Breaking News

சாய்ந்தமருதில் கொவிட்-19 விழிப்புக் குழுக்கள் உதயம்; அங்கத்தவர்களுக்கு விசேட அறிவுறுத்தல் கூட்டம்

(அஸ்லம் எஸ்.மௌலானா)


கொவிட்-19 தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு சாய்ந்தமருது பிரதேசத்தில் கிராமிய விழிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சாய்ந்தமருது பிரதேச மேற்பார்வை சுகாதாரப் பரிசோதகர் ஜே.எம்.நிஸ்தார் தெரிவித்தார்.

சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எல்.எம்.அஜ்வத் அவர்களின் ஆலோசனையின் பேரில் பொதுச் சுகாதார பரிசோதகர்களின் வழிகாட்டலில் இப்பிரதேசத்திலுள்ள ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலுமாக 17 கிராமிய விழிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு குழுவிலும் அவ்வப்பிரிவு கிராம சேவகர், சமுர்த்தி உத்தியோகத்தர், சிவில் பிரதிநிதிகள் உட்பட 10 பேர் அங்கத்துவம் வகிக்கின்றனர். சுகாதாரத்துறையின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொது மக்களின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொடுப்பதும் தனிமைப்படுத்தப்படுபவர்களின் செயற்பாடுகளுடன் தொடர்புடைய தகவல்களை சுகாதாரத்துறையினருக்கு வழங்குவதும் இக்குழுக்களின் பணியாகும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இவ்வாறு அமைக்கப்பட்ட கிராமியக் குழுக்களில் சாய்ந்தமருது 01ஆம் பிரிவு தொடக்கம் 06ஆம் வரையான அங்கத்தவர்களுக்கான விசேட அறிவுறுத்தல் கூட்டம் நேற்று மாலை வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது சுகாதார வைத்திய நிலையத்தில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எல்.எம்.அஜ்வத் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சுகாதாரப் பரிசோதகர்கள் உட்பட சுகாதாரத்துறை உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டு கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய அவசர செயற்பாடுகள் தொடர்பிலும் சுகாதார நடைமுறைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பது தொடர்பாகவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

இதன்போது இப்பிரதேச பொது மக்கள் மத்தியில் கொரோனா கட்டுப்பாடு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி, அவர்களது முழுமையான ஒத்துழைப்புக்களை பெறுவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டு, பல்வேறு ஆக்கபூர்வமான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள ஏனைய கிராமியக் குழுக்களின் அங்கத்தவர்களுக்கான அறிவுறுத்தல் கூட்டங்கள் அடுத்தடுத்த நாட்களில் நடத்தப்படும் என சாய்ந்தமருது பிரதேச மேற்பார்வை சுகாதாரப் பரிசோதகர் ஜே.எம்.நிஸ்தார் தெரிவித்தார்.











No comments

note