ஏ.எல்.எம்.சலீம் பொது நிர்வாக சேவைகள் ஆணைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட உள்ளமை நமது சமூகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய அந்தஸ்த்தாகும் : முபாறக் அப்துல் மஜீத்.
நூருல் ஹுதா உமர்
முன்னாள் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் அவர்கள் அரசியலுக்கு வந்த போது அதனை நாம் கௌரவமாக வரவேற்றோம். படித்தவர்கள், சமூக சேவையில் ஆர்வம் உள்ளவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பதே எமது அரசியல் கொள்கையாகும். அந்த வகையில் ஏ.எல்.எம்.சலீம் அவர்களுக்கு பொது நிர்வாக சேவைகள் ஆணைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட ஜனாதிபதி அவர்கள் சிபாரிசு செய்துள்ளமை நமது சமூகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய அந்தஸ்த்தாகும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்தார்.
கிழக்கு பிராந்திய கலைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக செயற்பட்டு வரும் சாய்ந்தமருது மருதம் கலைக்கூடலின் உறுப்பினர்களுக்கு அலுவலக அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை இரவு மருதம் கலைக்கூடலின் சாய்ந்தமருது அலுவலகத்தில் அமைப்பின் தலைவர் கலைஞர் அஸ்வான் சக்காப் மௌலானாவின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்
ஏ.எல்.எம்.சலீம் அவர்களுக்கு பொது நிர்வாக சேவைகள் ஆணைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட ஜனாதிபதி அவர்கள் சிபாரிசு செய்துள்ளமை நமது மண்ணுக்கு மட்டுமல்ல முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுள்ளாவின் அரசியலுக்கும் கிடைத்த வெற்றியாகும். ஏ.எல்.எம்.சலீம் மூலம் கல்முனையும், அம்பாரை மாவட்டமும், முழு நாடும் நன்மை அடையும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
அடையாள அட்டை வழங்கும் இந்நிகழ்வுக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளரும், சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியுமான ஏ.எல்.எம். சலீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், கிழக்கு மாகாண தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப பேரவை உறுப்பினர் கலைஞர் யூ.எல்.என். ஹுதா, இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன ஒலிபரப்பாளர் ஏ.ஆர்.எம். நௌபீல், அமைப்பின் பிரதித்தலைவர் கலைஞர் என்.எம். அலிகான், அமைப்பின் செயலாளர் அறிவிப்பாளர் ஐ.ஜாபீர், உட்பட ஆலோசகர்கள், உயர்பீட உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் அமைப்பின் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் பிரதம அதிதியினால் வழங்கி வைக்கப்பட்டது.
No comments