புத்தளத்தில் இடம்பெற்ற போதை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம் யூ.எம் சனூன்)
புத்தளம் நாஹூர் பள்ளிவாசல் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் புத்தளம் ஜம்மியத்துல் உலமாவின் நகரக் கிளை, பெரிய ஜூம்ஆ பள்ளிவாசல், மாநகர சபை ஆகிய முக்கூட்டு அமைப்பு இணைந்து புத்தளம் நாஹூர் ஜூம்ஆ பள்ளிவாசல் பகுதியில் வெள்ளிக்கிழமை(24) ஜூம்ஆ தொழுகையை தொடர்ந்து போதைக்கு எதிரான பாரிய மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் புத்தளம் மாநகர மேயர் ரின்ஷாட் அஹமட், மாநகர சபை உறுப்பினர்களான ரனீஸ் பதுருதீன் மற்றும் இப்லால் அமீன், ஜம்இயத்துல் உலமாவின் புத்தளம் நகரக் கிளை தலைவர் அஷ்ஷெய்க் ஜிப்னாஸ் , நாஹூர் ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் எம் எச் எம் ஹசீப் ஆகியோருடன் சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊர் மக்கள் என பெருந்திரளானோர் திரண்டு போதைக்கு எதிரான தமது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தினர்.
அரசின் போதையற்ற நாட்டை உருவாக்குவோம் எனும் வேலைத்திட்டத்திற்கு அமைவாகவும் புத்தளம் பொலிஸாரின் வழிகாட்டல்களுக்கு இணங்க மேற்படி போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனை என்பவற்றிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
புத்தளத்திலிருந்து போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை என்பவற்றை முற்றாக ஒழிக்கும் வரை இவ்வாறான எதிர்ப்பு ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் தொடர்ந்து நடைபெறும் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.







No comments