கிறது. இந்த உரிமையை தமிழ் கிறிஸ்தவ கத்தோலிக்க மக்களுக்கும் மேலும் முஸ்லிங்களுக்கும் வழங்க வேண்டும் என போர்க்கொடி தூக்கவில்லை.
இறந்த உடல்களை எரிக்கும் விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுக்கு எதிராக முஸ்லிம் எம்.பிக்களை போன்று குரல் கொடுத்திருந்தால் அல்லது கடும் தொனியில் போராடியிருந்தால் அதனால் அரசுக்கு பாரிய நெருக்கடி ஏற்பட்டிருக்கும். ஏனென்றால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு சர்வதேச அரங்கில் பாரியளவிலான செல்வாக்கு இருக்கிறது. அதிலும் குறிப்பாக அண்மைய நாட்டின் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியிடம் செல்வாக்கு மிக்கவர்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இருக்கிறார்கள். எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பு இலங்கை வாழ் தமிழ் கிறிஸ்தவ சமூக உரிமை பறிக்கப்பட்டுள்ளது என ஸ்ரீ நரேந்திர மோடியின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தால் நரேந்திர மோடி இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தம் வழங்கியிருப்பார். இவைகளெல்லாம் நடக்காமல் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுக்கு மறைமுக உதவிகளை செய்கின்றது.
இந்த ரகசிய உறவின் வெளிப்பாடாக ஒரு கட்டத்தில் அரசினால் மரணித்த கொரோனா தொற்று உடல்களை மன்னாரில் நல்லடக்கம் செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்ட போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன் போன்றோர் அங்கு அடக்கம் செய்யக்கூடாது என எதிராக வலுவாக குரல்கொடுத்தனர். அதே நேரம் அரசுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இருக்கும் உறவுக்கு வெளிப்பாடாக 2021ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்ட வாக்கெடுப்பில் அரசை எதிர்க்காமல் விட்டதுடன் பாதுகாப்பு அமைச்சின் வாக்கெடுப்பிலும் டெலோவின் மூன்று எம்.பிக்கள் மாத்திரமே எதிர்த்து வாக்களித்தனர். தவிர ஏனையோர் ?
இலங்கை அரசியலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முஸ்லிங்களுக்கு எதிரான சிங்கள பேரினவாத கடும்போக்கு எதிர்ப்பு அரசியலில் முஸ்லிம் சமூகத்திற்கும் தெற்கு சிங்கள சமூகத்திற்கும் இடையில் கடும் விரிசல் வரவேண்டும் என்பவற்றை உள்ளீடாக விரும்புகிறது. இதனாலயே முஸ்லிங்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளுக்கு மௌனமாக இருந்து தமிழ் கூட்டமைப்பு அரசுக்கு ஆதரவு வழங்குகிறது. இதே நேரம் கிழக்கு பூகோள அரசியலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நீண்டகால தேவையாக இருந்துவரும் கல்முனை, வாழைச்சேனை, மூதூர், விவகாரங்களை நிறைவேற்றும் திட்டங்களை முஸ்லிம்- சிங்கள இடைவெளியில் குளிர்காய்ந்து சாதிக்க முயன்று வருகிறார்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்களான சார்ள்ஸ், சாணக்கியன் போன்றோர்கள் இரு வாரங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு பிரேரணையை கொண்டுவந்து கல்முனை பிரதேச செயலக விவகாரத்தில் காய் நகர்த்தி கல்முனை மாநகரை அபகரிக்க முயன்றதை நாமெல்லோரும் தெளிவாக திறந்தவெளியில் அறிந்துள்ளோம். அங்கு எமக்கு எதிராக செயற்பட்ட அதே சாணக்கியன் எம்.பி நேற்று பாராளுமன்றத்தில் முஸ்லிம் ஜனாஸா எரிப்புக்கு எதிராக குரல்கொடுக்கிறார். நாங்களும் அதற்காக அவரை பாராட்டுகிறோம். இருந்தாலும் இந்த சாணக்கியன் எம்.பி தான் பிரதிநித்தித்துவப்படுத்தும் தமிழ் கிறிஸ்தவ கத்தோலிக்க மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை எந்த இடத்திலும் பேசவில்லை. அதில் ஒரு சூழ்ச்சி இருப்பது தெளிவாக உணரமுடிகின்றது.
உண்மையில் முஸ்லிங்கள் போராடுவது போன்று அவர் தன்னுடைய கட்சிகாரர்களை போராடவைத்து கொரோனா தொற்றுக்கு இலக்கான உடல்களை அடக்கம் செய்ய இரு சமூகங்களையும் ஒன்றிணைத்து குரல்கொடுக்க முனைந்திருந்தால் இரு சமூகங்களும் இவ்விடயத்தில் வெற்றிபெற்றிருக்கும். எனவே தான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இரட்டை முகத்தையும், சந்தர்ப்பவாத காய் நகர்த்தல்களையும் முஸ்லிம் சமூகமும் எமது இளைஞர்களும், புத்திஜீவிகளும் பொதுமக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
No comments