JobVibe.lk - Sri Lanka Job Portal

மாரவில நட்சத்திர சுற்றுலா ஹோட்டல் ஊழியர்களில் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழப்பு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

மாரவில – தல்வில  முகத்துவாரப் பகுதிக்கு அருகே கடலில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதோடு, மற்றொருவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தொடுவாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்த விபத்து திங்கட்கிழமை (23) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் வலிபென்ன, துனகதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய வர்ணகுலசூரிய ரமேஷ் தருக்க டில்ஷ திசேரா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


மேலும், அக்குரஸ்ஸ, லேனவ பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய விக்கிரமசிங்க மலே பத்திரனகே ஜீவக சமந்தா என்பவர் கடலில் இருந்து மீட்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


மாரவில – தல்வில பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வந்த இந்த மூன்று இளைஞர்களும், திங்கட்கிழமை (23) கடலில் நீராடச் சென்றுள்ளனர். அவர்கள் நீராடிக்கொண்டிருந்த போது, அவர்களில் இருவர் கடலில் ஏற்பட்ட பலமான நீரோட்டத்தில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.


இதனை அவதானித்த அப்பகுதி மக்கள் உடனடியாகச் செயல்பட்டு, விபத்தில் சிக்கிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், அங்கு சிகிச்சைப் பலனின்றி ஒரு இளைஞர் உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்த இளைஞனின் சடலம் மீதான மரணப் பரிசோதனை நடைபெறவுள்ளது. இச்சம்பவம் குறித்துத் தொடுவாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال