Breaking News

ஒட்டு மொத்த முஸ்லிம் மக்களையும் ஒன்றிணைத்து போராட்டம் நடாத்தி உயிரைக் கூட பணயம் வைக்க தயார் என்கின்றார் - சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ்

பொத்துவில் பிரதேசத்தில் அரசாங்கத்தின் அட்டகாசத்துற்கு எதிராக ஒட்டு மொத்த முஸ்லிம் மக்களையும் ஒன்றிணைத்து போராட்டம் நடாத்தி உயிரைக் கூட பணயம் வைக்க தயார் என்கின்றார் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ்.

அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் பிரதேசத்தில் தொல்பொருள் திணைக்களத்தின் ஊடாக அந்த பிரதேச மக்களின் காணிகளை அபகரிப்பதற்கான பாரிய முஸ்தீபுகள் கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகின்றன.

அரசின் உயர்மட்டத்தின் அதிகாரிகள் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் பொத்துவில் மக்களை துரத்தியடித்து விட்டு அவர்களின் நிலங்களை அபகரிப்பு செய்கின்ற முயற்சி கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகின்றன.இது சம்மந்தமாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடு இன்று(20) காலை 10.30மணிக்கு மாவடிப்பள்ளியில் அமைந்துள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் அவர்களின் காரியாலயத்தில் இடம்பெற்றது

இங்கு தொடர்ந்து ஊடகவியலாளர் மத்தியில் கருத்து தெரிவிவித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ்

அம்பாறை மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதியாக இருந்தவன் என்ற அடிப்படையில் இந்த அராஜக செயலை நானும் என்னுடைய கட்சியும்,மக்களும் ஏற்றுக்கொள்ள முடியாது

பல தசாப்த காலமாக மக்கள் அந்த இடத்தில் வீடுகளை கட்டி வசித்து வந்துள்ளனர்.அந்த மக்களை அவ்விடத்தில் இருந்து அகற்றிவிட்டு 72 ஏக்கர் காணிகளை நில அளவையாளர்களை கொண்டு அளந்து அபகரிப்பு செய்கின்ற முயற்சி கடந்த சில நாட்களாக நடைபெற்றுக்கொண்டு வருகின்றது.

இது சம்மந்தமாக பொத்துவில் பிரதேச செயலாளருடன் நான் பேசும்போது அவர் இந்த விடயம் தொடர்பாக தெளிவாக குறிப்பிட்டார்.அதாவது தன்னுடைய அனுமதி இன்றி மேல்மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்றும் இது பற்றி என்னுடைய நிலைப்பாட்டினை அரசாங்க மேல்மட்டத்திற்கு அறிவித்துள்ளேன் எனவும் பிரதேச செயலாளர் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட பொத்துவில் மக்களின் கருத்துக்களை கூட அதிகாரிகள் கேட்காமல் தன்னிச்சையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன இங்கு வந்து ஒரு தலைப்பட்சமாக அங்குள்ள விகாராதிபதியை சந்தித்த நிலையில் தொல்பொருளியல் சம்மந்தமான விடயத்திற்கு என்று ஒரு ஜனாதிபதி செயலணியை உருவாக்கி அந்த செயலணி குழு பொத்துவிலுக்கு சென்று அந்த மக்களின் பிரச்சினைகளை கேட்டறிவதற்கு முன்னர் இந்த நில அபகரிப்பு அராஜகம் நடந்தேறியுள்ளது.

நான் இந்த தொல்பொருளியல் சம்மந்தப்பட்ட ஜனாதிபதி செயலணி உறுப்பினர்களை கடந்த வாரம் கொழும்பில் அதன் அங்கத்தவர்களை சந்தித்து வேண்டுகோள் விடுத்தேன்.இந்த செயலணிக்குழு பொத்துவில் விவகாரமாக அந்த மக்கள் 20 பேர் கொண்ட சிவில் அமைப்பினை உருவாக்கி இருக்கின்றார்கள் அந்த சிவில் குழுவினை சந்திக்குமாறு நான் கோரிக்கை விடுத்து இருந்தேன்.அந்த மக்களின் நியாயங்களையும், சாட்சியங்களையும் கேட்டறிந்து கொள்ளுங்கள் என கோரிக்கை விடுத்து இருந்தேன் அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.இருந்தும் துரதிர்ஷ்டவசமாக நேற்று நில அளவை அதிகாரிகள் வந்து எல்லைகள் இடுகின்ற வேலைகளை செய்ய முற்பட்டனர்.

இதற்கு அங்குள்ள ஒரு மதகுரு அதிகாரத்தில் அரசாங்கத்தையும் அரச திணைக்களங்களையும் ஆட்டிப்படைத்து இந்த அராஜக நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றார்.இதனை நாங்கள் வன்மையாக கண்டிகின்றோம்.

அரச தொல்பொருள் திணைக்களம் என்பது ஒரு மதத்திற்கு உரிய திணைக்களம் அல்ல. மாறாக நாட்டில் உள்ள எல்லா மக்களுக்குமான பொதுவான ஒரு திணைக்களம். எனவே இந்த திணைக்களம் பக்கச்சார்பின்றி இயங்க வேண்டும் என்று மக்கள் எதிர்ப்பார்கின்றார்கள்.இது விடயமாக தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த பிரச்சினை பாரிய பிரச்சினையாக மாறிக்கொண்டு செல்கின்றது அதனை இங்குள்ள பிரதேச செயலக அதிகாரிகளாலயோ!
நில அளவை திணைக்கள அதிகாரிகளாலயோ! இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது மாறாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அதுபோல் ஜனாதிபதி செயலனி குழு உறுப்பினர்கள்,சிவில்மட்ட பிரதிநிதிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்துவதன் ஊடகமட்டுமே இந்த விடயத்திற்கு சுமுகமாக தீர்வு காண முடியும்.இதற்கான சந்தர்ப்பத்தினை வழங்குங்கள் ஏனென்றால் நிலைமை மோசமாக சென்று கொண்டு இருக்கின்றது என அவர்களுக்கு மிக கண்டிப்பான முறையில் கூறியிருக்கின்றேன்.
அதேநேரம் ஒரு சிலதினங்களில் இதற்கான நேரத்தினை ஒதுக்கி தருமாறும் கூறியிருக்கின்றேன்

அப்பிரதேச மக்கள் பல நூற்றாண்டு காலமாக பூர்வீகமாக அந்த பிரதேசத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். குறிப்பாக விடுதலை புலிகளின் யுத்த காலத்தில் கூட அந்த மக்களுக்கு பலவகையான அச்சுறுத்தல்கள் இருந்தன அந்த மக்கள் அங்குள்ள மதகுருவினை அந்த காலகட்டத்தில் காப்பாற்றியும் வந்துள்ளார்கள்

இந்த பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்காமல் ஒரு தலைபச்சமாக அரசாங்கம் அராஜக ரீதியில் இதற்கான தீர்வு எடுக்குமாக இருந்தால் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் இணைத்து அதற்கு துனையாக தமிழ் மக்களையும் இணைத்து பொத்துவில் மக்களுக்காக போரடுவதற்கு எங்கள் உயிரைக் கூட பணயம் செய்யத் தயாராக இருக்கின்றோம்.

இந்த காலகட்டத்தில் பொத்துவில் பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளின் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றார்கள். இது பொத்துவில் பிரதேசத்தில் நடக்கின்ற தேர்தல் விடயம் அல்ல. மாறாக இது பொத்துவில் மக்களின் வாழ்வுரிமை பிரச்சினை.

எனவே இதனை அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால், பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் சமூகம் என்ற ரீதியில் அனைத்து மக்களும் பொத்துவிலில் ஒன்று திரளவேண்டிய காலம் இது.இதற்காக வேண்டி எவ்வளவு பிரயத்தனங்கள் வேண்டுமானாலும் செய்து பொத்துவில் மக்களின் வாழ்வியல் உரிமையினை பாதுகாக்க எல்லோரும் முன்வர வேண்டும்.

மேலும் அந்த மக்களின் உரிமைக்காக சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்க்காக உச்சநீதிமன்றம் வரை படியேறுவதற்கு தயாராக இருக்கின்றோம் அதற்குரிய சகல செலவுகளையும் பாரம் எடுப்பதற்கு நான் தயாராக உள்ளேன்

இன்று கிழக்கு மாகாணத்தில் 40%கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வாழ்கின்ற சூழ்நிலையில் அவர்களின் அரசியல் இருப்பு,அவர்களின் பொருளாதாரம், கல்வி சார்ந்த விடயங்கள் ஸ்திரமாக இருக்கின்ற சூழ்நிலையில் அதனை மாற்றுவதற்கு இன்று வெளிநாட்டு சக்திகளுடன் கிழக்கு மாகாண மக்களின் இருப்பு ஸ்திரத்தன்மையை குழைப்பதத்குறிய ஒரு சதியாக நான் இதனை பார்க்கின்றேன்.

இதுமட்டுமன்றி திருகோணமலையில் புல்மோட்டை பகுதியில் அரிசிமலை பிரதேசம் அதுபோல் அம்பாறையில் தீகவாவி,அஸ்ரப் நகர்,குடிவில் போன்ற பிரதேசங்களில் இவ்வாறான நில அபகரிப்பு விடயங்கள் அரங்கேற்றம் செய்யப்பட்டுக்கொண்டு வருகின்றது. எனவே இந்த விடயத்தில் இந்த நாட்டின் ஜனாதிபதி, கெளரவ பிரதமர், சம்மந்தப்பட்ட அமைச்சர்கள் தலையிட்டு ஜனநாயக அடிப்படையில் எங்களுடைய மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி இதனை சுமுகமான முறையில் தீர்ப்பதற்கு முன்வர வேண்டும் எனவும் குறிப்பிட்டார்

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் ஏ.ஆர்.அமீர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



No comments