Breaking News

பேரனர்த்தத்தில் மலர்ந்த மனிதாபிமானம்: கண்டி மாவட்ட மீட்புப் பணியில் ரவூப் ஹக்கீமின் அர்ப்பணிப்பு

இயற்கைப் பேரிடர்கள் மனித வாழ்க்கையை ஒரு கணப்பொழுதில் புரட்டிப் போட்டுவிடுகின்றன. ஆசை ஆசையாய்க் கட்டிய வீடுகள், வியர்வை சிந்திச் சேர்த்த உடைமைகள் என அனைத்தும் கண்முன்னே அழிவதைக் கண்டு மக்கள் செய்வதறியாது திகைத்து நிற்கும் சூழலில், அவர்களுக்குத் தேவைப்படுவது வெறும் ஆறுதல் வார்த்தைகள் அல்ல; ஆழமான அர்ப்பணிப்புடன் கூடிய செயல்களே ஆகும்.


அந்த வகையில், அண்மையில் ஏற்பட்ட 'டித்வா' சூறாவளி காரணமாகப் பெய்த கடும் மழையினால் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களுக்கு உள்ளான கண்டி மாவட்டத்தின் கம்பளை, ஹெலிஓயா, கலுகமுவ, புதிய எல்பிட்டி, பழைய எல்பிட்டி, இல்லவத்துறை, சாலிஎல, தேவராஜ் மாவத்தை, நாவலப்பிட்டி மற்றும் கல்ஹின்னை போன்ற பல பிரதேச மக்களுக்கு, ஓர் உண்மையான மக்கள் பிரதிநிதியாக நின்று கரம் கொடுத்தார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம். இப்பணிகள் யாவும் அரசியலை முன்னிறுத்திச் செய்யப்பட்டவை அல்ல; மாறாக, தன் மக்கள் மீது அவர் கொண்டுள்ள மாறாத நேசத்தின் வெளிப்பாடாகும்.


அனர்த்தம் நிகழ்ந்த செய்தி அறிந்தவுடன் கொழும்பிலிருந்து விரைந்த அவர், போக்குவரத்துத் தடைகளையும் பொருட்படுத்தாது பல மணிநேர ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு களத்திற்கு வந்தார். கம்பளை, ஹெலிஓயா, கலுகமுவ உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிக் கிடந்த குப்பைகளும், அவற்றிலிருந்து வீசிய கடும் துர்நாற்றமும் மக்களின் சுகாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்தன. இதனை உணர்ந்த அவர், தனது கட்சியின் வளங்களையும், தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல். அதாவுல்லாஹ், மட்டக்களப்பு பாராளுமன்ற  உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நளீம் ஆகியோரின் ஒத்துழைப்பையும் பெற்று, அக்கரைப்பற்று மாநகர சபை,பிரதேச சபை, அட்டாளைச்சேனை பிரதேச சபை, இறக்காமம் பிரதேச சபை, காத்தான்குடி நகர சபை, ஏறாவூர் நகர சபை ஆகிய உள்ளூராட்சி மன்ற தலைவர்களினூடாக கனரக வாகனங்களையும் ஆளணிகளையும் வரவழைத்தார்.


கம்பளை நகரம், ஹெலிஓயா, கலுகமுவ, பழைய எல்பிட்டிய போன்ற பல பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணிகளில் ரவூப் ஹக்கீம் நேரடியாகவே களத்தில் இறங்கினார். உள்ளூராட்சி மன்றங்களிடம் போதிய வசதிகள் இல்லாத நிலையில், தனது சொந்த நிதி மற்றும் கட்சித் தொண்டர்களின் பங்களிப்புடன் ஜே.சி.பி (JCB) இயந்திரங்கள் மற்றும் டிப்பர் வாகனங்களை வாடகைக்கு அமர்த்திச் சுத்திகரிப்புப் பணிகளைத் துரிதப்படுத்தினார்.


குறிப்பாக தேவராஜ் மாவத்தை, கலுகமுவ, இல்லவத்துறை மற்றும் பழைய எல்பிட்டி போன்ற பல இடங்களில் சேறும் சகதியுமாக இருந்த வீடுகளை சுத்தம் செய்து, வீதிகளைச் சீர்செய்து, மக்களின் இயல்பு வாழ்க்கையை மீளமைக்க முன்னின்று உழைத்தார்.இப்பணியில் பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் ஆகியோரும் இணைந்து கொண்டனர்.


அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட, வரலாற்றில் முன்னெப்பொழுதும் இல்லாதவாறான நிவாரணத் தொகைகளைப் பாதிக்கப்பட்ட மக்கள் பெற்றுக்கொள்வதற்கான உரிய ஆலோசனைகளை ரவூப் ஹக்கீம் வழங்கியதை காணமுடிந்தது. பாதிக்கப்பட்ட பிரதேசங்களைப் பார்வையிட்டதுடன், நிவாரண மையங்களில் பணியாற்றியவர்களுடன் கலந்துரையாடித் தனது சொந்த நிதியுதவியையும் வழங்கினார்.


மேலும், சேதங்களை முறையாக ஆவணப்படுத்துவது குறித்தும், அவற்றை உரிய முறையில் பதிவு செய்வதற்கான வழிமுறைகள் குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டினார். இவ்வாறு எல்லா வழிகளிலும் தன்னால் முடிந்த அத்தனை ஒத்துழைப்பையும் அவர் வழங்கினார்.


கல்வித்துறையில் அனர்த்தம் ஏற்படுத்திய பாதிப்புகளைக் கண்டறிய அவர் நேரடியாகப் பாடசாலைகளுக்குச் சென்றார். கம்பளை சாஹிரா கல்லூரி, ஆண்டியாகடவத்தை அல்-ஹிக்மா மகா வித்தியாலயம், மரியாவத்தை முஸ்லிம் வித்தியாலயம் மற்றும் ரஹ்மானியா வித்தியாலயம் ஆகியவற்றின் சேத விபரங்களை நேரில் ஆய்வு செய்தார்.


இதில் ஆண்டியாகடவத்தை பாடசாலையின் அபாயகரமான நிலையை உணர்ந்த அவர், உடனடியாகப் பிரதமர் மற்றும் கல்வி அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்று, தேசிய கட்டிட ஆய்வு நிறுவனத்தின் (NBRO) அறிக்கையைப் பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மேலும், மண்சரிவில் 11 பேர் உயிரிழந்த கல்கொட்டுவை பகுதிக்கும், 11 வயது மாணவன் உயிரிழந்த படகொல்லாதெனிய ஜமாலியா முஸ்லிம் வித்தியாலயப் பகுதிக்கும் சென்று பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தில் பங்கெடுத்தார்.


அனர்த்தச் சூழலில் அரசாங்கத்தைக் குறைகூறிக் கொண்டிருக்காமல், அவர்களது செயல்பாடுகளுக்குத் தேவையான ஒத்துழைப்பையும் ஆலோசனைகளையும் வழங்கினார். நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்கக் கண்டி அலுவலகத்தில் அவசரக் கூட்டங்களை நடத்தியதுடன், மத்திய மாகாண ஆளுநர் மற்றும் அரசு அதிகாரிகளுடனான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களிலும் காத்திரமான பங்களிப்பை வழங்கினார். நாவலப்பிட்டிக்குச் செல்வதற்கான மாற்றுப் பாதை மற்றும் கொத்மலை அணைக்கட்டு தொடர்பான தொழில்நுட்ப ஆலோசனைகளை அவர் முன்வைத்தமை அவரது தொலைநோக்குப் பார்வையை உணர்த்தியது. இரவு பகல் பாராது களத்தில் நின்று, துர்நாற்றத்திற்கு மத்தியிலும் மக்களின் வீடுகளைச் சுத்தம் செய்யத் தூண்டுகோலாக இருந்த ரவூப் ஹக்கீமின் இந்தச் செயல்பாடுகள், அதிகாரப் போட்டிகளுக்கு அப்பால் ஒரு மக்கள் தலைவன் தன் மக்களுக்குச் செய்ய வேண்டிய உன்னதமான சேவையாக ரவூப் ஹக்கீமை எதிர்த்து கடந்த காலங்களில் ஊடக ரீதியாக விமர்சனங்களை முன்வைத்தவர்களும் நேரடியாக களப்பணியை கண்டு பாராட்டியதை காணமுடிந்தது. பெரும்பாலும் எல்லோராலும் அவ்வாறே பார்க்கப்பட்டது. இவ்வாறான பணியில் கண்டி மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்கள்,உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்,முன்னாள் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலரும் ரவூப் ஹக்கீமோடு இணைந்து செயற்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


(விருட்சவேந்தன்)


நன்றி:"தமிழன்" வாரவெளியீடு.











No comments