மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் குடும்பத்துடன் ஒன்று கூடிய கல்முனை சாஹிரா தேசிய கல்லூரி விடுதி பழைய மாணவர்கள்
நூருல் ஹுதா உமர், யூ.கே. காலித்தீன்
கல்முனை சாஹிரா தேசிய கல்லூரியில் 1985ஆம் ஆண்டிலிருந்து நாட்டின் பல பகுதிகளிலிருந்து வருகை தந்து விடுதியில் தங்கி கல்வி கற்ற பழைய மாணவர்களின் ஒன்றுகூடல், பாசிக்குடா நாசிவன் தீவின் கேவ் ரிசோட் வளாகத்தில் விமர்சையாக நடைபெற்றது.
இந்த நிகழ்வு, கேவ் ரிசோட் விடுதியின் சிரேஷ்ட மாணவர்களில் ஒருவரான எம்.எம். நவாஸ் ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது. பல வருட இடைவெளிக்குப் பின்னர் உயர் பதவிகளிலும், பல்வேறு துறைகளிலும் பணியாற்றும் பழைய மாணவர்கள் தமது குடும்பங்களுடன் கலந்துகொண்ட இந்த ஒன்றுகூடல், அனைவருக்கும் மறக்க முடியாத இனிய நினைவாக அமைந்தது.
இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வை நனவாக்குவதற்கான பிரதான முயற்சிகளை, லண்டனில் வசிக்கும் 1993 ஆம் ஆண்டு சாதாரண தர பழைய விடுதி மாணவரான அக்கரைப்பற்று ஏ.எல்.எம். சமீம் மேற்கொண்டிருந்தார். அவருடன் காத்தான்குடி என்.எல்.எம். இம்ரான், ஜே.எம். பைரூஸ், வரப்பத்தான்சேனை ஏ.எல்.எம். அஸ்ரப், ஓட்டமாவடி எம்.எம். நவாஸ், அஹமட் இர்ஷாட், ஏ.எல்.எம். நெளபர், யூ.கே. காலித்தீன், ஜே. மிப்தாவுடீன், எம்.எஸ்.எம். இக்றாம் உள்ளிட்டோரின் ஒத்துழைப்பும், பழைய மாணவர்களின் நிதிப் பங்களிப்புகளும் முக்கிய பங்காற்றின.
நிகழ்வு இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. முதற்கட்டமாக சுய அறிமுகங்களும், கடந்த கால விடுதி நினைவுகளை பகிரும் அமர்வும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மாணவர்களும் அவர்களது பிள்ளைகளும் பங்குபற்றிய ஆடல், பாடல் உள்ளிட்ட பல்வேறு சுவாரசியமான கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.
மேலும், விடுதி மாணவர்களை வழிநடத்திய முன்னாள் விடுதி ஆசிரியர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா, முன்னாள் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம். சலிம், பேராசிரியர் ஏ.ஆர்.எம். அன்ஸார், ஓய்வுபெற்ற ஆசிரியர் என்.எம்.எம். அன்வர் ஆகியோர் கலந்து கொண்டு தமது நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.
நிகழ்வின் போது பழைய விடுதி மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டதுடன், விடுதி ஆசிரியர்கள் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.
இரண்டாம் கட்ட நிகழ்வாக 2026/2017ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது. அதன்படி, தலைவராக எம்.எம். நவாஸ், செயலாளராக ஏ.எல்.எம். நெளபர், பொருளாளராக என்.எல்.எம். இம்ரான், பிரதித் தலைவராக யூ.கே. காலித்தீன், பிரதி செயலாளராக எம்.எஸ்.எம். இக்றாம், பிரதி பொருளாளராக ஜே.எம். பைரூஸ் உள்ளிட்ட புதிய நிர்வாக சபை ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டது.
இந்த ஒன்றுகூடல், பழைய நினைவுகளை மீட்டெடுத்ததோடு, எதிர்கால தலைமுறைகளுக்கான உறவுப் பாலமாகவும் அமைந்தது.





No comments