அல்-கொய்தாவும், தாலிபானும் எவ்வாறு உருவானது ? அமெரிக்காவுடன் ஒசாமாவுக்கு எப்படி முரண்பாடு ஏற்பட்டது ?
முப்பதாவது தொடர்............
ஆப்கானிஸ்தானில் ரஷ்ய படைகளுக்கு எதிராக போரிட்டவர்களை முஜாஹிதீன்கள் என்று பொதுவாக அழைக்கப்பட்டாலும், அந்தந்த பிராந்தியங்களை சேர்ந்த ஒவ்வொரு குழுக்களுக்கும் வெவ்வேறு பெயர்களும் தலைமைத்துவ நிருவாகமும் இருந்தது.
ரஷ்ய படைகள் ஆப்கானைவிட்டு வெளியேரும் வரைக்கும் ஒரே கொள்கையில் ரஷ்ய படைகளுக்கு எதிராக போரிட்டதனால் முஜாஹிதீன் குழுக்களுக்கிடையில் குறிப்பிட்டு கூறுமளவுக்கு எந்தவித சண்டைகளும் ஏற்பட்டதில்லை.
ரஷ்ய படைகளுடன் போரிட்டுக் கொண்டிருக்கும்போது ஒசாமா பின் லேடன் அவர்கள் “மக்தாப் அல்-கிதாமத்” என்னும் முஜாஹிதீன் இயக்கத்திலிருந்து செயல்பட்டு வந்தார்.
1988 இல் அவ்வியக்கத்தின் அப்துல் அசாமுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக “மக்தாப் அல்-கிதாமத்” இயக்கத்தைவிட்டு வெளியேறி “அல்-கொய்தா” என்னும் இயக்கத்தை உருவாக்கி தொடர்ந்து ரஷ்ய படைகளுக்கு எதிராக போரிட்டார்.
பெருமளவில் அனைத்து முஜாஹிதீன் குழுக்களும் ஒசாமா பின் லேடனின் தலைமைக்கு கட்டுப்பட்டனர். அத்துடன் அவரது வழிநடத்தல் மூலம் ரஷ்ய படைகளுக்கு எதிராக மேற்கொண்ட உக்கிர சண்டைகள் மூலம் ரஷ்ய படைகளை தோற்கடித்ததனால் ஒசாமா பின் லேடனுக்கு ஆப்கானிஸ்தானில் மட்டுமல்லாது சர்வதேசரீதியிலும் புகழ் கிடைத்தது.
அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரேகன் அவர்கள் ஒசாமாவை சந்திக்க ஆசைப்பட்டு அமெரிக்காவுக்கு அழைத்திருந்தார். ஆனால் ஒசாமா அதனை மறுத்திருந்தார். அவர் சந்தித்ததற்கான எந்தவித ஆதாரமும் இல்லை.
சோவியத் ரஷ்ய படைகள் வெளியேறிய பின்பு ஒசாமா பின் லேடன் அவர்கள் தனது தாய்நாடான சவூதி அரேபியாவுக்கு சென்றுவிட்டார். அதன்பின்பு முஜாஹிதீன் குழுக்களுக்கிடையில் தலைமைத்துவ போட்டியும், சண்டைகளும் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானின் கொமியுனிச சார்பு அரசினால் தொடர்ந்து ஆட்சியை கொண்டுசெல்ல முடியவில்லை.
1989 தொடக்கம் 1996 ஆம் ஆண்டு வரைக்கும் ஒரே நிருவாகத்தின்கீழ் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்கின்ற நிலையில் எந்தவொரு அரசும் இருக்கவில்லை.
இந்த சூழ்நிலையில்தான் ரஷ்ய படைகளுக்கு எதிராக போர் செய்த முஹாஜிதீன் குழுக்களில் ஒன்றான ஆப்கானின் பழங்குடி இனத்தை சேர்ந்த மிகவும் வலிமையான குழுவான “தலிபான்கள்” எழுட்சி அடைந்தார்கள்.
ஒசாமாவின் நெருங்கிய நண்பரான முல்லாஹ் ஓமர் தலைமையிலான தலிபான்கள் 1994 இல் ஆப்கானின் பல பிரதேசங்களை தங்களது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்ததுடன் 1996 இல் தலைநகரான காபூலை கைப்பேற்றி முழு ஆப்கானிஸ்தானையும் ஆட்சி செய்தார்கள்.
ரஷ்யாவுக்கு எதிராக போர்செய்த முஜாஹிதீன்களில் ஒன்றான “வடக்கு முன்னணி” என்னும் இயக்கம் ஆப்கானின் சில பிரதேசங்களை தங்களது கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருந்தனர்.
இருந்தாலும் தலைநகர் காபூல் தலிபான்களிடம் வீழ்ந்தபின்பு “வடக்கு முன்னணி” என்னும் இயக்கத்தினர் பலமிழந்தனர். 2001 இல் அமெரிக்கா தாலிபான்களுக்கு எதிராக போர் தொடுத்தபோது இந்த வடக்கு முன்னணி என்னும் அமைப்பினர்தான் அமெரிக்காவின் ஒற்றர்களாகவும், வழிகாட்டியாகவும் தலிபான்களுக்கு எதிராக செயல்பட்டார்கள்.
1990 இல் ஈராக்கிய படைகள் குவைத்தை ஆக்கிரமித்தபோது, குவைத்தை மீட்பதற்காகவும், சவுதி அரேபியாவை பாதுகாக்கவும் அமெரிக்கா தலைமையிலான நேச நாட்டு படைகளை சவூதி அரேபியாவின் அரச குடும்பத்தினர் அழைத்திருந்தனர். இதனை ஒசாமா பின் லேடன் அவர்கள் வன்மையாக கண்டித்தார்.
மக்கா, மதினா ஆகிய புனித தளங்கள் அமைந்துள்ள நாட்டை பாதுகாப்பதற்கு அந்நியர்களை அழைப்பது இஸ்லாத்துக்கு எதிரானது. இப்பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு முஸ்லிம் நாடுகளின் படைகளை மட்டும் அழைக்க முடியும் என்று சவூதி அரேபியாவின் தீர்மானத்துக்கு ஒசாமா அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஒசாமாவின் இந்த கருத்தினால் சவூதி அரச குடும்பத்துடன் முரண்பாடுகள் ஏற்பட்டதுடன், அமெரிக்காவுடன் பகைமை ஏற்பட்டது. “தான் வளர்த்த கடா தன்மார்பில் பாய்ந்ததாக” அமெரிக்கா கருதியது.
ரஷ்யாவுக்கு எதிரான போரில் அமெரிக்கா ஏராளமான உதவிகளை வாரி வழங்கியிருந்தும், அதன்மூலம் எந்தவித பிரதிபலனையும் ஒசாமாவிடமிருந்து அடையாத நிலையில் ஓர் அறிக்கையின் மூலம் ஒசாமா அமெரிக்காவின் எதிரியானார்.
அத்துடன் இந்த விவகாரத்தில் சவூதி அரச குடும்பத்துடன் ஏற்பட்ட முரண்பாட்டினால் ஒசாமா சவுதியைவிட்டு விரட்டப்பட்டார். இதனால் தனக்கு பாதுகாப்பான நாடாக கருதிய சூடானில் ஒசாமா பின் லேடன் தஞ்சமடைந்தார்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
தொடரும்..........
No comments