அமெரிக்கா – ரஷ்யா மோதல் ஏற்புமா ? இதுவரையில் ஏன் இவர்கள் யுத்தம் செய்யவில்லை ?
ரஷ்யாவின் எண்ணைக் கப்பலை அமெரிக்க படையினர் கைப்பற்றி போர் பதட்டம் ஏற்பட்டதன் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையில் நேரடி மோதல் ஏற்படுமா ? ஏன் இதுவரையில் இரு நாடுகளும் நேரடியாக மோதவில்லை ? என்று ஆராய்வதுதான் இந்த கட்டுரையின் நோக்கமாகும்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு உருவான அமெரிக்கா, சோவியத் யூனியன் (ரஷ்யா) ஆகிய இரு வல்லரசுகளும் உலக அரசியலை பல தசாப்தங்கள் ஆட்டிப்படைத்தன.
இந்தக் காலப்பகுதி “பனிப்போர்” (Cold War) என அழைக்கப்படுகிறது. வியட்நாம், கொரியா, ஆப்கானிஸ்தான், மத்திய கிழக்கு, உக்ரைன் போன்ற பகுதிகளில் இரு தரப்புகளும் மறைமுக யுத்தங்களில் ஈடுபட்ட போதும், நேரடி அமெரிக்க – ரஷ்ய போர் ஏற்படவில்லை.
அமெரிக்கா – ரஷ்யா நேரடி யுத்தம் நிகழாமல் தடுக்கப்பட்ட முக்கிய காரணம் MAD (Mutually Assured Destruction) கொள்கை ஆகும்.
1950களில் உருவான இந்தக் கொள்கையானது “”இரு தரப்பும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால், இரண்டும் முழுமையாக அழியும். வெற்றியாளன் எவருமில்லை.”” என்பதாகும்.
இது இராணுவ, அரசியல் முடிவில் ஆழமாக வேரூன்றிய நடைமுறைத் தடுப்பு கொள்கையாகும். இதன் காரணமாக நேரடி யுத்தம் என்பது தற்கொலைக்கு ஒப்பானதாக இரு தரப்பும் கருதியது.
இரு வல்லரசுகளுக்கும் இடையிலான முக்கிய ஒப்பந்தங்களும், உடன்படிக்கைகளும்.
1. Hotline Agreement (1963): கியூபா ஏவுகணை நெருக்கடியின் பின்பு உருவான இந்த ஒப்பந்தம், அவசர சூழலில் வாஷிங்டன் – மொஸ்கோ இடையே நேரடி தொடர்பை ஏற்படுத்தியது. தவறான புரிதலால் யுத்தம் ஏறபடாமல் தடுப்பதே இதன் நோக்கமாகும்.
2. 1968 இல் அணு ஆயுதப் பரவலை கட்டுப்படுத்தும் உலகளாவிய ஒப்பந்தம்.
3. 1972 இல் நீண்ட தூர அணு ஏவுகணைகளின் எண்ணிக்கைக்கு வரம்பு விதித்த முதல் Arms Control ஒப்பந்தம்.
5. 1972 இல் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை கட்டுப்படுத்தி MAD சமநிலையை பாதுகாக்கும் ஒப்பந்தம்.
5. 1987 இல் நடுத்தர அணு ஏவுகணைகளை முழுமையாக தடை செய்த வரலாற்று முக்கியத்துவ ஒப்பந்தம்.
6. 2010 அணு ஆயுத எண்ணிக்கையை குறைக்கும் ஒப்பந்தம்.
இதில் சில ஒப்பந்தங்கள் காலாவதியானது. சிலதிலிருந்து அமெரிக்கா விலகியது.
அமெரிக்கா – ரஷ்யா இடையே யுத்தம் நடைபெறாததற்கு ஒப்பந்தங்கள் மட்டும் காரணமல்ல.
MAD (Mutually Assured Destruction) கொள்கை, அணு ஆயுத சமநிலை, Arms Control ஒப்பந்தங்கள், உலகளாவிய அரசியல், பொருளாதார விளைவுகள் குறித்த அச்சம் ஆகிய அனைத்தும் இணைந்து, நேரடி யுத்தத்தைத் தடுத்துள்ளன.
கடந்த காலங்களில் இவ்விரு வல்லரசுகளின் ஆட்சித் தலைவர்கள் தங்களுக்குள் புரிந்துணர்வுடன் மிகவும் நிதானமாக நடந்துகொண்டனர். ஆனால் இன்றைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிதானம் இழந்தவராக காணப்படுகின்றார்.
எனவேதான் இரு நாடுகளுக்கும் இடையில் போர் மூளாமல் இருப்பதானது ட்ரம்ப்பின் நடவடிக்கையிலேயே தங்கியுள்ளது.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

No comments