ரஷ்யாவை தாக்குவதற்கு ஆப்கானிஸ்தானில் வலைவிரித்த அமெரிக்காவும், ஆப்கான் மதபோதகர்களின் தீர்மானமும்.
இருபத்தி ஏழாவது தொடர்.........
ஒரு உறைக்குள் இரண்டு கத்திகள் இருக்க முடியாது என்பதுபோல் உலகத்துக்கு இரண்டு வல்லரசுகள் இருக்க முடியாது என்ற நிலை இரு பெரும் வல்லரசு நாடுகளான சோவியத் ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளிடம் காணப்பட்டது.
இரண்டாவது உலகமகா யுத்தத்துக்கு பின்பு ஒன்றையொன்று வீழ்த்துகின்ற வியூகத்திலேயே இரண்டு வல்லரசுகளுக்கிடையில் அதிஉச்ச பனிப்போர் நிலவியது. அமெரிக்க புலனாய்வாளர்கள் ரஷ்யாவில் கைது செய்யப்படுவதும், ரஷ்யாவின் புலனாய்வாளர்கள் அமெரிக்காவில் கைது செய்யப்படுவதும் அப்போதைய செய்திகளாகும்.
சோவியத் ரஷ்யாவின் இராணுவ, மற்றும் தொழில்நுற்பம் பற்றிய ரகசியங்களை அமெரிக்காவினால் பெற முடியாத பல துல்லியமான தகவல்களை இஸ்ரேலின் மொசாட் அமைப்பு அமெரிக்காவுக்கு வழங்கியிருக்கின்றது.
அன்றைய சோவியத் ரஸ்யா விண்வெளி ஆராய்ச்சியில் முன்னிலை வகித்ததுடன் அமெரிக்காவைவிட அதிகமான அணு குண்டுகளும், நவீன ஆயுதங்களும், அதிவேக யுத்த விமானங்களும், நீண்ட தூர ஏவுகணைகளும் ரஸ்யாவிடமே இருந்தது. இது அமெரிக்காவுக்கு தலைவலியை ஏற்படுத்தியது.
தன்னைவிட சக்திபடைத்த எவரும் இந்த உலகில் இருக்க கூடாது என்பது அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களின் நிலைப்பாடாகும். இதனால் சோவியத் ரஷ்யாவிடம் இருக்கும் அணுகுண்டுகளைவிட அதிகமான அணுகுண்டுகள் மற்றும் அதிநவீன இராணுவ சாதனங்கள் தயாரிப்பதில் அமெரிக்கா முழு கவனம் செலுத்தியது.
அமெரிக்காவுடனான வியட்னாம் யுத்தத்தில் வியட்னாமியர்களுக்கு சோவியத் ரஷ்யா உதவி வளங்கியதனாலேயே அமெரிக்கா தோல்வியடைந்தது. இதனால் சோவியத் ரஷ்யாவை பழி தீர்ப்பதற்கு அமெரிக்கா சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருந்தது.
தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு தடையாக இருக்கின்ற சோவியத் ரஷ்யாவுடன் நேரடி மோதலுக்கு தயாரில்லாத அமெரிக்கா, சூழ்சிகள் மூலம் சோவியத் ரஷ்யாவை பலயீனப்படுத்துவதற்கு பல சதித்திட்டங்களை மேற்கொண்டுவந்தது.
இந்த இரு பெரும் வல்லரசுகளுக்கிடையிலான ஆதிக்க போட்டியில் சோவியத் ரஷ்யாவை வீழ்த்துவதற்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடாக ஆப்கானிஸ்தானை அமெரிக்கா குறிவைத்தது.
அத்தோடு ஈரான் பல தசாப்தங்களாக அமெரிக்காவின் நேசநாடாக இருந்தது. ஆனால் அங்கு நடைபெற்ற இஸ்லாமிய புரட்சிக்கு பின்பு ஈரான் தனது எதிரி நாடாக மாறியதனால் மத்திய கிழக்கையும், ஆசியா கண்டத்தையும் இணைக்கும் முக்கிய கேந்திர நிலையமாகவும் ஆப்கானிஸ்தானை அமெரிக்கா கருதியது.
அமெரிக்காவுக்கு இஸ்ரேல் எவ்வாறு விசுவாசமான நாடாக உள்ளதோ, அதுபோலவே சோவியத் ரஷ்யாவுக்கு ஆப்கானிஸ்தான் இருந்தது. சோவியத் ரஷ்யாவின் மன்னர் ஆட்சி கவிழ்க்கப்பட்டு லெனினின் கொமியுனிச ஆட்சி நிறுவப்பட்டதும் அதனை முதன் முதலாக அங்கீகரித்த நாடும் ஆப்கானிஸ்தான் ஆகும்.
இதனால் சோவியத் ரஷ்யாவிடமிருந்து ஆப்கானிஸ்தானை பிரிக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் நீண்டகால திட்டமாகும்.
ஆப்கானிஸ்தானில் புரட்சிகள் ஏற்பட்டாலும், எவர் ஆட்சிக்கு வந்தாலும் எந்த சூழ்நிலையிலும் ஆட்சியாளர்கள் சோவியத் ரஷ்யாவின் விசுவாசியாகவே இருந்துவந்தனர்.
முகம்மது தாவூதின் ஆட்சிக் காலத்தில் ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய மத போதகர்கள் திடீரென வெளியிட்ட சில கருத்துக்கள் மக்கள் மனதில் பதிய ஆரம்பித்ததுடன் சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்தது.
அதாவது நாங்கள் நீண்டகாலமாக சோவியத் ரஷ்யாவுடன் நட்பு கொண்டிருப்பதுடன், அவர்களது உதவிகளையும் பெற்று வருகிறோம். இது இஸ்லாமிய மார்க்கத்துக்கு துரோகம் செய்வது போன்றதாகும். கொமியுனிச கொள்கையான இறைவன் ஒருவன் இல்லையென்ற இறை மறுப்பாளர்களான சோவியத் ரஷ்யாவுடன் நாங்கள் நட்பு கொண்டிருப்பது தவறு.
அதேநேரம் அமெரிக்கர்கள் இயேசு கிருஸ்துவை வணங்குபவர்கள். என்னதான் இருந்தாலும் இயேசு கிறிஸ்து என்பது எங்களது ஈசா நபியாகும். ஈசா நபியைத்தான் அவர்கள் இயேசு என்று வணங்குகின்றார்கள்.
இருந்தாலும் கிருஸ்தவர்கள் இறைவன் இருக்கின்றான் என்று நம்புகின்றார்கள். எனவே இறைவன் இல்லையென்று நம்புபவர்களைவிட, இறைவன் இருக்கின்றான் என்று நம்புகின்ற கொள்கையுடைய அமெரிக்காவுடன் நாங்கள் நட்புகொள்வதுதான் சிறந்தது என்பது ஆப்கானிஸ்தானிய இஸ்லாமிய மார்க்க போதகர்களின் கருத்தாக இருந்தது.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
தொடரும்...............
No comments